தமிழகம் மற்றும் புதுவையில் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்களுக்கு விடுமுறை

வரும் மே 14-ஆம் தேதி முதல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில்இயங்காதுஎன தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்களுக்கு விடுமுறை
படக்குறிப்பு,

மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்களுக்கு விடுமுறை

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது 'மன் கீ பாத்' என்ற நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் உரையாடும் போது, போக்குவரத்து விதிகளிலும், எரிபொருள் சிக்கனத்திலும் நாட்டு மக்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கிக்கிட முடியும் என்று தெரிவித்தார்' என்பதனை நினைவு கூர்ந்தது.

வாரத்தில் ஒருநாள் எரிபொருள் பயன்படுத்தாமல் சிக்கன நடவடிக்கை மேற்கொள்வது எளிதான காரியமல்ல என்றாலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வாரத்தில் ஒரு நாள் பிரதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பதன் மூலம் நாட்டுக்கு எங்களின் பங்களிப்பை செய்ய உள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், '' இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வருகிற மே மாதம் 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்'' என்று தெரிவித்தார்.

''ஆனால், பொது மக்களின் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு ஓவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு பணியாளர் பணியில் இருப்பார். பொது மக்களின் மிக அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே இந்த நடவடிக்கை உத்தேசிக்கப்பட்டுள்ளது'' என்று முரளி தெரிவித்தார்.

''பெட்ரோல் பங்க்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிப்பதால், எரிபொருள் பயன்பாடு குறைந்து சுற்றுச்சூழல் மாசு குறையும்'' என்று தெரிவித்த முரளி, ''இது மட்டுமல்லாமல் எரிபொருள் சிக்கனத்தால் அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டு, இந்தியா வளர்ச்சி பாதைக்கு செல்ல பெரும் உதவியாக அமையும்'' என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்