இறுதிச்சடங்கில் பங்கேற்காதவர்கள் நேரலையில் காண சென்னை சுடுகாட்டில் இலவச 'வைஃபை'

இறுதிச்சடங்கை இணையத்தில் ஒளிபரப்பு செய்ய சென்னை அண்ணா நகர் வேலங்காடு எரிவாயு தகனக் கூடத்தில் இலவச 'வைஃபை' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு தகனக் கூடத்தில் இலவச 'வைஃபை'
படக்குறிப்பு,

எரிவாயு தகனக் கூடத்தில் இலவச 'வைஃபை'

தமிழகத்தில் உள்ள ஒரு சில பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச 'வைஃபை' வசதி உள்ளது.

ஆனால், சுடுகாட்டிலும் இலவச 'வைஃபை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செய்தி, பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு சுடுகாட்டில், இலவச 'வைஃபை' சேவை தொடங்கப்படுகிறது என இந்த ஏற்பாட்டை செய்துள்ள இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் செயலர் ஹரிஹரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த செய்தியை தெரிந்து கொண்டு, உத்தரப்பேரதேசத்திலும், கர்நாடகாவிலும் இது போன்ற சேவையை தொடங்கப்போவதாக அங்குள்ள தன்னார்வலர்கள் தன்னிடம் கூறியதாகவும் ஹரிஹரன் அப்போது குறிப்பிட்டார்.

இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இணையம் வாயிலாக அதை நேரடி ஒளிபரப்பில் காண்பதற்காகவே இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குக்கு வரும் சிலர் தங்கள் கைபேசியில் உள்ள காமராவை இணையம் வாயிலாக இணைக்க முயல்வதையும், சில நேரங்களில் இணைய வசதியை சரிவர பெற முடியாமல் தவிப்பதையும், மனவருத்தம் கொள்வதையும் கூட பார்த்திருப்பதாக கூறினார் சென்னை அண்ணா நகர் வேலங்காடு எரிவாயு எரியூட்டு மயானத்தின் பொறுப்பாளரான பிரவீனா.

அதனால் தற்போது வழங்கப்படும் இலவச 'வைஃபை' வசதி என்பது அவர்களைப் போன்றோருக்கு பயனளிக்கும் என்றும் பிரவீனா கூறினார்.

படக்குறிப்பு,

வேலங்காடு எரிவாயு எரியூட்டு மயானத்தின் பொறுப்பாளரான பிரவீனா

சென்னை அண்ணா நகர் வேலங்காடு மயானத்தில் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படும் அறையிலும் காமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கணினியில் பதிவாகும் அந்த காமராக்களின் காட்சிகள், இணையதளங்கள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பெண் பராமரிப்பாளரை பெற்ற இந்த வேலங்காடு மயானமே, தற்போது தமிழகத்தின் முதல் இலவச 'வைஃபை' வசதியும் பெற்றுள்ளது.

இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்