மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்களை காவல்துறை தரக்குறைவாக நடத்துவதாக வேதனை

திருப்பூர் அருகே, டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை, காவல் துறை துணை கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந் நிலையில், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் காவல் துறையால் எந்த அளவு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து அவர்களது எண்ணங்களை உள்ளடக்கிய ஒரு பார்வை.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தால் தேசதுரோக வழக்கை சந்தித்த ஆனந்தியம்மாள்
படக்குறிப்பு,

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தால் தேசதுரோக வழக்கை சந்தித்த ஆனந்தியம்மாள்

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாககூறி அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில், அவர்களை காவல்துறையினர் ஏன் தாக்கவேண்டும் என்பது தொடங்கி, பாதிக்கப்பட்ட ஈஸ்வரியை போல டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய பல பெண்கள் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டதாகவும், ஆண் காவலர்களால் மோசமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களில் சிலரிடம் அவர்களின் போராட்டத்தின் வலிகளை பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

குடிப்பழக்கத்திற்கு எதிராக 2015ல் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 54 வயதான ஆனந்தியம்மாள் பேசியபிறகு, அவரின் பேச்சு தேசத்தின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாககூறி அவர் மீது தேசதுரோகவழக்கு பதிவாகியது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி டாஸ்மாக் கடைகள் முன்பாக இறந்துபோன அனாதை நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் ஆனந்தியம்மாள் தனது போராட்ட அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

''சுமார் 2,000 அனாதை பிணங்களை புதைத்துள்ளேன். அதில் பெரும்பாலும் இறந்த இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள். மதுப்பழக்கத்தால் குடும்பம், கல்வி, வாழ்க்கை அனைத்தையும் இழந்தவர்களை புதைத்துக் கொண்டே இருப்பது தீர்வாகாது என்று எண்ணித்தான் மதுவுக்கு எதிராக போராட தொடங்கினேன். தமிழகம் முழுவதும் மூன்று முறை பிரசார பயணத்தில் ஈடுபட்டேன். அரசே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மையை கூறிய என்மீது தேசதுரோக வழக்கு உள்ளது,'' என்றார் ஆனந்தியம்மாள்.

ஒவ்வொரு முறையும் போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறையினரிடம் ஆனந்தி வைக்கும் கேள்வி, காவல்துறை மக்களை பாதுக்காகவா, மக்களை அழிக்கும் மதுக்கடைகளை பாதுகாக்கவா என்பதுதான்.

2016 மே மாதம் சென்னை புறநகர் மதுரவாயல் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்த தனக்கு தலையில் இரண்டு தையல்போடும்படியான பிரம்படி விழுந்தது என்கிறார் போராட்டக்காரர் சத்தியா.

படக்குறிப்பு,

போராட்டத்தின்போது, சத்தியாவின் முகத்தில் ரத்தம் வழிந்தகாட்சி

போராட்டத்தின்போது, சத்தியாவின் முகத்தில் ரத்தம் வழிந்த காட்சி அப்போது தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சத்தியாவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

''மதுரவாயல் பகுதியில் உள்ள நொளம்பூரில் இருந்து டாஸ்மாக் கடை முன்பாக பலர் குடித்துவிட்டு அங்குள்ள பெண்களை சிரமப்படுத்திவந்தனர். அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். பெண்கள், குழந்தைகள் என யாரையும் விட்டுவைக்காமல் காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் நடந்துகொண்டனர்,'' என்கிறார் சத்தியா.

பல முறை ஆண் காவலர்கள் தனது உடையை இழுத்ததாகவும், கூசும் வார்தைகளை சொல்லி அவமானப்படுத்தியாகவும் குற்றம் சாட்டுகிறார் மற்றொரு பெண் போராட்டக்காரர் லதா.

தமிழகம் முழுவதும் பல ஊர்களிலும் போராட்டம் நடத்தியபோதும் எல்லா இடங்களிலும் பெண்களை கைது செய்ய பெண் காவலர்கள்தான் வரவேண்டும் என்ற விதி இருந்தாலும், பெரும்பாலும் ஆண் காவலர்கள்தான் பெண்களை கைது செய்கிறார்கள் என்கிறார் லதா.

படக்குறிப்பு,

போராட்டங்களின் போது பெண்கள் கையாளப்படும் விதம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ளது

அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியில் நடந்த போராட்டத்தில் ஆண் காவலர்கள்தான் தன்னை ஒடுக்கினார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

''பெண்களை காவல்துறையின் வண்டியில் ஏற்றும்போது மட்டும்தான் பெண் காவலர்கள் வருகிறார்கள். எங்களை பாதுகாக்கவேண்டிய காவல்துறையினர், மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். எங்களை அவமானப்படுத்துகிறார்கள்,'' என்கிறார் லதா.

ஆனந்தியம்மாள், சத்தியா, லதா வரிசையில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளானதாக சொல்லப்படும் ஈஸ்வரிக்கு நேர்ந்தநிலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான உதாரணம்: ஆர். நடராஜ்

திருப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது என்று முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.நட்ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர் என்ற நிலையில் திருப்பூரில் ஆண் ஆதிகாரி நடந்துகொண்டவிதம் மோசமான உதாரணமாக அமைந்துவிட்டது" என்றார்.

அதிக அளவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்களை அடக்குவது மற்றும் கைது செய்வது பெண் அதிகாரியாகத்தான் இருக்கவேண்டும் என்பது காவல்துறையின் முக்கிய விதிகளில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். ''மற்ற மாநிலங்களை விட தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு பெண்களை கையாளும்விதம் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதையும்மீறி இந்த செயல் நடந்துள்ளது,'' என்றார்.

தற்போது மயிலாப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நட்ராஜ் பலமுறை தனது தொகுதியில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சரிடம் பேசிய பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்