மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு: சர்ச்சை தொடர்கிறது

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்பு வகுப்புகளில், கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இடங்களை ரத்து செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன.

இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் முதுநிலைக் கல்வி முறைப்படுத்துதல் விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதுநிலை மருத்துவக் கல்வி வகுப்புகளுக்கும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்திற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், 2015ஆம் ஆண்டில் அனுமதியளித்தது. அதே நேரத்தில் தொலைதூரப் பகுதிகள், மலை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளித்து அவர்களுக்கு முதுகலை இடங்கள் கிடைக்க வகைசெய்யலாம் என்று கூறியது.

இருந்தபோதும் தமிழகத்தில் இந்த முறை பின்பற்றப்படாத நிலையில், ராஜேஷ் வில்ஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். கிராமப்புற மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை பொதுப் பிரிவுக்குக் கொண்டுவந்து, தன்னைப் போல தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் இடம் கிடைக்க வகை செய்ய வேண்டுமென அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, "மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது'' என்று கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இதையெதிர்த்து தமிழக அரசின் சார்பிலும் மருத்துவர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே. சசிதரன், எஸ்.எம். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின் அடிப்படையிலேயே இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு நடைமுறை பல ஆண்டுகளாக இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். நீதிபதி சசிதரன், முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதனால், இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு அனுப்பப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தனி நீதிபதியின் உத்தரவு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மருத்துவ இயக்குனரக வளாகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 16 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

"மருத்துவ முதுகலைப் படிப்பு இடங்களில் முன்னுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கிராமப்புறங்களுக்கு வேலைக்குச் செல்கிறோம். இரு ஆண்டுகள் இப்போது நாங்கள் பொதுப்பிரிவில்தான் போட்டியிட வேண்டுமென சொன்னல் எப்படி" என கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சரவணகுமார்.

இதையும் படிக்கலாம்:

மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்க தடை

முதுகலைப் படிப்பில் முன்னுரிமை வழங்காவிட்டால் கிராமப்புறங்களில் பணியாற்ற யாருமே வரமாட்டார்கள் என சுட்டிக்காட்டுகிறார் சரவணக்குமார்.

2014ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம், அரசு மருத்துவர்களுக்கென இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதிசெய்தது.

"இதன் அடிப்படையிலேயே தமிழக உயர்நீதிமன்றமும் இனி தீர்ப்பு வழங்கும். இன்று நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வும் உச்ச நீதிமன்ற உத்தரவையே உறுதிப்படுத்தும். ஆகவே, தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி இதற்கான அவசரச்சட்டத்தை இயற்றச் செய்ய வேண்டும்" என்கிறார் சமூக சமத்துவதற்கான மருத்துவ சங்கத்தின் செயலாளரான மருத்துவர் ரவீந்திரநாத்.

இல்லாவிட்டால் மாநிலத்தில் மருத்துவக் கட்டமைப்பே சீர்குலையும் என்கிறார் ரவீந்திரநாத்.

தற்போது தமிழகத்தில் 1603 மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இதில் பாதி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. மீதி இருக்கும் இடங்களில் பாதி இடங்கள் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுவருகின்றன.

இவையும் படிக்கலாம்

பாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்?

`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்