பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் பாடப்புத்தகம்

இந்தியாவில் பாடப்புத்தகம் ஒன்றில் சிறந்த பெண்ணுக்கான அங்க அளவுகள், 36 - 24 - 36 என்று வர்ணித்திருந்தது குறித்து கல்வித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் பாடப்புத்தகம்

பாடநூலில் இடம்பெற்றிருந்த தகவலுக்கு தான் கடுமையான கண்டனங்களை பதிவு செய்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

தனியார் வெளியீட்டாளர் ஒருவர் இந்தப் புத்தகத்தை அச்சிட்டுள்ள நிலையில், இந்தியாவின் மத்திய கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டங்களை இந்நூல் பின்பற்றி வருகிறது.

புத்தகத்தில் ஒரு பெண்ணின் சிறந்த உடல் அளவு விகிதாச்சாரம் என்ற தகவல் இடம்பெற்றது மட்டுமின்றி, '' பெண்கள் இடுப்பில் உள்ள எலும்புகள் அகலமாக இருக்கிறது மற்றும் அவர்களது முட்டிகள் ஒருபுறமாக இருக்கும். இந்த அமைப்பு காரணமாக, பெண்களால் ஒழுங்காக ஓட முடியாது''.

தனிப்பட்ட முறையில் வெளியிடப்படும் பாடப்புத்தகங்களை தங்களால் கண்காணிக்க முடியாது என்று சி பி எஸ் இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என் சி இ ஆர் டி ) வெளியிட்டுள்ள புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வாரியம் பரிந்துரைக்கிறது.

சர்ச்சைக்குரிய பாடநூலை கற்பிப்பதை உடனடியாக நிறுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

தில்லியை சார்ந்த சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரும் அறிக்கை ஒன்றில், திருத்தப்பட்ட புத்தகத்தின் அச்சடிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாடல்நூல்களில் மீதான சர்ச்சைகள் அசாதாரணமானவை அல்ல.

கடந்த பிப்ரவரி மாதம் பூனையை மூச்சுத்திணறச் செய்வது எப்படி என்று கூறிய ஒரு புத்தகத்துக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபமடைந்தனர்.

அதேபோல், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கா மீது ஜப்பான் அணு ஆயுத குண்டுகளை வீசியிருக்கும் என்று இடம்பெற்றிருந்த தகவலால் மேற்கு மாநிலமான குஜராத்தில் புத்தகம் ஒன்று தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தது.

''அழகற்ற'' மற்றும் ''மாற்றுத்திறனாளி'' மணப்பெண்களால் மணமகன் குடும்பத்தார் அதிகளவில் வரதட்சணை பெறுவதற்கு வழிவகுக்கிறது என்று தகவல் இடம்பெற்றிருந்த ஒரு புத்தகத்துக்கு எதிராக மகாராஷ்டிர மாநிலத்தில் பிரச்சினை வெடித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்