தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய டிஜிடல் உரிமம்

தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி நிறுவனத்திற்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

தொலைக்காட்சிகளுக்கான சேனல்களை வீடுகளுக்கு வழங்கும் கேபிள் டிவி சேவையை தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி கழகம் என்ற நிறுவனத்தின் மூலம் மாநில அரசு வழங்கிவருகிறது. 2007ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த நிறுவனம் 2011ஆம் ஆண்டிலிருந்து சென்னையைத் தவிர்த்த தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னையிலும் கேபிள் டிவி சேவையை வழங்கிவருகிறது.

இந்தியா முழுவதும் கேபிள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்திருந்த நிலையில், தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கும் இந்த உரிமத்தை வழங்க வேண்டுமெனக் கோரி, அந்த நிறுவனம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் 2012ஆம் ஆண்டில் விண்ணப்பித்தது.

ஆனால், அரசு நடத்தும் கேபிள் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்குவதற்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தயக்கம் காட்டியது. இது தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்குப் பல கடிதங்களை அனுப்பினார். பிரதமரைக்கூட இரண்டு முறை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் கேபிள் டிவி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, குஜராத், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் கேபிள் நிறுவனம் நடத்த அனுமதி கோரி, அவை நிராகரிக்கப்பட்டன. தற்போது நாட்டிலேயே முதல் முறையாக தமிழக அரசுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது.

"சில சேனல்களை மட்டும் நிறுத்துவது, சில சேனல்களை பின்னால் தள்ளுவது போன்றவற்றை அரசு கேபிள் செய்யக்கூடாது. புதிதாக சிறிய கேபிள் டிவி ஆபரேட்டர்களை உருவாக்கக்கூடாது. அரசின் வசம் இருப்பதால், ஆளும் கட்சியினர் புதிதாக கேபிள் தொழிலில் இறங்கி, ஏற்கனவே இருப்பவர்களுடன் மோதலில் ஈடுபடலாம். இது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும்" என்கிறார் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொது நல சங்கத்தின் தலைவரான சகிலன்.

சில நாட்களுக்கு முன்பாக, ராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி ஒன்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு கேபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

"ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகக்கூடும். அரசு தனக்குப் பிடிக்காத சேனல்களை இருட்டடிப்புச் செய்யலாம். இத்தனை ஆண்டுகளாக உரிமம் வழங்க மறுத்துவந்த மத்திய அரசு இப்போது எப்படி ஒப்புக்கொண்டது எனத் தெரியவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ராமசுப்பிரமணியன்.

தற்போது தமிழகம் முழுவதும் 28000 கேபிள் ஆபரேட்டர்கள் இயங்கிவருகின்றனர். தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு மட்டும் தற்போது 70.5 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

இதுவும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்