மென்மையான முறையில் இந்தியை திணிக்கும் பாஜக: திமுக எம்.பி. இளங்கோவன்

பாரதிய ஜனதா அரசு ``மென்மையான முறையில்`` இந்தி மொழி திணிப்பை அறிமுகப்படுத்தி வருகிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. இளங்கோவன்

பட மூலாதாரம், TWITTER

இந்தி படிக்க மற்றும் எழுதத் தெரிந்த குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் தங்களது அதிகாரபூர்வ உரைகளை இந்தி மொழியில்தான் அளிக்கவேண்டும் என்று ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி ஏற்றுள்ளார்.

இந்தப் பரிந்துரை தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கருத்தை எடுத்துவைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

2011ல் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைமையை வகித்து, பரிந்துரைகளை வழங்கியவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் என்பதால், திமுகவின் கூட்டணிக் கட்சியாக, காங்கிரஸ் கட்சி இருப்பதால் இந்த பரிந்துரை மீதான மென்மையான விமர்சனத்தை திமுக வைக்கிறதா என்ற கேள்விக்கு மொழி கொள்கையை பொறுத்தவரை திமுகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடக்கம் முதலே ஒத்துபோகாத நிலைதான் உள்ளது என்றார்.

''தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், காங்கிரஸ் தலைவர் ராஜாஜி காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக வலிமையாக நடத்தியது. தற்போது பாஜக இந்தி மொழி திணிப்பை மென்மையாக செயல்படுத்துவதால், திமுகவும் எதிர்ப்பை மென்மையாக வெளிப்படுத்தியுள்ளது,'' என்றார்.

''அதிகாரபூர்வ உரைகளை ஆங்கிலத்தில் இல்லாமல் வெறும் இந்தி மொழியில் மட்டும்தான் அளிக்கப்படும் என்று அழுத்தம் தரப்பட்டால், எங்களது எதிர்ப்பை காட்டுவோம். தற்போது 90 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி மொழில் பேசுகிறார்கள். ஆனால் மற்ற உறுப்பினர்களுக்கு மொழிபெயர்ப்பு வசதி உள்ளதால், அது பிரச்சனையாக இல்லை,'' என்றார் இளங்கோவன் .

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்