மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து கடையடைப்பு

தமிழ்நாட்டின் திருப்பூர் - கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சாமளாபுரத்தில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமையன்று நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை கடுமையாகத் தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியில் இன்று முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

திருப்பூரில் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளிலும் அவற்றிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் சாலையோரம் அமைந்திருந்த மூன்று மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக அங்குள்ள அய்யன் கோயில் செல்லும் சாலையில் புதிதாக ஒரு மதுபானக் கடையைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை மதுபானக் கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிர்வாகம் செய்துவந்தது.

இதனை எதிர்த்து செவ்வாய்க்கிழமையன்று காலையில் காரணம்பேட்டை - கருமத்தம்பட்டி சாலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அங்கு வந்த சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சென்ற பிறகு, போராட்டக்காரர்களைக் கலைந்துசெல்லும்படி அங்கு பாதுகாப்பிற்கு இருந்த மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் வலியுறுத்தினர்.

ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரி என்ற பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கண்ணத்தில் அறைந்தார். சிவகணேஷ் என்பவருக்கு தடியடியில் மண்டை உடைந்தது. இந்தக் காட்சிகள் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாயின. பத்திரிகையாளர்கள் சிலரும் தாக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு, பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமனக் கோரி, 50க்கும் மேற்பட்டவர்கள் சாமளாபுரத்தில் உள்ள கோயில் ஒன்றின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தனர். இவர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் முழு கடையடைப்புப் போராட்டத்தை இன்று நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில், காவல்துறையினர் தாக்கியதால் தனக்கு காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட ஈஸ்வரி ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு, தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான இந்திய தேசிய மாதர் சம்மேளனம், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மதுபானக் கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

நேற்று சாமளாபுரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே. பாலு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்