தலித்துகளுக்கு நன்மை செய்தனவா திராவிட ஆட்சிகள்?

  • 4 மே 2017

கடவுள் இருக்கிறார் என்று நம்பும் ஒருவர் அதை நேரடியாக அறிய முற்படும்போது அதுவொரு நம்பிக்கையே தவிர ஸ்தூலமானதல்ல என்பதை அறிவார்.

Image caption தலித்துகளுக்கெதிரான வன்முறை

கடவுள் விசயத்தில் இக்கூற்றை ஒத்துக்கொள்ளும் ஒரு திராவிட கட்சி அபிமானி, நவீன அரசியல் என்று வரும்போது அதே அளவுக்கு அரசியல் நம்பிக்கைகள் சிலவற்றை ஆய்வு ஏதுமில்லாமல் இறுக்கமாக நம்பவும் பின்பற்றவும் செய்வதை பார்க்க முடிகிறது.

திராவிட இயக்கம்தான் தலித்துகளுக்கு எல்லாமும் செய்திருக்கிறது என்பது அத்தகைய 'புகழ்பெற்ற' நம்பிக்கைகளில் ஒன்று. ஆனால் இக்கூற்றை நெருங்கிச்சென்று ஆராயும்போதுதான் இதுவும் கடவுள் நம்பிக்கை போன்று ஸ்தூலமற்ற ஒரு நம்பிக்கை என்பதை அறிகிறோம்.

சுதந்திர இந்தியாவில் அதுவரை காங்கிரஸ் கட்டமைத்த நம்பிக்கைகள் பொய்த்துப்போனதின் வெளிப்பாடுகளுள் ஒன்றாக 1967ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. என்ற மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

ஆனால், சமத்துவ தமிழகம் என்பதாக தி.மு.க. உருவகித்து வந்த நம்பிக்கை உடைவதற்கு அதிக நாள் பிடிக்கவில்லை.

Image caption பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும் போது சாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்நிறுத்தப்படுதல் திராவிட ஆட்சிகளின்போது காணப்பட்டது

1968ம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கீழ்வெண்மணியில் கூலி உயா்வுக்காக போராடிய தலித் விவசாய தொழிலாளிகள் 44 போ் எரித்துக் கொல்லப்பட்டனா்.

சமூகத்தின் அடித்தள பிரச்சினைகளை அரசியலாக்காமல், உணா்ச்சிபூர்வ சொல்லாடல்கள் மூலம் மட்டுமே மக்களைத் திரட்டி அதையே உண்மை போன்று நம்ப வைத்து வந்த தி.மு.கவின் அதிகார முகத்தில் அறைந்த குரூரமான கள யதார்த்தம் அது.

1967ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து மாநில கட்சிகள் எழுச்சி பெற்றமையானது தேசிய அரசியலால் வஞ்சிக்கப்பட்ட மாநிலங்களின் எழுச்சியாக இருந்தமை ஓர் உண்மைதான்.

அதே வேளையில் அவை அந்தந்த மாநிலங்களின் ஆதிக்க சாதிகளின் வெளிப்பாடுகளாக மாறிப்போனது மற்றோர் உண்மை.

இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் ஆட்சிகள் மெல்லமெல்ல இடைநிலை பெரும்பான்மை சாதிகளின் ஏகபோகத்தை நோக்கிச்சென்றன.

அண்ணா தொடங்கி கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை தமிழகத்தின் முதல்வா்களாக இருந்தவர்கள், பெரும்பான்மைச் சாதிகளைச் சாராதவா்களாக இருந்தது சாதகமான அம்சம் என்றே கூறவேண்டும்.

குறிப்பிட்ட பெரும்பான்மை சாதியின் ஏகபோகம் உண்டாவதை இந்த அம்சம் தடுத்திருக்கிறது.

ஆனால், இதுவே மற்றுமொரு வகையில் பலவீனமாகவும் மாறிவிட்டது.

தத்தம் சாதிகளின் எண்ணிக்கை பலத்தால் நிலைக்கமுடியாது என்பதை உணா்ந்த இந்த தலைவா்கள் தங்கள் அதிகார நிலைபேறலுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளுக்கு அதிகாரத்தை கொடுத்து திருப்திப்படுத்தினார்கள்.

மற்ற மாநிலங்களில் வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த ஏகபோகத்தை, கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு திராவிடக் கட்சிகளுக்கு இருந்தது.

அதாவது அதுவரை சாதியமைப்பின் மொத்த பயனாளிகளாக பிராமணர்களைக் காட்டி வந்ததால் இப்போது பிராமணர் அல்லாத சாதிகளுக்கு அதிகாரம் அளிப்பதை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இது ஒரே நேரத்தில் ஓட்டு வங்கி அரசியலாகவும் கொள்கை முழக்கமாகவும் அமைந்து கொண்டது.

சாதிகளை திருப்திப்படுத்த....

ஏற்கனவே இருந்த அரிஜன நலத்துறையை முன் உதாரணமாக கொண்டு 1969ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற தனி அமைச்சகம் உருவானது.

மெல்ல மெல்ல நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகள் தொடங்கி உள்ளூர் கட்சி மற்றும் நிர்வாக பொறுப்புகள் வரை பெரும்பான்மை சாதிகளுக்கானதாக மாற்றப்பட்டது.

தலித்துகள் மட்டுமல்ல எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த பல சாதிகளும் இதனால் பின் தள்ளப்பட்டன.

தலித்துகளுக்கு அளிக்கும் சலுகைகள் பிறரை தொந்தரவுக்கு உள்ளாக்கி ஓட்டு வங்கியை கெடுத்துவிடக் கூடாது என்று கருதி அதற்கிணையாக தலித் அல்லாத அதிகார சாதிகளுக்கும் சலுகைகளை அறிவிக்கும் போக்கு திமுக, அதிமுக கட்சிகளால் வளா்த்தெடுக்கப்பட்டது.

