தமிழக அரசை கலைக்கக் கோரி ஆளுநரிடம் திமுக மனு

தமிழக அரசை கலைக்கக் கோரி ஆளுநரிடம் திமுக மனு

பட மூலாதாரம், Twitter

வாக்காளர்களுக்கு பெருமளவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக பிரதிநிதிகள் இன்று மனுக்கொடுத்தனர்.

மகாராஷ்டிரா ஆளுநரான வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்த காரணத்தால், திமுகவின் துணைப் பொதுச் செயலர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் மும்பை சென்று ஆளுநரிடம் மனுக்கொடுத்தார்கள்.

இதுதொடர்பாக, துரைமுருகனிடம் கேட்டபோது, "ஆர்.கே. நகர் தேர்தலில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக வருமான வரித்துறை சோதனை நடத்தி, அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கும் கொடுத்திருக்கிறது. அமைச்சர் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தி 4.5 கோடி ரூபாய் வரை பணமும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது" என்று சுட்டிக்காட்டினார்.

"மேலும், எந்தெந்த வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், அதற்காக அமைச்சர்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுவும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது" என்பதையும் ஆளுரிடம் எடுத்துரைத்தோம் என்றார் அவர்.

"ஓர் அரசாங்கமே முதலமைச்சர் தலைமையில் பணப்பட்டுவாடா செய்திருக்கிறது. எனவே, இப்படிப்பட்ட ஊழல் மிகுந்தவர்கள் அரசியலில் இருக்கலாமா என்ற கேள்வியின் அடிப்படையில், இந்த அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம். மேலும், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருக்கிறோம்".

"எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஆளுநர், அடுத்த ஓரிரு நாளில் சென்னை வருவதாகக் கூறியிருக்கிறார். அங்கு வந்து ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்திருக்கிறார்" என்றார் துரைமுருகன்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக, நீதிமன்றத்தை நாட திமுக திட்டமிட்டுள்ளதா என்று கேட்டபோது, அதற்கும் ஆளுநரின் ஒப்புதல் தேவை என்றும், அடுத்தகட்டமாக அந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்