சசிகலா பேனர்களை நாங்களே அகற்றினோம்; ஓ.பி.எஸ். அணி கோரிக்கைக்காக அல்ல: அமைச்சர்

  • 26 ஏப்ரல் 2017

அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்களை நாங்களேதான் அகற்றினோமே தவிர, ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கை அதற்குக் காரணமல்ல என எதிர் அணியைச் சேர்ந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் இன்று காலையில் அகற்றப்பட்டு ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம் தாங்களாகவே அந்த பேனர்களை அகற்றியதாகத் தெரிவித்தார்.

தினகரன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு மற்றும் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, அவரிடமிருந்து தாங்கள் ஒதுங்கிவிட்டதாகவும் அவரும் தங்களிடமிருந்து ஒதுங்கிவிட்டதாகவும் தன் மீதான வழக்கை தினகரனே சந்திப்பார் என்றும் அவர் கூறினார்.

இரு அணிகளும் இணைவது தொடர்பாக நேற்று தங்களுடைய தரப்பைச் சேர்ந்த வைத்திலிங்கத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இன்று பதில் சொல்வதாக சொன்னவர்கள் இதுவரை தொடர்புகொள்ளவில்லையென்றும் சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்கள் அகற்றம்

இதற்கிடையில், பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழல் உருவாகிவருவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

தாங்கள் இதுவரை பேச்சுவார்த்தையே துவங்காத நிலையில், தங்களுடைய விருப்பப்படி தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து இதுபோன்ற இணக்கமான சூழல் வரும்போது தங்களுடைய குழு பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என்றும் முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்