டிடிவி தினகரனிடம் சென்னையில் விசாரணை

  • 27 ஏப்ரல் 2017

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கும் அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் டெல்லி காவல்துறையால் இன்று சென்னை அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அ.தி.மு.க. தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டுவருவதால், அக்கட்சியின் பெயரும் இரட்டை இலைச் சின்னமும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை இலைச் சின்னத்தை தங்கள் அணிக்குப் பெறுவதற்காக சசிகலா அணியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டிடிவி தினகரன், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லிலி காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை காவல்துறை கைதுசெய்ததது. அவரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கில் டிடிவி தினகரனை விசாரிக்க முடிவுசெய்த டெல்லி காவல்துறை, 19ஆம் தேதியன்று அவருக்கு சம்மனை நேரில் வந்து அளித்தனர். இதையடுத்து 22ஆம் தேதியன்று டெல்லி சென்ற தினகரன் சாணக்யபுரி காவல் நிலையத்தில் ஆஜரானார். 25ஆம் தேதிவரை நான்கு நாட்கள், சுமார் 71 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு 4வது நாள் விசாரணையின் முடிவில் தினகரன் கைதுசெய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைதுசெய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கைதான இருவரும் புதன்கிழமையன்று தில்லி தீஸ்ஹஸாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 7 நாள் வழங்க வேண்டுமென காவல்துறை கோரியது. இதையடுத்து 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

லஞ்சம் கொடுப்பதற்காக பயன்பட்டதாகக் கூறப்படும் பணம் சென்னையிலிருந்து எப்படி டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டது என்பதை அறிவதற்காக இன்று தினகரன் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டார்.

முதலில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ராஜாஜி பவனிலும் பிறகு அடையாறில் உள்ள அவரது இல்லத்திலும் தினகரன் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதற்குப் பிறகு அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, தினகரனின் இல்லத்திலும் அலுவலகத்திலும் வைத்து விசாரிக்கப்பட்டார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், அ.தி.மு.கவில் 87 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்குகளின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இவையும் படிக்கலாம்

இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி