சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இணைப்பு சாத்தியமில்லை: ஓ. பன்னீர்செல்வம்

சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.கவில் இருக்கும்வரை, பேச்சுவார்த்தையோ இணைப்போ சாத்தியமில்லை என அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.இ. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவின் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தது. அதற்குப் பிறகு சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக முதலமைச்சராகப் பதவிவகித்துவருகிறார்.

இந்த நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றபோது, இரு அணிகளும் கட்சிப் பெயரையோ, இரட்டை இலைச் சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பட மூலாதாரம், KASHIF MASOOD

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது குறித்துப் பேச்சு வார்த்தை நடக்கப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. திங்கட்கிழமையன்று இரவில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் ஆலோசனையும் நடத்தினர்.

தற்போது துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தபடி அ.தி.மு.க. அம்மா அணியை வழிநடத்திவரும் டிடிவி தினகரன் சென்னையில் இல்லாத நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திங்கட்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கடுமையாகச் சாடினார்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி. ராமச்சந்திரனும் ஜெயலலிதாவும் தங்களது குடும்பத்தினருக்கு கட்சியில் எந்தப் பதவியும் தராத நிலையில், சசிகலா குடும்பத்தினர் தற்போது அ.தி.மு.கவைக் கைப்பற்ற நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்திலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லையென்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

2011ஆம் ஆண்டில் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியைவிட்டு நீக்கிய ஜெயலலிதா, பிறகு சசிகலாவை மட்டும் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் செயல்பாட்டுக்கு மாறாகச் செயல்படுவது அவருக்கு இழைக்கப்படும் துரோகம் என்று குறிப்பிட்டார்.

சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட முறையே தவறு என்பதால், அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் செல்லாது என கூறிய பன்னீர்செல்வம், இதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பணம் வழங்கப்பட்டதால், மாநில சுகாதார அமைச்சரின் இல்லத்திலேயே வருமான வரித்துறையின் சோதனை நடத்தப்பட்டதாகவும் இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக பல்வேறு முறைகேடான முயற்சிகள் நடைபெற்றதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

`நிபந்தனையற்ற இணைப்பு இல்லை`

எந்தக் குடும்பம் கட்சியில் இருக்கக்கூடாது எனத் தான் வலியுறுத்திய குடும்பம் கட்சியைக் கட்டுப்படுத்தி, தவறுக்கு மேல் தவறு செய்துவருவதாக பன்னீர்செல்வம் கூறினார்.

எந்த நிபந்தனையுமின்றி இரு அணிகளும் இணைவதற்கு தான் தயார் என்று சொன்னதாக வந்த செய்தி தவறு என்றும் சசிகலா குடும்பம் குறித்த தங்களது முந்தைய நிபந்தனைகள் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று காலையில் டிடிவி தினகரனைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இணைப்பு முயற்சிகள் குறித்து தான் டிடிவி தினகரனை சந்தித்து விளக்கியதாகவும் பேச்சு வார்த்தைகள் இனிமேல்தான் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இணைப்பிற்கான நிபந்தனைகள் நீடிக்கும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது இரு அணிகளும் இணைவதில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், பன்னீர்செல்வத்தின் கருத்துகள் குறித்து மூத்த நிர்வாகிகள் விரைவில் முடிவுசெய்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

காணொளிக் குறிப்பு,

சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்