பாகுபலி - 2க்கு எதிரான போராட்டம் வாபஸ்; 28 ஆம் தேதி படம் வெளியாகிறது

  • 22 ஏப்ரல் 2017

காவிரி நீருக்கான போராட்டத்தின்போது கன்னட மக்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர் நடித்திருந்த பாகுபலிபடத்தின் 2ஆம் பாகத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Facebook

2015 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. 250 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கட்டப்பா என்ற பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''

இந்நிலையில், 2008ஆம் ஆண்டில், காவிரி நீருக்காக தமிழ்நாட்டில் திரைப்பட நடிகர்கள் போராட்டம் நடத்தியபோது, சத்யராஜ் கன்னட மக்களைப் பற்றிச் சில கண்டிக்கத்தக்க கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் அதனால், அந்தப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க முடியாது எனவும் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவாலி வடல் பக்ஷ உள்ளிட்ட அமைப்புகள் கூறின. படம் வெளியாகும் ஏப்ரல் 28ஆம் தேதியன்று முழு அடைப்புக்கும் அழைப்புவிடுத்தன.

இந்நிலையில், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட சத்யராஜ், தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

படத்தின் காப்புரிமை SS Rajamouli

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கன்னட அமைப்பினர் இன்று காலையில் விவாதித்தனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சத்யராஜின் வருத்தத்தை ஏற்று படத்திற்கான தங்களது எதிர்ப்பை விலக்கிக்கொள்வதாக கன்னட சலுவாலி வடல் பஷ அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

சத்யராஜ் எதிர்காலத்தில் தன் வார்த்தைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் கன்னடப் படங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டால் அதற்கு எதிர் நடவடிக்கைகள் இங்கேயும் இருக்குமென்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Twitter

கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தனது விருமாண்டி பட வசனமான மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனிதன் என்ற வசனத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் கமல், சிக்கலான சூழலில் பகுத்தறிவுடன் செயல்பட்டதற்காக வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

இதற்கு, சத்யராஜின் மகன் சிபிராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்