விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்ட பெரும் முயற்சிகளுக்கு இப்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் மல்லையாவை லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது. பின்னர், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமானச் சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இந்திய வங்கிகளிடம் இருந்து பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்த தவறிய குற்றச்சாட்டும் மல்லையாவின் மீது இருந்தது. நீதிமன்றங்களில் இவை தொடர்பான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டன் சென்றுவிட்டார்.

சிக்கலான நடைமுறைகள்

குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு காரணம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான, அயல்நாட்டிடம் ஒருவரை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் சிக்கலான செயல்முறைகள் தான்.

சர்வதேச ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் என பிரிட்டிஷ் அரசு, உலகின் சுமார் 100 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், இரண்டாவது பிரிவின் டைப் பி வகையில் இந்தியா வருகிறது.

பிரிட்டனில் இருக்கும் ஒருவரை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகள் அடங்கிய முழு தகவல்களும் பிரிட்டிஷ் அரசின் வலைதளத்தில் உள்ளது. இந்தியா இடம்பெற்றிருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் கோரிக்கைகளை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும், நீதிமன்றங்களும் பரிசீலித்து முடிவெடுக்கும்.

இதற்கான நடைமுறைகள் சிக்கலானவை, நீண்ட காலம் பிடிப்பவை.

பட மூலாதாரம், AFP

•ஒரு நாட்டின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்று, கோரிக்கையை பரிசீலிக்கும் அதிகாரம் கொண்ட வெளியுறவு அமைச்சரிடம் கருத்து கேட்கப்படும். அவர் ஒப்புக்கொண்டால் தான் அடுத்தகட்ட நடைமுறைகள் தொடங்கும்.

•கைது செய்வதற்கான வாரண்டுகளை பிறப்பிப்பது குறித்து ஒரு நீதிபதி தான் முடிவு செய்யமுடியும்.

•இதன்பிறகே ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கும்.

•அடுத்து, அயல்நாட்டின் கோரிக்கை குறித்த விசாரணை தொடங்கும்.

•அயல்நாட்டிடம், குறிப்பிட்ட அந்த நபரை ஒப்படைக்கலாமா என்பது பற்றி பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் முடிவு செய்வார்.

•எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனையும் உருவாகாமல் தவிர்க்கும் பொருட்டு, பிரிட்டிஷ் அரசின் அரசு தரப்பு வழக்கு தொடுக்கும் சேவையை (Crown Prosecution Service (CPS)) கோரும் நாடு, ஆரம்பகட்ட வரைவு கோரிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.

•பிறகு, பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் சர்வதேச குற்றவியல் பிரிவு இந்த கோரிக்கை பற்றி ஆலோசிக்கும். கோரிக்கை சரியானது என கண்டறியும் பட்சத்தில், பிறகு அது நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

•சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் கோரிக்கையை முன்னெடுக்க போதுமானது என்று நீதிமன்றமும் ஒப்புக்கொண்டால், கைது உத்தரவு பிறப்பிக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து தகவல்களும் கொடுக்கப்படவேண்டும்.

•கைது செய்யப்பட்ட பிறகு, விசாரணை தொடங்கும். விசாரணை முடிவடைந்த பின்னர், கோரிக்கை குறித்து நீதிபதிக்கு திருப்தி ஏற்பட்டால், அது வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

இத்தனைக்கும் பிறகும், ஒப்படைக்கக் கோரப்படும் நபர், வெளியுறவு அமைச்சகத்திற்கு கோரிக்கை அனுப்பும் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

கோரிக்கையை பலவித கோணங்களில் ஆராயும் வெளியுறவு அமைச்சகம் கோரப்படும் நபரை ஒப்படைப்பது தொடர்பான முடிவை எடுக்கும். மூன்று அடிப்படைகளின் கீழ், குறிப்பிட்ட அந்த நபரை திருப்பி அனுப்பவேண்டாம் என்ற முடிவும் எடுக்கப்படலாம்,:

•குறிப்பிட்ட நபர் கோரிக்கை விடுக்கும் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கும் அபாயம் இருப்பது,

•கோரிக்கை விடுக்கும் நாட்டுடன் சிறப்பு ஒப்பந்தம் ஏதாவது நடைமுறையில் இருந்தால்,

•கோரப்படும் அந்த நபர், வேறு ஒரு நாட்டில் இருந்து பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால்.

வெளியுறவு அமைச்சகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், அது பற்றிய முடிவு எடுக்கப்படவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட நபர் விடுதலை செய்யும் உத்தரவு வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், வெளியுறவு அமைச்சகம், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நாளை நீட்டிக்கச் செய்யலாம்.

இத்தனை நடைமுறைகளுக்கு பிறகும், முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் உரிமை, சம்பந்தப்பட்ட நபருக்கு உண்டு.

பட மூலாதாரம், Getty Images

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பார்த்தால், மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான பாதை, நீண்டதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் தெரிகிறது.

மல்லையாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதால், அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் இந்திய அரசு, பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தது.

பிரிட்டனில் இருக்க செல்லுபடியாகக்கூடிய கடவுச்சீட்டு இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பிரிட்டிஷ் அரசு பதிலளித்தாலும், மல்லையாவின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தின் அடிப்படையில் இந்திய அரசின் கோரிக்கையை பரிசீலிக்க அந்நாடு முடிவு செய்தது.

இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்