இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு என அரசு மருத்துவர்கள் தகவல்

இலங்கையில் எச்1 என்1 இன்ப்ளுவன்சா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் சிகிச்சைக்கு தேவையான மருந்துக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது.

டெங்கு பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்

''சுகாதார அமைச்சின் செயல்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் சுகாதார அமைச்சகத்துக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்." என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோருகின்றது.

"குறிப்பாக எச்1 என்1 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ' தமிப்ளு'' ( Tamiflu ) மருந்துக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலை உட்பட அரசாங்க வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு காணப்படுகின்றது '' என்கின்றார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நலிந்த ஹேரத்.

''மருந்து தட்டுப்பாடு காரணமாக மக்கள் மரணமடைகின்றார்கள். சுகாதார அமைச்சர் என்ன தான் கூறினாலும் பொதுவாக அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது '' என்றும் அவர் கூறுகின்றார்

''இதுபோன்ற பிரச்சனைகளை தெரியப்படுத்தும்போது அரசாங்கத்தை கவிழ்க்க முற்படுவதாக சுகாதார அமைச்சரால் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. அது போன்ற தேவை இல்லை.'' என்றும் தெரிவித்துள்ள டாக்டர் நலிந்த ஹேரத் சுகாதார அமைச்சர் தனது இயலாமையை மூடி மறைக்கவே இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

2009 தொடக்கம் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக பதவி வகித்தார். அக் காலத்தில் சுகாதார அமைச்சின் பணிகள் திருப்திகரமாக இருந்ததாக சுட்டிக்காட்டும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ''சுகாதார அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் '' என்றும் வலியுறுத்துகின்றது.

இதே வேளை எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. தேவையை விட கூடுதல் கையிருப்பு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

டெங்கு வைரஸ் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

மேல் ,கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பிரதான அரச வைத்தியசாலைகளில் டெங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவுகளையும் டெங்கு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான தனியான வார்டுகளையும் ஏற்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இம் மாதம் 20ம் தேதிக்கு முன்னதாக இவை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் , தாதிகள் , ஏனைய பணியாளர்கள் உட்பட தேவையான பணியாளர்களை இந்த பிரிவுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன சுகாதார சேவைகள் இயக்குநர் நாயகத்தை பணித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சில் இது தொடர்பாக நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலில் இந்த பணிப்புரையை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன விடுத்துள்ளார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் டெங்கு நோயாளர்களுக்கு தொடர்ச்சியான சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

மேல் மாகாணத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட 4 அரசாங்க வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களுக்கான தனிப் பிரிவுகள் அமைக்கப்படவிருக்கின்றன.

தென் மாகாணத்தில் காலி , மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை அரசாங்க வைத்தியசாலைகளும் இதற்கு அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையிலும் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் இந்த பிரிவுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

இலங்கையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு வைரஸ் தாக்கம் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன..

கடந்த ஆண்டு 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மட்டும் 30 ஆயிரத்து 486 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

கடந்த ஆண்டு முதல் 3 மாத காலத்தில் 13 ஆயிரத்து 829 பேர் இனம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 3 மாத காலத்தில் 55 சத வீத அதிகரிப்பை இது காட்டுகின்றது. இந்த ஆண்டு இதுவரையில் சுமார் 55 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்