ஆணா, பெண்ணா சோதனையை கட்டாயமாக்க திட்டம்: சட்டத்தை மீறும் நடவடிக்கை என எதிர்ப்பு

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் குறைந்துவரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து பெண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு சிறப்பு கவனம் தருவதாக கூறி ஒரு திட்டத்தை அரசு முன்மொழிந்துள்ளது.

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த சட்டத்தைக் கொண்டுவருவதற்காக சட்டப் பேரவையின் பொதுக்கணக்குக் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் காப்பாற்றப்படுவதற்கு பதிலாக, பெண் குழந்தைகளை மேலும் கருவிலே அழிப்பதற்கான நடவடிக்கை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய வழக்கறிஞர் அஜீதா, மகாராஷ்டிர அரசின் இந்த முடிவு தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறுவதாக அமையும் என்கிறார்.

''மத்திய அரசின் பாலினத்தை முடிவு செய்தல் தடைச் சட்டத்தின்படி (1994), கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று சோதனை செய்து தெரிந்துகொள்வது, ஸ்கேன் மூலம் கண்டறிவது, ஸ்கேன் மையங்கள் அல்லது மருத்துவர் அதற்கு உதவுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மகாராஷ்டிர அரசின் தனிப்பட்ட முடிவு மத்திய சட்டத்திற்கு புறம்பானதாக அமைந்துவிடும்,'' என்றார்.

சமூகதளத்தில் இருந்து பார்த்தால், பெண் குழந்தை என்று தெரிந்த பின்னர் அந்த குழந்தையை சுமக்கும் பெண்ணுக்கு அதிக கவனம் அளிக்கப்படும் என்று எண்ணும் அரசு, ஆண் அல்லது பெண் என எந்த குழந்தையாக இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதுதான் அரசின் கடைமையாக இருக்கவேண்டும் என்றார்.

''கருவில் இருப்பது பெண்குழந்தை என்று தெரியவந்தால், அந்த குடும்ப நபர்களே கர்ப்பிணியை மோசமாக நடத்த வாய்ப்புள்ளது. இதற்கு அரசாங்கமே வழிவகுத்துக் கொடுப்பதுபோல் உள்ளது,'' என்றார் அஜிதா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்