ஹெபடிட்டிஸ் தொற்று நோயை ஒழிக்க உலகளாவிய திட்டம்

  • 22 ஏப்ரல் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

ஹெபடிட்டிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி தொற்றை ஒழிக்க, உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும், எச்.ஐ.வி மற்றும் காசநோய் போன்று உலகளவில் அதிகமானோரை ஹெபடிட்டிஸ் கொல்கிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் ஹெபடிட்டிஸ் நோயினால் மாண்டவர்களின் எண்ணிக்கை 1.34 மில்லியன் பேர் என புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

பி அல்லது சி வைரஸ் தொற்று காரணமாக தீவிர ஹெபடிட்டிஸ் நோயினால் சுமார் 325 மில்லியன் மக்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஹெபடிட்டிஸ் நோய் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், அனைவரையும் அது சென்றடையவில்லை.

ஹெபடிட்டிஸ் தொற்றுகள் எப்போதும் அடையாளம் காணப்படுவதில்லை என்பதும் இதற்கு காரணம்.

படத்தின் காப்புரிமை Getty Images

2015 ஆம் ஆண்டில் ஹெபடிட்டிஸ் பி தொற்றுடையவர்கள் 9 சதவிகிதத்தினரும், ஹெபடிட்டிஸ் சி தொற்றுடையவர்கள் 20 சதவிகிதத்தினரும் மட்டுமே அடையாளம் காணப்பட்டார்கள் .

அதன் விளைவு, மில்லியன் கணக்கான மக்கள் தீவிர கல்லீரல் நோய், புற்றுநோய் மற்றும் இறுதியாக மரணத்தை தழுவும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கல்லீரல் அழற்சி- அமைதியாகக் கொல்லும் நோய்

வைரல் ஹெபடிட்டிஸ்

ஏ, பி, சி, டி, இ என அறியப்படும் வைரஸின் பிற வெவ்வேறு ஐந்து வடிவங்கள் வைரல் ஹெபடிட்டிஸை குறிக்கிறது.

ஹெபடிட்டிஸ் பி, சி மற்றும் டி போன்ற வகைகள் ரத்தம் உள்பட தொற்று பாதிப்புள்ள உடலிருந்து வெளியேறும் திரவங்களை மற்றவர்கள் தொடும்போது அல்லது தொடர்பில் வரும் போது பரவும், மற்ற வடிவங்களான ஹெபடிட்டிஸ் ஏ மற்றும் ஹெபட்டிடஸ் இ ஆகியவை அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மூலம் பரவும்.

ஆஃப்ரிக்கா மற்றும் மேற்கு பசிபிக்கில் உள்ள சில பகுதிகள் உள்பட உலகின் சில பகுதிகளில், ஹெபடிட்டிஸ் பி மற்றும் சி தொற்றுகள் என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும்.

ஹெபடிட்டிஸ் பி தொற்றுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படுகின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது, எச் ஐ வி சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் டெனோபஃபோவிர் என்ற மருந்தை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

ஆனால், ஹெபடிட்டிஸ் சி தொற்றை நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும்.

ஹெபடிட்டிஸ் தொடர்பான சேவைகளை சில நாடுகள் வெற்றிகரமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சரியான நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஹெபடிட்டிஸ் தடுப்பு மருந்து வழங்குவதில் சுமார் 96 சதவிகிதத்தை சீனா எட்டியுள்ளது. 2015ல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான பாதிப்பு என்ற ஹெபடிட்டிஸ் பி கட்டுப்பாட்டு இலக்கை சீனா எட்டியுள்ளது.

கல்லீரல் அழற்சி- அமைதியாகக் கொல்லும் நோய்

மங்கோலியாவில் சுமார் 98 சதவிகித ஜனத்தொகை உள்ளடங்கிய தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தில் ஹெபடிட்டிஸ் பி மற்றும் சி ஆகிய மருந்துகளை உள்ளடக்கியதன் மூலம் ஹெபடிட்டிஸ் சிகிச்சையில் அந்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

எகிப்தில் சந்தை விலை போட்டி காரணமாக ஹெபடிட்டிஸ் சி-யை மூன்று மாதத்தில் குணப்படுத்தும் மருந்தின் விலை 2015ல் 900 டாலர்களாக இருந்த நிலையில், 2016ல் 200 டாலர்களுக்கு குறைவாக குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த காட்பிரைட் ஹிர்ன்ஷெல் கூறுகையில்,''வைரல் ஹெபடிட்டிஸ் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில், நாம் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கிறோம்''என்கிறார்.

''பல உலக நாடுகள் ஹெபட்டிடஸ் சேவைகளை தேவைப்படும் மக்களுக்கு அதை வழங்க முயற்சித்து வருகிறார்கள். நோய் கண்டறியும் சோதனைக்கு 1 டாலருக்கு குறைவாகவே செலவாகிறது. 200 டாலருக்கு குறைவாக ஹெபடிட்டிஸ் சி-யை குணப்படுத்த முடியும்.

உலக ஹெபடிட்டிஸ் கூட்டமைப்பை சேர்ந்த ரக்கேல் பெக்,'' ஹெபடிட்டிஸ் பி-யை தடுக்கும் தடுப்பூசிகளும் மற்றும் ஹெபடிட்டிஸ் சி-யை குணப்படுத்தும் மருந்துகளும் இருக்கும் போதே இன்று 325 மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் புற்றுநோயை உருவாக்கும் நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்'' என்று கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்