'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

  • அகத்தியலிங்கம் சு.பொ
  • எழுத்தாளர்
அண்ணா

பட மூலாதாரம், Gnanam

படக்குறிப்பு,

சட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்)

( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ் வெளியிட்டது. அதை மீண்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்)

"ஐம்பதாண்டு திராவிட ஆட்சி" என்ற சொற்றொடரே சரியா ?

திராவிட இயக்கம்' தமிழ்ச் சமூகத்தின் நியாயமான தேவையிலிருந்து முகிழ்த்தது .

வைதீக எதிர்ப்பு என்பது இரண்டாயிரமாண்டு தமிழ்சமூகப் பாரம்பரியம். வைதீக எதிர்ப்பு ,சுயமரியாதை ,பகுத்தறிவு ,தமிழ்பற்று ,சாதி மறுப்பு ,மாநில உரிமை ,ஏழ்மையை ஒழித்தல் போன்றவற்றோடு 'காங்கிரஸ் எதிர்ப்பும்' அதன் உள்ளுறை .

ஆர் எஸ் எஸ்சின் அரசியல் பிரிவான 'ஜனசங்கம்' /'பாரதிய ஜனதா' போல் திராவிடர் கழகத்தின் அரசியல் பிரிவாக திமுக தோன்றவில்லை . தனிக் கட்சியாகவே உருவாக்கப்பட்டது .

1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்தார் ; ஐம்பதாண்டு ஆகிறது . திமுக 19 ஆண்டுகள் . அதிமுக 31 ஆண்டுகள் .

இரண்டையும் சமதட்டில் வைப்பதோ -எம் ஜி ஆர் , ஜெயலலிதா ஆட்சிகளைச் சமமாகப் பாவிப்பதோ சரியல்ல . ஜெயலலிதா ஆட்சி பலவிதங்களில் பாஜகவின் சாயல்களைக் கொண்டிருந்தது .மதமாற்றத் தடை , ஆடு கோழி பலியிடத் தடை என பலவற்றைச் சொல்லலாம்.

முதல் வரிசையில் தமிழகம்

பிற மாநிலங்களோடு தக்க புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் தென் மாநிலங்கள் -அதிலும் தமிழகமும் , கேரளமும் வளர்ச்சியில் முன் நிற்கும் . குறிப்பாக மனித வளக் குறியீட்டில் தமிழ்நாடு முதல் வரிசை மாநிலமே .

அரிசி பஞ்ச எதிர்ப்பு திமுக ஆட்சிக்கு வர உதவிய காரணிகளில் ஒன்று . ஐம்பதாண்டுகளாய் அரிசிப் பஞ்சம் இல்லை .சமூகநீதி இடஒதுக்கீடு வழங்கியதில் நிச்சயம் தமிழகம் சாதித்திருக்கிறது . அடித்தட்டு மக்களுக்கு பயன்பட்ட சமூகநலத்திட்டங்களிம் தமிழகம் முன்மாதிரியே .கல்வி ,போக்குவரத்து ,ஆரம்ப சுகாதாரம் போன்றவைகளை ஒப்பீட்டளவில் பாராட்டலாம் .

திமுக ஆட்சிகாலம் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் காலமாகவும், அதை முடிக்கிற போது அதிமுக ஆட்சியாகவும் அமைந்துவிடுகிறது . எடுத்துக்காட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் , வணிக வளாகம் .மெட்ரோ முதலியன.

சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சென்னையில் ஒரு பள்ளியில் சிறிதாக துவங்கிய மதிய உணவுத் திட்டம் -காமராஜர் காலத்தில் மாநிலம் முழுதும் சிறிய அளவில் விரிவாக்கப்பட்டு , எம் ஜி ஆரால் மிகப்பெரிய சத்துணவுத் திட்டமானது .

மகளிருக்கான சொத்துரிமை ,மகளிருக்கான சமூகநலத் திட்டங்களுக்கு திமுக ஆரம்பம் செய்தது ;பின்னர் மேலும் முன்னெடுக்கப்பட்டது . போதாமையும் உண்டு ; போய்ச் சேர வேண்டியதும் நெடுந்தூரம் .

