பிரதமர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று பிரதமர் அலுவலகம் எதிரே திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Image caption பிரதமர் அலுவலகம் எதிரே ஆடையின்றி சாலையில் உருண்டு போராட்டம்

விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 28 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிதியமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களை அவர்கள் சந்தித்த போதும், பிரதமர் நரேந்திர மோதி, தங்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லி சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

இந் நிலையில், அவர்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்திருந்தபடி, போலீசார் அவர்களை இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 7 விவசாயிகள் போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாடாளுமன்றத்தை அடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகை அருகே உள்ள செளத் பிளாக் கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், வரவேற்பறையில் உள்ள அதிகாரிகளிடம், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Image caption பிரதமர் அலுவலகம் எதிரே

ஆனால், பிரதமரை நேரில் சந்தித்து மனுக்கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், அது சாத்தியமில்லை என அதிகாரிகள் கூறியதால் வேறுவழியின்றி அதிகாரிகளிடம் மனுவை சமர்ப்பித்தனர்.

பின்னர் காவல் துறை வாகனத்தில் ஏறி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், வாகனத்தில் இருந்த விவசாயி ஒருவர் வெளியே குதித்தார். வாகனம் நிறுத்தப்பட்டவுடன், மேலும் சில விவசாயிகளும் கீழே இறங்கி, தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் உருண்டு முழக்கமிட்டார்கள். பின்னர் போலீசார் அவர்களைப் பிடித்து மீண்டும் வாகனத்தில் ஏற்றி, ஜந்தர் மந்தர் பகுதிக்குக் கொண்டு வந்தார்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், எதிரே நார்த் பிளாக்கில் நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அமைந்துள்ள முக்கியப் பகுதி என்பதால், இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்