குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியைப் போல ஏராளமான குழந்தைகள்: யார் காரணம், தீர்வு என்ன?
குரங்குகளுடன் வாழ்ந்து வந்த சிறுமி, உத்தரப் பிரதேச வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டார் என்ற செய்திகள் வந்த நிலையில், அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும், அது அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட என்ன காரணம், அந்தச் சிறுமியின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று பல கேள்விகள் எழுகின்றன.

பட மூலாதாரம், AZEEM MIRZA
குரங்குகளுடன் வாழ்ந்ததாகக் கூறப்படும் சிறுமி
அதுதொடர்பாக, நீண்ட காலமாக குழந்தைகள் நல பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள சென்னையை மையமாகக் கொண்ட தோழமை அமைப்பைச் சேர்ந்த அ. தேவநேயன், பிபிசி தமிழுடன் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் விவரங்களைப் பார்க்கலாம்.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு என்ன நடக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. ஒரு சிறுமி வனப்பகுதியில் குரங்குகளுடன் வாழ்ந்தார் என்ற செய்தியைப் பார்க்கும்போது, அவரும் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல்தான் குரங்குகளுடன் இருந்திருக்கக் கூடும்.
மனநலம் பாதிக்கப்பட்டோர் விடயங்களில் பொதுச் சமூகம் என்ன மாதிரியான தவறு செய்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அந்த சிறுமிக்கு ஏர்பட்ட கதியும் அந்தத் தவறின் எடுத்துக்காட்டுதான்.
நமது வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை, பெரியோர் இருந்தால், ஆள் ஆரவம் இல்லாத அல்லது அதிகமானோர் இருக்கும் இடத்தில் விட்டுவிடுவார்கள், உதாரணமாக, ராமேஸ்வரம், ஊட்டி, நாகூர், ஏர்வாடி போன்ற பகுதிகளில் விட்டுவிடுவார்கள்.
பொதுவாக, ராமேஸ்வரம், ஏர்வாடி போன்ற இடங்களில் கடைசி காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் விட்டால் மோட்சத்துக்கு செல்வார்கள் அல்லது குணமடைந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.
என்ன மாதிரியான சூழ்நிலையில்
தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்கள். சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண், என் குழந்தையைக் கொல்லுங்கள் என்று மனுக்கொடுத்தார். தன் குழந்தை, பார்ப்பவர்களை எல்லாம் அடிக்கிறான், என்னையும் அடித்து சித்ரவதை செய்கிறான் என்று தாயே கோபப்பட்டார்.. கோவையில் ஒரு பெண், குழந்தையை ஆட்சியரிடம் கொண்டு சென்று என் குழந்தையை மாவட்ட நிர்வாகமே வளர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுச் செல்ல முயன்றார்.
பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA
கத்ரீனாத் வனவிலங்கு சரணாலய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி
அதிகபட்சம் மனம் வெறுத்துதப் போய்தான் இதுபோன்று குழந்தைகள் அல்லது முதியோரை கொண்டு வந்து விடுகிறார்கள். இதற்கு தீர்வு உண்டு என்ற அழுத்தத்தை பொதுத்தளத்தில் நாம் உருவாக்காமல் விட்டுவிட்டோம். குணப்படுத்த முடியும் என்ற கருத்தை ஆழமாகப் பதியவைக்கவில்லை.
நிறுவனமயமாக்கப்பட்ட மனநல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் பெற்றோரின் அரவணைப்பு தேவை. குழந்தை சிகிச்சை பெறுவது மட்டுமன்றி, பெற்றோரும் அங்கு பயிற்சி பெற வேண்டும் என்ற முக்கியமான கருத்தை பலர் ஏற்பதில்லை. இன்னொரு பக்கம், குணமானவர்களைக் கூட குடும்பத்தினர் அழைத்துச் செல்வதில்லை. சென்னையில் கூட அப்படி பலர், மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள்.
குரங்குடன் இருந்த குழந்தையின் மனநிலை எப்படி மாறியிருக்கும்?
அந்தக் குழந்தைக்கு நல்லதும் நடந்திருக்கலாம், கெட்டதும் நடந்திருக்கலாம். அங்கிருந்த நேரத்தில் உணவுக்கு என்ன செய்தது என தெரியாது. உணவில்லாமல் இருந்திருந்தால் ஊட்டச்சத்தில்லாத குழந்தையாக மாறியிருக்கும். வேறு ஏதாவது நோய்களும் தொற்றியிருக்கலாம். மீண்டும் இயல்லாபன நிலைக்குக் கொண்டுவர நாள் பிடிக்கும். முதலில் குழந்தையின் உடல் நலனை சரிப்படுத்தி, பிறகு மனநல சிகிச்சை அளிக்கலாம்.
இந்தியாவில், டெல்லி மற்றும் பெங்களூரில் மட்டும்தான் மனநலத்துக்கு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன.
