தினகரன் நீக்கம், சசிகலா குடும்பத்தின் நாடகம் என ஓ.பி.எஸ். தரப்பு குற்றச்சாட்டு

  • 20 ஏப்ரல் 2017

அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டுமென்றால் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியை வீட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஓ. பன்னீர்செல்வம் அணியினர் முன்வைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தினகரன் நீக்கம்: சசிகலா குடும்பத்தின் நாடகம்?

தற்போது தினகரன் ஒதுக்கப்பட்டிருப்பது சசிகலா குடும்பத்தின் நாடகம் என்றும் கூறியுள்ளனர்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆளும் கட்சியான அண்ணா தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் உடைந்தது. இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில், சசிகலா பிரிவுக்கு தலைமை வகித்த டிடிவி தினகரனை ஓதுக்கிவைப்பதாக அந்த அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இரு அணிகளும் இணைய விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

இதன் பிறகு, விரைவில் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்து, இரு அணிகளும் இணைவதற்கான நிபந்தனைகளை முன்வைத்தார்.

முதலாவதாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்களோடு கட்சியினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிப்பு வெளியிட வேண்டுமென்றும் தற்போது சசிகலாவை பொதுச் செயலாளர் என்றும் தினகரனை துணைப் பொதுச்செயலாளர் என்றும் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பிரமாண வாக்குமூலத்தைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் கே.பி. முனுசாமி குறிப்பிட்டார்.

இரண்டாவதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாநில அரசு கோரிக்கைவிடுக்க வேண்டுமென அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இரு அணிகளும் இணையும்போது, எடப்பாடி கே. பழனிச்சாமியே முதல்வராகத் தொடர்வார் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதைச் சுட்டிகாட்டியிருக்கும் கே.பி. முனுசாமி, தங்கள் தரப்பிலிருந்து முதல்வர் பதவியைக் கோரவில்லை என்று கூறினார்.

பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ஓ. பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த ஜெயக்குமார்.

தினகரன் ஒதுக்கப்பட்டிருப்பது தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டதை இன்று காலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்திருந்தார். அதனைச் சுட்டிக்காட்டிய முனுசாமி, இப்படி அவமானப்படுத்தினால், எப்படிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தற்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு மக்களின் ஆதரவு இருப்பதால், இரு அணிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்த நடக்கப்போவதாகக் கூறி, தொண்டர்களின் ஆதரவைப் பெற எதிர் அணியினர் முயற்சிப்பதாகவும் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா மரணமடைந்து, கருணாநிதி உடல்நலம் குன்றியுள்ள நிலையில், தமிழகத்தின் சக்திவாய்ந்த தலைவராக ஓ. பன்னீர்செல்வம் உருவெடுத்து வருவதாகவும் முனுசாமி கூறினார்.

படத்தின் காப்புரிமை STRINGER

எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர் என்று சுட்டிக்காட்டிய முனுசாமி, சசிகலா குடும்பத்திற்குள் நிலவும் மோதலில் தினகரன் முன்னணிக்கு வருவதை விரும்பாத சசிகலா, திவாகரன், நடராஜன் ஆகியோர் இணைந்து இப்படி ஒரு நாடகமாடுவதாகவும் அந்த நாடகத்திற்கு எடப்பாடி துணைபோகக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தை எப்படி நடக்குமெனக் கேள்வியெழுப்பிய முனுசாமி, தேர்தல் வந்தால் ஓ. பன்னீர்செல்வமே முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என்று குறிப்பிட்டார்.

சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இணைப்பு சாத்தியமில்லை: ஓ. பன்னீர்செல்வம்

சசிகலாவை ஏன் ஒதுக்கவில்லை?

பேச்சுவார்த்தை துவங்கினால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கக் கோரிக்கை விடுக்கலாம் என்ற அச்சத்தினாலேயே பேச்சுவார்த்தை நடக்கக்கூடாது என எதிர்த்தரப்பு விரும்புவதாக முனுசாமி குற்றம்சாட்டினார்.

இரு அணிகளும் இணையும் பட்சத்தில், யாருக்கு எந்தப் பதவி என்பதை முடிவுசெய்யும் இடத்தில் பன்னீர்செல்வமே இருப்பார் என்றும் தினகரனை ஒதுக்கிவிட்டதாகச் சொல்பவர்கள், சசிகலா ஒதுக்கப்பட்டுவிட்டதாக ஏன் சொல்லவில்லையென்றும் முனுசாமி கேள்வியெழுப்பினார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வைத்தால், ஓ.பன்னீர்செல்வம்தான் வெற்றிபெறுவார் என்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான விஜயபாஸ்கரை யாரோ பாதுகாப்பதாகவும் முனுசாமி குற்றம் சாட்டினார்.

கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிறிது நேரத்தில் எதிர் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்து, ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது யார் என்பதை அவர் கூறவில்லை.

ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லையென்று கேள்வியெழுப்பிய வைத்தியலிங்கம், தற்போது நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு இருப்பதால், நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று கூறினார்.

அமைச்சர்கள் சிலர் வாய்தவறி பேசியிருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட வைத்தியலிங்கம், கட்சியின் ஒற்றுமைக்காக பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறினார்.

ஜெ மறைவும், அதிமுகவில் தொடரும் குழப்பமும் - ஒரு காலவரிசை

அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்