"கணவன் சொன்னாலும் தாய்மார்கள் கேட்க மாட்டார்கள் ; எனக்குத் தான் வாக்களிப்பார்கள்" என எம் ஜி ஆர் சொன்னது வேடிக்கையாகத் தோன்றலாம் ; பெண்களை சுதந்திரமாக வாக்களிக்கச் செய்தது சாதனையே. வட மாநிலங்களில் இன்னும் கணவனை மீறி மனைவி வாக்களிக்க முடியாது.

ஆனால் பெரியாரின் பெண்ணியப் பார்வையை பயிற்றுவிப்பதில் இருகழகங்களும் பின்தங்கிவிட்டன.

கோட்டையில் கொடி ஏற்றும் உரிமை

கருணாநிதி கொடியேற்றுகிறார்

பட மூலாதாரம், Arunsubasundaram

படக்குறிப்பு,

முதன் முறையாக சுதந்திர தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பு முதல்வருக்கு கிடைத்தது - 1969ல் கருணாநிதி கோட்டையில் கொடி ஏற்றுகிறார்

'காஞ்சி' ஏட்டில் அண்ணா எழுதிய கட்டுரையில் மாநில உரிமையை தன் இறுதிக் கனவாய் சொல்லியிருப்பார் ; மாநில உரிமையில் ஆரம்பத்தில் திமுக காட்டிய அக்கறை பின்னர் இல்லை . தமிழ்நாடு என பெயர் சூட்டியது , கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பு போன்றவை தவிர சொல்ல ஏதுமில்லை .

இக்காலத்தில் மாநில உரிமைகள் பெருமளவு அரிக்கப்பட்டுள்ளன . திமுக மத்திய ஆட்சியில் பங்காளியாய்ப் போனதால் மாநில உரிமைக்குரலை அடக்கியே வாசித்தது .

அதிமுக எப்போதும் மாநில உரிமைக்கு பெரிதாய் குரல் கொடுத்ததில்லை . சில சந்தர்ப்பங்களில் இருகழகங்களுமே மத்திய அரசை உறுதியாய் எதிர்த்துள்ளன . எடுத்துக்காட்டு- இடஒதுக்கீடு .

தோல்விப் பட்டியல்

தமிழ் மொழிக்காக போராடிய வளமார் பாரம்பரியமிக்க கழக ஆட்சிகளில் தமிழை பயிற்று மொழி, ஆட்சி மொழியாக்குவதில் ஏற்பட்ட தோல்வி முக்கியமானது .

உலக மயமாக்குதல் தொடங்கிய எண்பதுகளில் கல்வி வியாபாரம் கொழுத்தது . எம் ஜி ஆட்சி காலத்தில் கல்வியும் பணமீட்டும் தொழிலானது; பின்னர் மேலும் சீரழிந்தது . தமிழின் வீழ்ச்சியில் கல்வி வியாபாரத்தின் பங்கும் அதில் இருகழகத்தவர் பங்கும் சேர்த்தே பார்க்கப்பட வேண்டும் .

நகர்மயமாதலில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது ; இதன் மறுபக்கமான விவசாய அழிவு , நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ரியல் எஸ்டேட் ; மணல் ,கனிமக் கொள்ளை அனைத்திலும் இரு கழகங்களும் போட்டிபோட்டு ஈடுபட்டன .

வனப் பாதுகாப்பு ,நீர்நிலை பாதுகாப்பு மிகப்பெரிய தோல்வியே !

தொழிலாளர் , விவசாய நலன் இவற்றில் சில தேன்தடவிய அறிவிப்புகளைத் தவிர சொல்லும் படியாக இல்லை. நில மறுவிநியோகத்தில் கிட்டத்தட்ட ஏமாற்றமே .தொழிலாளர் மீதான தாக்குதல் , ஜனநாயக உரிமை மறுப்பு என உறுத்தும் ரணங்கள் அதிகம் .

எம் ஜி ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பொழுது கருணாநிதி மீது சாதிசார்ந்து இழிவு வசைமாரியாய்ப் பொழியப்பட்டது .'சாதி எதிர்ப்பு' மெல்ல நீர்க்கத் தொடங்கியது. .

