`பிற சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் அம்பேத்கர் விழாவுக்கு அனுமதியில்லை'

இந்திய அரசியல் சாஸன அவையின் தலைவரும் முதல் சட்ட அமைச்சருமான பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டுடன் அனுமதி
படக்குறிப்பு,

கட்டுப்பாட்டுடன் அனுமதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி கிராமத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக காவல்துறையின் அனுமதி நாடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் போகளூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு அனுமதியளித்த சத்திரக்குடி காவல்துறை, பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு உடனடியாக படத்தை அகற்றிவிட வேண்டும், ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, விளையாட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது, புதிய கொடிக்கம்பம், பெயர்ப் பலகை, உருவப்படம் திறக்கக்கூடாது, கொடிகள், தோரணங்கள்கட்டக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளோடு இறுதியாக, பிற சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற நிபந்தனையையும் காவல்துறை விதித்துள்ளது.

"இந்த விழா குறித்த பிற நிபந்தனைகளைக்கூட ஏற்றக்கொள்ளலாம். ஆனால், பிற சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற வாசகம்தான் எங்களை மிகவும் புண்படுத்தியது. ஜாதித் தலைவர்களுக்கு இம்மாதிரி நிபந்தனைகளை விதிக்கலாம். ஆனால், அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாட இப்படி ஒரு நிபந்தனையை காவல்துறை ஏன் விதிக்கிறது? அவரை ஒரு சமுதாயத்தின் தலைவராகக் குறுக்கிவிட முடியுமா?" என பிபிசியிடம் கூறினார் பா. காசிநாதன்.

கட்டுப்பாடு ஏன்?

இதற்கு முன்பாக, இம்மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில்லை என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலரான கலையரசன். ஆனால், இந்த முறை மீனந்தி, முத்துவயல், சத்திரக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இம்மாதிரியான நிபந்தனைகளோடு காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது.

பட மூலாதாரம், AFP

"தாங்கள் பொறுப்பில் இருக்கும்போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்துவிடக்கூடாது என அதிகாரிகள் நினைப்பதுதான் காரணம். அடிவாங்கியவன்கூட சத்தம்போடக்கூடாது என கருதுகிறார்கள்" என்கிறார் கலையரசன்.

இம்மாதிரி நிபந்தனைகளுடன் அனுமதியளித்த காவல்துறை ஆய்வாளர் குணசேகரனிடம் இது குறித்துக் கேட்டபோது, எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரி நிபந்தனையுடன் அனுமதியளித்ததாகக் கூறினார்.

"ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் பிறந்த நாட்களுக்கும் இம்மாதிரியான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன" என்கிறார் அவர்.

அம்பேத்கரை ஜாதித் தலைவராக நினைத்து காவல்துறை இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிக்கிறதா எனக் கேள்வியெழுப்பியபோது, "நாங்கள் அவரைத் தேசியத் தலைவராகவே நினைக்கிறோம். ஆனால், பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கட்டுப்பாடுகள்" என்கிறார் குணசேகரன்.

இம்மாதிரியான நிபந்தனைகள், ஒவ்வொரு கிராமத்தையும் பொறுத்து மாறுபடும் என்றும் எல்லாக் கிராமங்களுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதில்லையென்றும் காவல்துறை கூறுகிறது.

தற்போது இந்த விவகாரத்தை மாநில மற்றும் தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் புகாராக அளிக்கப்போவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்