ஹிந்தி தெரியாமல் ஏன் உயிரோடு இருக்கிறாய் என கேட்கிறார்கள்? ஒரு தமிழ் இளைஞரின் போராட்டம்

தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு படிப்பதற்கோ, பணியாற்றுவதற்கோ வருபவர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஹிந்தி மொழி தெரியாமல் இங்கு வருவோருக்கு சவால்கள் இன்னும் பல மடங்கு அதிகம்.

ஷஃபி
படக்குறிப்பு,

ஷஃபி இர்ஃபானுல்லா

மொழி மட்டுமன்றி, கலாசார ரீதியாக, அடிப்படைத் தேவைகளைத் தேடிச் செல்லும்போது, பொதுச் சந்திப்புக்களின்போது என ஒவ்வொரு அடியிலும் பல தடைகளைத் தாண்டும் நிலை ஏற்படலாம்.

அப்படிப்பட்ட ஒருவரின் அனுபவங்களை அறிந்து கொள்ள வேண்டும் எனத் தேடியபோது, நமக்கு அறிமுகமானார் ஷஃபி தமிழகத்தில் சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி. தற்போது, டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட நிறுவனத்தில் சட்டம் பயில்கிறார்.

அவர், மடை திறந்த வெள்ளம் போல, தன் மனம் திறந்து கொட்டுகிறார். இதோ அவரது வார்த்தைகளில்:

நான் அதற்கு முன்பு, தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியதில்லை. 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லி வந்தேன். தமிழ்நாட்டில் ரயில் ஏறியதுமே எனக்கு சவால் ஆரம்பித்துவிட்டது. ரயில் பணியாளர்கள் கூட தமிழ் பேசவில்லை. ஹிந்தியில் பேசினார்கள். அதனால், அந்த ரயில் பயணமே சுமையாகிப் போனது. அங்கு மொழி மட்டுமல்ல, சாப்பாட்டுக்கும் சங்கடம் வந்தது. தமிழக எல்லையைத் தாண்டுவதற்கு முன்பே தென்னிந்திய உணவுக்குத் தடை போட்டுவிட்டார்கள்.

டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியவுடனே, புது உலகத்துக்கு, மிரட்டும் உலகத்துக்குள் வந்ததைப் போன்றுதான் உணர்ந்தேன்.

படக்குறிப்பு,

நண்பர்களுடன்

தமிழகத்தில், யாராவது உதவி கேட்டால், வழி கேட்டால், நின்று பொறுமையாக சொல்வதைத்தான் பெரும்பாலும் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு நிதானமாக நின்று பதில் சொல்ல யாரும் இல்லை.

அதேபோல், ஏமாந்து போன பல நேரங்கள் உண்டு. யாருடைய உதவியுமின்றி தனியாகச் செல்ல வேண்டும் என குதுப்மினாருக்குப் போனேன். போகும் வழியில் ஒரு கடையில் என்னைப் போன்ற இளைஞர் பரிவோடு பக்கத்தில் வந்தார். நானும் குதுப்மினார்தான் போகிறேன் சகோதரா என்று பாசத்துடன் ஆங்கிலத்தில் சொன்னவாறு கூடவே வந்தார். மனசு சந்தோஷப்பட்டது. ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் வரும்போது எனது கையைத் தட்டிவிட்டு, எனது மொபைல் ஃபோனை லாவகமாகப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்.

நொந்து போய்விட்டேன். இது நம்ம ஊர் இல்லை என ஆழமாகப் புரியத் துவங்கியது.

வகுப்பறையிலும் வாட்டியெடுத்த மொழி

நான் சந்தித்த பெரிய சோதனைகளில், மொழிப் பிரச்சனைதான் மிகவும் மோசமானது. சில உதாரணங்களைச் சொல்ல முடியும். எனது மோட்டார் சைக்கிள், ஊரிலிருந்து ரயிலில் வந்தது. அதை எடுக்குச் சென்று ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்தேன். அவர்கள் ஹிந்தியில் பேசியபோது புரியவில்லை. எனக்கு மொழி தெரியாது என்றேன். ஹிந்துஸ்தானில் பிறந்து, ஹிந்தி தெரியாமல் வாழ்ந்து என்ன பயன்? எதற்கு உயிரோடு இருக்கிறாய் என்று கேட்டார்கள்.

படக்குறிப்பு,

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு

அடுத்து, கல்லூரியிலேயே ஓர் அனுபவம். கல்லூரியில் சேர, அதற்கான நிர்வாகக் குழு முன்பு ஆஜரானேன். ஹிந்தியில் கேள்வி கேட்டார்கள். தெரியாது என்றேன். அவர்களோ, மற்ற பேராசிரியர்களையும் அழைத்து என்னைப் பார்த்து, ஹிந்தி தெரியாதாம் இவனுக்கு என்று விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஹிந்தி தெரிந்திருப்பதுதான் இந்த நாட்டில் வாழ்வதற்கான தகுதியா என்று மனம் வருத்தப்பட்டது.

பிறகு, பொதுப் போக்குவரத்துக்களில் பல கஷ்டங்கள். ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும் பஸ் போர்டுகளைப் படிப்பதில் சவால்கள்.

வகுப்பறையிலும் மொழி விட்டுவைக்கவில்லை. ஆங்கிலத்தில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், முக்கியமான கட்டம் வரும்போது, ஹிந்திக்கு மாறிவிடுவார்கள்.. அதுபற்றி நான் பேராசிரியரிடம் கேட்டால், எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும்போது, பெரும்பான்மை மாணவர்களுக்குப் புரியும் மொழியில் சொன்னால்தானே அவர்களுக்குப் புரியும் என்று விளக்கம் சொல்வார்கள். அங்கு எனது அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக நினைத்தேன்.

கலாசார அதிர்ச்சிகள்

குடியிருக்கும் இடத்தில் தென்னிந்தியன் என்பதால் பிரச்சனை வரவில்லை. ஆனால், டெல்லி கலாசாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஆடை அணியும் விதம், பேசும் விதம், முரட்டுத்தனமான அணுகுமுறை என பல வகைகளில் முரண்பாடுகளை உணர்ந்திருக்கிறேன்.

மருத்துவமனைக்குச் செல்லும்போது, நமக்கிருக்கும் பிரச்சனையை மருத்துவர் புரியும்படி சொன்னால்தான் உரிய சிகிச்சை பெற்று நாம் குணமடைய முடியும். டெல்லியில் எனக்கு அதுவே பெரிய சவாலாக இருந்தது. எனது தேவைக்காக, டாக்டரை அணுகி, பிரச்சனையை விளக்கினேன் ஆங்கிலத்தில். அவர் ஹிந்தியிலேயே பேசினார். அவர் என்ன புரிந்து கொண்டு, எதை நினைத்து ஊசி போட்டாரோ, அந்த அனுபவமே எனக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.

காலநிலையின் கடுமை

டெல்லியின் கடும் வெப்பம், கடும் குளிர் என்ற காலநிலைக்குத் தாக்குப் பிடிப்பது கடினமாகத்தான் இருக்கிறது. வெயிலும் கொடூரமாக இருக்கும். குளிர் உறைய வைப்பதைப் போல் இருக்கும்.

பலர் கூட்டமாக இருக்கும் இடத்தில், குறிப்பாக கல்லூரி நண்பர்கள் கூடும் இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே உணர்ந்திருக்கிறேன்.

நான் மீண்டும் சொல்கிறேன். மொழியால் நான் வெறுக்கப்படுவதை என் மனம் என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது. `நீ ஏன் ஹிந்தி கற்றுக்கொள்ளக் கூடாது' என்று பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டது, `நீ ஏன் ஆங்கிலம் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான். ஆனால் யாரும் பதில் சொன்னதில்லை.

ஹிந்தி தேசிய மொழி இல்லை. பெரும்பான்மை சமூகத்தினர் ஹிந்தி பேசுவதில்லை. அதைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்பது எனது நோக்கமல்ல. ஆனால், அந்த மொழி தெரியாததால் நான் தாழ்ந்து போய்விடவில்லை.

தமிழனாய் பிறந்தேன். தமிழால் வளர்ந்தேன். தமிழனாய் வளர்வேன். என்றும் உயர்ந்து நிற்கிறேன் என்றுதான் கர்வத்துடன் சொல்வேன்.

இப்படி உணர்ச்சி பெருக்குடன் அனுபவங்களை அடுக்கினார் ஷஃபி.

உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா? பகிர்ந்து கொள்ளுங்கள், பிபிசி தமிழுடன்.

இதுவும் உங்களுக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்