விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்

  • 25 ஏப்ரல் 2017

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போயிருக்கும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி தி.மு.கவின் கூட்டணி கட்சிகள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க., மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் கடைகளும் தமிழ்நாடு முழுவதும் 21 லட்சம் கடைகளும் அடைக்கப்பட்டிருப்பதாக வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஆனால், அரசுப் பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல ஓடின. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவை பல இடங்களில் வழக்கம்போல இயங்கின.

லாரி உரிமையாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதால், சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறிச் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று படப்பிடிப்புகளை ரத்துசெய்துள்ளது.

திருவாரூரில் ஸ்டாலின் தலைமையில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.கவினர் ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னையில், சைதாப்பேட்டையில் நடந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன், சி.பி.எம்மின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

தில்லியில் 41 நாட்களாக போராட்டம் நடத்திவந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று காலையில் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுச்சேரியிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு அரசுப் பேருந்து மீது கல்வீசப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரயிலை மறித்தனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் பெட்ரோல் பங்குகள் பங்கேற்கவில்லை என்பதால் அவை திறந்திருந்தன.

இது குறித்த பிற செய்திகள்:

விவசாயிகள் பிரச்சனை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்