வைகை நீரை தெர்மோகோல் அட்டையை வைத்து மூடும் முயற்சி தோல்வி !

  • 22 ஏப்ரல் 2017

தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகிவருகிறது.

தேனி மாவட்டத்தில் வைகை நதியின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் வைகை அணை, 71 அடி உயரம் உடையது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால், தற்போது அணையின் நீர்மட்டம் 21 அடியாக குறைந்துவிட்டது.

இங்கிருந்துதான், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதால் இந்த மாவட்டங்கள் தற்போது பெரும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கோடைக்காலத்தில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க பொதுப்பணித் துறையினர் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டினர். இதன்படி, நீர் மட்டத்தின் மீது தண்ணீரில் மிதக்கும் தன்மையுடைய தெர்மகோல் அட்டைகளை மிதக்கச்செய்து தண்ணீர் மட்டத்தை மூடிவிட்டால், நீர் ஆவியாவது தடுக்கப்படும் என அவர்கள் கருதினர்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Rajkrrishnan R
Image caption வைகை அணை

சுமார் 300 தெர்மோகோல் அணைப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு, 2-3 அட்டைகள் ஒன்றாக ஒட்டப்பட்டு, அவை படகின் மூலம் அணையின் நீர்ப்பகுதியில் வீசப்பட்டன.

ஆனால், அணைப் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக, இந்த தெர்மோகோல் அட்டைகள் உடனடியாகக் கரை ஒதுங்கின. சில அட்டைகள் உடைந்து தூள்தூளாகி அணையின் பல்வேறு பகுதிகளில் ஒதுங்கின.

பத்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு

சுமார் பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் கொண்டு மூடுவதற்காக பரீட்சார்த்த முறையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்காக பத்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு தெரிவித்தார்.

ஆனால், இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானதும் சமூக வலைதளங்களில் இது பெரிய அளவில் கேலிக்குள்ளானது,

இது குறித்துக் கேட்பதற்காக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் என். வெங்கடாசலத்தை தொடர்புகொண்டபோது, தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடுவதென்பது பரீட்சார்த்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஊடகமாக கேலி செய்தால் என்ன அர்த்தம்? என்று கோபமாகப் பதிலளித்தார்.

இதற்குப் பிறகு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தெர்மோகோல் அட்டைகள் லேசாக இருந்ததால் காற்றில் பறந்துவிட்டதாகவும் அவற்றைச் சுற்றி கட்டைகளை அடித்து வீசினால், பறக்காமல் இருக்கும் என ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நீர் நிலைகளில் கறுப்புப் பந்துகளைக் கொண்டு நிரப்புவதைப் போல இங்கும் செய்யும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தெர்மோகோல் திட்டத்தை அதிகாரிகள்தான் தனக்குக் கூறியதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து வைகை அணையின் செயற்பொறியாளர் முத்துப்பாண்டியிடம் கேட்டபோது, தான் இது குறித்துப் பேசவிரும்பவில்லை என்று கூறினார்.

1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வைகை அணை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பாசன வசதியையும் மதுரை, ஆண்டிப்பட்டி பகுதிகளுக்கு குடிநீரையும் வழங்கி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்