விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்: எடப்பாடி பழனிச்சாமி

  • 23 ஏப்ரல் 2017

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

Image caption தமிழக விவசாயிகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி

போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், 'விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்துவேன்' என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

Image caption தமிழக முதல்வருக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்

தமிழக முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவருமான அய்யாக்கண்ணு கூறுகையில், ''எங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வரிடம் அளித்து, அது குறித்து விரிவாக விளக்கியுள்ளளோம்'' என்று தெரிவித்தார்.

தங்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக தமிழக முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்த அய்யாக்கண்ணு, ''நாங்கள் பிரதமரை சந்தித்தாலே 99% வெற்றிதான்; தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சியினரும் போராட்டத்தை கைவிடுமாறு எங்களை கேட்டுக் கொண்டுள்ளனர்'' என்று மேலும் தெரிவித்தார்.

எலிக்கறி, சாட்டையடி, மண்சோறு: தமிழக விவசாயிகளின் நூதன போராட்டங்கள் (புகைப்பட தொகுப்பு)

மேலும் அவர் கூறுகையில், ''பிரதமரை சந்திக்க முடியவில்லை என்றால், போராட்டக்குழுவில் உள்ள மற்றவர்களுடன் ஆலோசனை செய்து போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து அறிவிப்போம்'' என்று குறிப்பிட்டார்.

Image caption செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய விலை கொடுத்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 41 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மண்சோறு உண்பது, எலிக்கறி, சாட்டையடி, நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அலுவலகம் எதிரே விவசாயிகள் நிர்வாண போராட்டம்

டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்

டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்