பட மூலாதாரம், Thinkstock
டெல்லி, பெங்களூரில் தான் மனநல சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன
மன நலம் பாதிக்கப்பட்ட மூத்தவர்களுக்கே புள்ளிவிவரம் இல்லை. 18 வயதுக்குக்கீழ் உள்ளோர் வீட்டிலுள்ளோராகவே கருதப்படுவார்கள். 18 வயதுக்கும் மேற்பட்டோர் எந்த ஆவணத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை. அறிவியல் ரீதியாக எங்களுக்குக் கிடைக்கும் சமீபத்திய தகவலின்படி, மனநல பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக தகவல்.
மனநல பாதிப்பு அதிகரித்திருப்பதற்கு, ரசாயன உணவு முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, குழந்தைகள் மீதான அழுத்தங்கள் ஆகியவை முக்கிய காரணங்கள்.
வனப்பகுதியில் குரங்குகளுடன் தனியாக வாழ்ந்த சிறுமி
குடும்பச்சண்டை குழந்தைகளை பாதிக்கும்
பெற்றோர் அரவணைப்புக் கிடைக்காத குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணவன் - மனைவி இடையே பிரச்சனை, குடும்ப வன்முறை அதிகரிப்பதால் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, கணவன் இறந்த பிறகு ஒரு பெண் இன்னொருவரை திருமணம் செய்யும்போது, புறக்கணிப்பு எண்ணம் மேலோங்கி குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.. அளவுக்கு அதிகமான மருந்து எடுக்கும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மூளை வளர்ச்சி பாதிக்கபடுவதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
குழந்தைப் பருவத்தில் வரும்போது, பெற்றோர்கள் குழந்தைகளை வெறுக்கக் கூடாது. இதை சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கைவர வேண்டும். அந்தக் குழந்தையின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற குழந்தையுடன் ஒப்பீடு கூடாது. கற்றலில், கேட்டலில் பின்தங்கியிருந்தாலும் ஏற்க வேண்டும். அதற்கு எதிர்ப்புணர்ச்சி காட்டி, துன்புறுத்துவது கூடாது.
மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். உதாரணமாக, மீஞ்சுர் அருகே, ஆந்திர எல்லையில் வேலைக்கு செல்லும் பெற்றோர், மனலம் பாதிக்கப்பட்ட குழந்தையை வீட்டில் கட்டிப்போட்டுவிட்டு அருகில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை போட்டுவிட்டுச் செல்வார்கள். அக் குழந்தை, இடத்தில், இயற்கை உபாதைகளைக் கழிக்கும். மிக மோசமான துர்நாற்றம் ஏற்பட்டு, அண்டை வீட்டார் புகார் செய்த பிறகே அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுத்தார்கள்.
பட மூலாதாரம், Thinkstock
குடும்பச்சண்டை குழந்தைகளை பாதிக்கும்
சில மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கு சூடு வைப்பது போன்ற பிற்போக்குத்தானமான முறை கடைபிடிக்கப்படுகிறது. கம்பியை காய்ச்சி பாதத்தில் சூடு வைத்தல் போன்ற கொடூரரமான முறைகளால் இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு நேரத்தில் இதனால் குழந்தைகள் விரைவாக இறந்துவிடுகிறார்க்கள்.
இன்று உளவியல் ஆலோசகர்கள் எல்லா மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்களுக்காவது கற்றுக்கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இதற்கு, எங்கு தீர்வு கிடைக்கும் என்ற புரிதல் பலருக்கு இல்லை. மேலும், எல்லாவற்றுக்குமே மருந்து மூலம் தீர்வு என்ற நம்பிக்கையும் தேவையில்லை.
மனநல காப்பகங்கள் மாநில தலைமையகத்தில் மட்டும் இருக்கக் கூடாது. மூன்று நான்கு மாவட்டங்களுக்கு ஒரு காப்பகமாவது தேவை. அங்கு தரமான சூழல் அவசியம். குணமடைந்தவர்களை மீண்டும் குடும்பத்தில் சேர்க்க வேண்டும். அது தோல்வியான முயற்சியாகவே இதுவரை இருந்து வருகிறது.
பட மூலாதாரம், AZEEM MIRZA
சட்ட ரீதியாகவா, மனோ ரீதியாகவா?
சட்டத்தின் ஆட்சி நடப்பதாக இருந்தால் இதற்கு தனிச் சட்டம் தேவை. குழந்தை, முதியோர், பெண், இளைஞர் ஆகியோருக்கு தனிக் கொள்கை இருக்கிறது. ஆனால், மனநலக் கொள்கை இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆராய வேண்டும்.
பெற்றோரிடம் நம்பிக்கை வர வேண்டும். அதை அரசுதான் ஏற்படுத்த முடியும். மனநலம் பாதிக்கப்பட்டோரை துன்புறத்துவோரை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்.
தனி நபர், குடும்பம், சமூகம், அரசு ஆகிய அனைத்துத் தரப்பினரும் கை கோர்த்தால்தான் இதற்கு முழுமையான தீர்வைத் தர முடியும். அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகளுக்கு அணைபோட முடியும் என்கிறார் தேவநேயன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்