வடகொரியாவின் ஏவுகணை முயற்சி வெற்றி பெறுமா? - பாதுகாப்பு விவகார நிபுணர் பேட்டி

வடகொரியா நடத்திய ஏவுகணை முயற்சி தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இந்த முயற்சி குறித்தும், கொரிய பிராந்தியத்தில் நிலவி வரும் சூழல் குறித்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மையத்தின் முன்னாள் பொது இயக்குநர் சந்தானம் தனது கருத்துக்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மையத்தின் முன்னாள் பொது இயக்குநர் சந்தானம்
படக்குறிப்பு,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மையத்தின் முன்னாள் பொது இயக்குநர் சந்தானம்

வடகொரியாவின் ஏவுகணை முயற்சி குறித்து குறிப்பிட்ட சந்தானம், ''இதற்கு முன்பே இது போன்ற முயற்சிகளை பல முறைகள் வடகொரியா செய்துள்ளது. ஆனால், அவை எதற்குமே முழுமையான வெற்றி கிடைக்கவில்லை'' என்று கூறினார்.

''பள்ளிக்கூடத்தில் அடிக்கடி குறும்பு , சேட்டை செய்து மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் ஒரு மாணவனை போல வடகொரியா நடந்து கொள்கிறது. மற்ற நாடுகளுக்கு அது தொடர்ந்து தொந்தரவு தருகிறது'' என்று தெரிவித்த சந்தானம் மேலும் கூறுகையில், ''வடகொரியா சர்வாதிகார தலைமை கொண்ட நாடு. மிகவும் மோசமான நிர்வாகத்தின் பிடியில் உள்ள அந்த நாட்டை ஒரு தோல்வியடைந்த நாடு என்றே கூற வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

வடகொரியாவுக்கு உதவுபவர்கள் யார்?

வடகொரியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் குறித்து சந்தானம் கூறுகையில், ''சீனாவிடமிருந்து மட்டும் வடகொரியாவுக்கு ஆதரவு கிடைக்கிறது. இதை தவிர வேறு எந்த நாடும் வடகொரியாவுக்கு உதவி புரியவில்லை. வடகொரியாவுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட பல பொருட்களை வழங்கி சீனா உதவி வருகிறது'' என்று சந்தானம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

கொரிய பிராந்தியத்தில் வடகொரியாவால் அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என்று குறிப்பிட்ட சந்தானம், வடகொரியாவில் இருந்து பல மக்களும் ஜப்பான் போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றார்கள். வடகொரியாவில் நிலவும் நிலைமையால் அவர்கள் தங்கள் தாயகத்துக்கு மீண்டும் திரும்ப அச்சப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

வடகொரியா நடத்திய ஏவுகணை முயற்சி தோல்வி

சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள், வடகொரியாவின் ஏவுகணை முயற்சியால் பாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பல விதமான கோணங்கள் உண்டு. இப்பிரச்சனை இதில் ஓர் அம்சம் தான் என்று குறிப்பிட்டார்.

வடகொரியாவின் ஏவுகணை முயற்சி குறித்து சந்தானம் மேலும் தெரிவிக்கையில், ''முன்பு சோவியத் யூனியன் மூலம் வடகொரியாவுக்கு ராணுவ உதவிகள் கிடைத்தன. தற்போது அது நின்று விட்டது. பாகிஸ்தான் போன்ற பல இடங்களில் இருந்து சில நுட்பங்களை அவர்கள் திருடுகின்றனர். தங்களால் முடிந்ததை வடகொரியா தானாகவே செய்கிறது. இது போன்ற அம்சங்கள் மற்றும் நுட்பங்களில் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்றே கூற வேண்டும்'' என்று சந்தானம் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்