' ஆணவக் கொலைகளும்' ' தீண்டாமை பேயாட்டமும் ' தமிழகத்துக்கு தலைகுனிவையும் , இந்துத்துவ கூட்டத்துக்கு மகிழ்ச்சியையும் உருவாக்கி உள்ளது .கலைஞரின் கடைசி ஆட்சி காலத்தில் 'சமூகநீதிக்கென தனித்துறை' உருவாக்கப்பட்டும் செயல்படவே இல்லை .ஜெயலலிதா இப்பிரச்சனைகளின் மவுனமாக சங்பரிவார் நிலையையே மேற்கொண்டார் .

ஊழல், குடும்ப ஆட்சி, ஈழம்

ஊழல் காலங்காலமாக ஆட்சியாளர்களோடு ஒட்டிப் பிறந்த நோய்தான் ; தாராளமயமும் ,உலகமயமும் கொள்ளையின் வாசலை அகலத் திறந்தன ; இரு கழகங்களும் போட்டி போட்டு ஊறித் திளைத்தன .

தீமை பயக்கும் உலக மயத்தை காங்கிரஸ் பாஜக போல் தீவிரமாக அமலாக்கியதில் இரு கழகங்களும் ஒன்றே .

ஒப்பீட்டளவில் பெயரளவுக்கேனும் உட்கட்சி ஜனநாயகம் திமுகவில் மிச்சமிருக்கிறது ; அதிமுகவில் கிட்டத்தட்ட இல்லை. முகம் சுளிக்கச் செய்யும் தனிநபர் துதியும் ,காழ்ப்பும்,வசையும் இரு கழகங்களுக்கும் உரியன .

முரசொலி மாறனோ ,ஸ்டாலினோ பொறுப்புக்கு வந்ததை புரிந்து கொள்ள முடியும் ; ஆனால் ,தயாநிதி மாறன் , அழகிரி,கனிமொழி இவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது 'குடும்ப ஆட்சி' எனும் பெருங்களங்கத்தை திமுகவின் மீது ஆழப்பதித்தது .

கருணாநிதி எதிர்ப்பு , குடும்ப ஆட்சி எதிர்ப்பு என்கிற ஒற்றை அஜெண்டாவில் பிறந்து வளர்ந்து ஆண்ட அதிமுக லட்சணம் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பல்லிளிக்கிறது ; சசிகாலா குடும்பம் ,பன்னீர் குடும்பம் என நாற்றமெடுக்கிறது .

'தமிழீழம்' தமிழகத்தையும் உலுக்கிய பிரச்சனை .எம்ஜிஆர் ,கருணாநிதி ,ஜெயலலிதா ஆகிய மூவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நிலை எடுக்க நேரிட்டது .

கடைசி நொடிவரை எதிர்த்த ஜெயலலிதா ஒரே நாளில் 'ஈழத்தாய்' வேஷத்துக்கு பொருந்திப் போனதும், ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த கருணாநிதி 'வில்லன்' அளவுக்கு சித்தரிக்கப்பட்டதும் வரலாற்று நகை முரணே !

தீவிர தமிழ் தேசியமும் இந்துத்துவாவும் பேசும் "திராவிட எதிர்ப்பு" இணையும் புள்ளி ஒன்றே . அது கழகங்களை சீர்குலைப்பதற்கான வலதுசாரி முயற்சி.

இடதுசாரிகள் எதிர்ப்பு என்பது கழகங்கள் வீரியமிக்க பாரம்பரியத்தை கைவிட்டுவிடாமல் முற்போக்கு திசையில் மேலும் நடை போடச்செய்யவே ! இன்னும் வலுவான வாக்கு வங்கி இவர்களிடமே இருக்கிறது . தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இரு கட்சிக்கும் ஆட்கள் உண்டு ; எப்படி இருப்பினும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தேவையும் முடிந்துவிடவில்லை .

"இந்திய ஒன்றியத்தில்" பறிபோன மாநில உரிமைகளை மீட்கவும், இன்னும் அதிக உரிமை பெறவும் , மதச்சார்பின்மை ,பன்முகப்பண்பாடு ,ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவைகளை வென்றெடுக்கவும், சூழும் பாசிச நெருப்பிலிருந்து தப்பவும் இடதுசாரிகளும் ,மாநிலக்கட்சிகளும் போர்க்களத்தில் ஒன்றிணைய காலம் கட்டளையிடுகிறது.

( கட்டுரையாளர் ஒரு இடது சாரி சிந்தனையாளர்)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: