அதிமுக அணிகள் இணைப்பா? வைகைச்செல்வன் பேட்டி

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக தங்கள் அணிக்கு அழைப்பு வந்தால், அது குறித்து பேசத் தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை வரவேற்றுள்ளார். இக்கருத்துக்கள் அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பை நோக்கி செல்கிறதா என்ற வினாவுக்கு அதிமுக சசிகலா அணியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பிபிசி தமிழோசையிடம் உரையாடுகையில் பதிலளித்தார்.

அதிமுக அணிகள் இணைப்பா?
படக்குறிப்பு,

அதிமுக அணிகள் இணைப்பா?

''தாய்க் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு திரும்ப வரலாம். அதிமுகவின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று இதற்கு முன்னர் பலமுறைகள் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்தும், தம்பித்துரை அதனை வரவேற்றதும் இந்த அழைப்புக்கு வலுசேர்க்கிறது.'' என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''இரு அணிகளும் இணைந்தால் அது அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்'' என்று வைகைச்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.

''ஓவ்வொரு இணைப்பின் போதும் பல கோரிக்கைகள் எழுவது இயல்புதான். அவ்வாறான கோரிக்கைகள் எவை என்பது பேச்சுவார்த்தைகளின் போதுதான் தெரியும். அவ்வாறான கோரிக்கைகள் ஏற்க கூடியதாக இருந்தால் அவை நிச்சயமாக ஏற்கப்படும்'' என்று வைகைச்செல்வன் குறிப்பிட்டார்.

சசிகலா மற்றும் டி டிவி.தினகரன் நீக்கமா?

சசிகலா மற்றும் டி டிவி.தினகரன் ஆகியோரை நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டால் அது ஆக்கப்படும் அன்று கேட்டதற்கு ''அது குறித்து பேசி தான் முடிவெடுக்கப்படும்'' என்று வைகைச்செல்வன் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், AIADMK

படக்குறிப்பு,

டிடிவி தினகரன்

தற்போது வரை இது குறித்த பேச்சுவார்த்தை எதுவும் தொடங்கவில்லை என்று தெரிவித்த வைகைச்செல்வன், 1989 காலகட்டத்தில் ஜா மற்றும் ஜெ அணிகளாக பிரிந்த அதிமுக மீண்டும் இணைந்தது போல், தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணையும் காலம் விரைவில் கனியும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்பது உள்பட ஓபிஎஸ் அணியினர் பல குற்றச்சாட்டுகளை உங்கள் அணியினர் மீது தெரிவித்துள்ளனரே என்ற கேள்விக்கு வைகைச்செல்வன் பதிலளிக்கையில், ''அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளும், எதிரணியினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான வார்த்தை பிரயோகம் நடத்துவதுண்டு. ஆனால், பிற்காலத்தில் தேர்தல் காலத்தில் ஒரே கூட்டணியில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்ததுண்டு. இதே போல், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதுதான் நல்ல சூழலை உருவாக்கும்'' என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்