இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது குற்றச்சாட்டு

தினகரன்

பட மூலாதாரம், AIADMK

இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், டி.டி.வி.தினகரன் அணியினருக்கு அந்த சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக கூறி, சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டில்லி காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

தெற்கு டில்லியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று காலை நடைபெற்ற சோதனையின் போது, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் ஏராளமான ரொக்க பணத்துடன் கைதாகியுள்ளார்.

சந்திரசேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பேரம் பேசப்பட்டாகவும் கூறியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமக்கு சுகேஷ் சந்திரசேகர் என்கிற பெயர் கொண்ட எவரையும் தெரியாது என்றும், அவரிடம் பணம் கொடுத்ததாக வெளியாகும் தகவல் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சியை அழிக்கும் நோக்கத்தில், அரசியல் லாபத்திற்காக தன் மீது இது போன்ற குற்றம் சுமத்தப்படுவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

மேலும், தமக்கு இதுவரை டில்லி காவல்துறையினரிடமிருந்து சம்மன் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும், ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக தன் தரப்பு வழக்கறிகஞரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் கூறிய டி.டி.வி.தினகரன், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூரு கிளம்பிக்கொண்டிருந்த போது, ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியானதை தான் பார்த்ததாகவும் டி.டி.வி.தினகரன் அப்போது கூறினார்.

இதற்கிடையே டில்லி காவல்துறையினர் நாளை செவ்வாய்கிழமை சென்னை வரவிருப்பதாகவும், டி.டி.வி.தினகரனுக்கு இந்த வழக்கு தொடர்பில் விளக்கம் அளிக்க கூறி சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும், டி.டி.வி.தினகரனுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்