திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பைத்தியகாரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை.

கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார்.

தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் 2013ல் பெண்களின் தற்கொலை 44256 இருந்தது என்றும் அது 2015ல் 42088ஆக குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பெண்களின் தற்கொலை எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள் என்ன? குறிப்பாக குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்ற பிடியில் இருந்து விலகிய பெண்கள் தங்களது முடிவை மாற்றிக் கொண்டது எப்படி என ஆராய்கிறது இந்த கட்டுரை.

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியரான பிரதீபா அதிக சம்பளம் பெறுவது அவரது கணவரை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளியது. கணவரின் உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பொறுக்க முடியமால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

உரிய நேரத்தில் ஒரு ஆண் நண்பரின் உதவி பிரதீபாவை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டது. சிறிது காலத்தில் கணவரை விட நண்பரின் உறவே தனக்கு தேவை என முடிவு செய்தார். கணவருடனான வாழ்க்கையில் இருந்து தனது மகளுடன் வெளியேறினார். தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

பிரதீபாவுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தற்கொலை தீர்வு இல்லை என முடிவெடுப்பதற்கு பல வாரங்கள் எடுத்தது. ''குற்ற உணர்ச்சி இருந்தது. வீட்டில் பார்த்து வைத்த திருமணத்திற்காக, குடும்ப கௌரவத்திற்காக, மகளுக்காக என பல காரணங்கள் என்னை அழுத்தியது. ஒரு கட்டத்தில் என் வாழக்கையை இழக்க விரும்பவில்லை,''என தனது தற்கொலை எண்ணத்திற்கு முடிவுகட்டியது பற்றி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிரதீபா போல திருமண உறவுகளைத் தாண்டிய உறவுகளை அமைத்துக்கொள்வது, தனது வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்வது, திருமணம் தாண்டிய உறவுகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது ஆகிய காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது என்கிறார்கள் தன்னார்வலர்கள்.

தேசிய குற்றப்பதிவு காப்பகத்தில் பதிவாகியுள்ள எண்கள் இந்த மாற்றத்திற்கு சாட்சியாக உள்ளன.

2005முதல் 2015 வரையிலான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, தற்கொலையை தடுக்கும் ஆலோசனை வழங்கும் மருத்துவர் மற்றும் இந்தத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசியதில் இந்தக் கருத்து தெளிவாகிறது.

இந்தியாவில், 2005ல் திருமணத்தை தாண்டிய உறவை ஏற்ற காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 1,220ஆக இருந்தது.

அது 2015ல் 474ஆக குறைந்துள்ளது. அதாவது 46.6% குறைந்துள்ளது.

அதுபோலவே திருமணத்தைத் தாண்டிய உறவுகளால் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை 171ல் இருந்து கடந்த 10 ஆண்டு காலத்தில் 49ஆக குறைந்துள்ளது. அதாவது 28.6% குறைந்துள்ளது. இந்த எண்ணங்களுக்கு பின் பிரதீபா போல பல பெண்களின் துணிச்சலான முடிவும், தனது வாழ்க்கை, விருப்பங்கள் மீதான முடிவெடுக்கும் உரிமை இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தின் தலைவர் லட்சுமி விஜயகுமாரின் விளக்கம் புள்ளிவிவரங்கள் பற்றிய தெளிவைத் தருகிறது.

''முன்பை போல சகித்துக் கொண்டு வாழ்வது என்பது தேவை இல்லை என பெண்கள் முடிவெடுப்பது ஒரு காரணம். விவாகரத்து பெற்றுக்கொண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவது என்ற பண்பாட்டுக்கு சமூகத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்துவிட்டது முக்கிய காரணம்,'' என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

திருமணம் தாண்டிய பாலுறவு காரணமாக தீயிட்டுக் கொளுத்தி தற்கொலை செய்யும் முறை முற்றிலுமாக மாறியுள்ளது என்கிறார் அவர்.

அடுத்து திருமணத்தை தாண்டிய பாலுறவால் தேவையற்ற கர்ப்பம் ஏற்பட்டால், அதைக் கலைத்துவிடுவது அல்லது கர்ப்பம் தரிக்காத வகையில் பாதுகாப்பான பாலுறவு ஆகியவை பெண்களின் தற்கொலை எண்ணிக்கையை குறைத்துள்ளது என்கிறார்.

''கர்ப்பமாக உள்ளேனா இல்லையா என்று ஒரு பெண் தெரிந்துகொள்ள மருத்துவ சாதனங்கள் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க சிகிச்சைகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன. காலம் முழுவதும் சிரமப்படாமல் தனது வாழ்க்கையின் போக்கை மாற்றுவதற்கு பெண்கள் துணிந்துவிட்டதும் தற்கொலைகளை தடுத்துள்ளது,'' என்றார் லட்சுமி விஜயகுமார்.

''35 வயது மதிக்கத்தக்கப் பெண், கணவரின் குடிப்பழக்கத்தால், தனது அலுவலக நபரின் உறவை நாடினர். விவாகரத்து பெற்று இரண்டாவது வாழ்க்கையை மிக மகிழ்வுடன் நடத்திவ ருகிறார். வாழ்க்கைத் துணை என்ற தேர்வில் தோற்றுப்போனால் தற்கொலை தேவையில்லை என்ற முடிவை எடுத்ததால் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறார் அந்த பெண். அவரின் குடும்பம் அவரை தற்போது ஏற்றுக்கொண்டது,'' என்கிறார் ஹரிஹரன்.

திருமணம் உறவில் பாலுறவு பிரச்சனைகள் ஏற்படும்போதும், அதுவே சுமையாக மாறும்போதும் தற்கொலை செய்துகொள்ள தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திரவெளியை பெண்கள் தேட தொடங்கிவிட்டனர் என்ற மாற்றத்திற்கான புள்ளிதான் இந்த புள்ளிவிவரம் என்கிறார் இந்திய சமூக நல அமைப்புபை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரிஹரன்.

தற்கொலை செய்வதற்கு பதிலாக தன்னம்பிக்கையையுடன் தன் விருப்பத்திற்கு உட்பட நபருடன் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள் பிரதீபா முடிவு எடுத்த அந்த அதிகாலை பொழுது, அதே காரணத்திற்காக மரணித்த பல பெண்களின் ஆன்மாக்களின் மௌனத்தில் இருந்து உருவானது என்று நம்புகிறார்.

இதுவும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்