தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்
படக்குறிப்பு,

தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்

மேலும் ஏப்ரல் 22-ஆம் தேதியன்று அனைத்துக்கட்சிகளும் பங்கேற்கும் ஒரு கண்டன பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகளின் பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டவும், இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு திமுக அழைப்பு விடுத்தது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தில்லியில் விவசாயிகள் போராடி வருவதை சுட்டிக்காட்டியிருக்கும் திமுக, இந்தப் பிரச்சனையை மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லையென குற்றம்சாட்டியது.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்