சாதிகளை திருப்திபடுத்தும் சிலைகள், பெயர் சூட்டல்கள், மணி மண்டபங்கள், வாரியங்கள் தொடா்ந்து அமைக்கப்பட்டன.

இவ்வாறு ஆதிக்க வகுப்பினருக்கு ஏற்கனவே இருந்த சமூக அதிகாரத்தோடு எண்ணிக்கை பலம் என்கிற இந்த நவீன அரசியல் பலமும் இணைந்து ஆதிக்க சாதிகள் பலம் பெற்றதோடு தலித்துகளை புதிய அதிகாரபலத்தைக் கொண்டு மேலும் ஒடுக்கவே செய்தனா்.

இதனால்தான் 1990களின் தலித் எழுச்சியை வட்டார பெரும்பான்மை சாதிகளுக்கு எதிரானது என்கிறோம்.

அதுவரை இருந்து வந்த சமூக வன்முறைகளோடு திராவிட கட்சி ஆட்சிகளின் அரச வன்முறையும் தலித்துகளுக்கு பாதகமாகவே அமைந்தது.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைHTTP://WWW.THANTHAIPERIYARDK.OR

கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி போன்ற வன்முறைகள் இதற்கான உதாரணங்கள்.

அதுமட்டுமல்ல 1968 வெண்மணி படுகொலைக்கு நியமிக்கப்பட்ட கணபதியாபிள்னை ஆணையம் தொடங்கி பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நியமிக்கப்பட்ட சம்பத் ஆணையம் வரையிலும் எதிலும் தலித்துகளுக்கு நியாயம்செய்த பரிந்துரைகள் இருந்ததேயில்லை.

இது ஆதிக்க சாதிகளை திருப்திபடுத்த இக்கட்சி ஆட்சிகள் செய்துவந்த சாதி அரசியலேயாகும்.

அரை உண்மைகள் , முழுப்பொய்கள்

எனவே தலித்துகள் பற்றிய திராவிட கட்சிகளின் உரிமை கோரல்கள் பலவும் குறிப்பானவையல்ல. பொத்தாம் பொதுவானவை.

யாரோ, எப்போதோ சொன்னதை மறுஆய்வு ஏதுமின்றி திரும்ப திரும்ப சொல்லுதல், பிறா் செய்த பணிகளையும் தங்களுடையதாக மாற்றிக்காட்டுதல், அரை உண்மைகள், முழுப் பொய்கள் என்பதாக அமைந்த பேச்சுகளே இங்கிருக்கின்றன.

சத்துணவு, சாதி ரீதியான அடையாளப்படுத்தல்கள் சிலவற்றைத் தடை செய்திருத்தல், கிராம நிர்வாக அலுவலர் தேர்வை அரசின் கீழ் கொணா்ந்திருத்தல் போன்ற வெகுசில நுண்ணிய திட்டங்கள் அல்லாது திராவிட கட்சிகளின் பல திட்டங்களும் மேலோட்டமானவை. அடையாள அரசியல் சார்ந்தவை எனலாம்.

அருந்ததியா் ஒதுக்கீட்டை முக்கியமாக கூறவேண்டும் என்றாலும்கூட அதுவும்கூட மொத்த பட்டியல் சாதிகளுக்கும் நெடுங்காலமாக அமல்படுத்தப்படாத லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பாமல் இருந்துவிட்டு உருவாக்கிய ஒதுக்கீடுதான் என்பதை கவனிக்கலாம்.

மேலும் அது பிற தலித் அல்லாத சாதிகளை பகைக்காத வகையில் தலித்துகளுக்குள்ளேயான பகுப்பிலிருந்துதான் உருவாக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைSEBASTIAN D'SOUZA/AFP/GETTY IMA
Image caption தலித்துகள் பற்றிய திராவிட கட்சிகளின் உரிமை கோரல்கள் சரியா?

இப்போதுகூட அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டிற்கு உட்படாத 50 சதவிகித பொதுப்பிரிவு பணிகளில் எல்லா வகுப்பினரும் இடம் பெறலாம் என்றாலும் அது தலித் அல்லாத சாதியினருக்குயதாகவே ஆக்கப்பட்டிருக்கிறது.

எனவே பொத்தாம் பொதுவாக பேசாமல் திராவிட ஆட்சிகளுக்கு முந்தைய காங்கிரசின் தலித் செயற்பாடுகளோடு ஒப்பிடுதல், கேரளா கா்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளில் கல்வி, நிலப்பங்கீடு சார்ந்ததெல்லாம் நடந்து வந்திருக்கும் செயற்முறைகளோடு ஒப்பிட்டு பேசினால்தான் இப்போதைய சாதனை கோஷங்களுக்கும் எதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முடியும்.

அதிகாரத்தில் தலித் பிரதிநிதித்துவம்

திருமாவளவன் முன்பொருமுறை பெரியார் பிறக்காத மண்ணில் தலித் ஒருவா் முதலமைச்சா் ஆகமுடிகிறது. பெரியா் பிறந்த தமிழகத்தில் ஆகமுடியவில்லை என்று கேட்டிருந்தார்.

நாம் அந்த அளவிற்குக்கூட போகவேண்டாம்.

Image caption சாதி கலவரத்தில் எரிந்த வீடு

தமிழகத்தின் எந்தக்கட்சியிலும் தலித் ஒருவா் செல்வாக்குமிக்க நிர்வாகியாகக்கூட வளர்ந்து விடமுடியாது என்பதே எதார்த்தம். இங்கே தலித்துகளிலிருந்து ஒரு முன்னணி அரசியல் தலைவா், தொழிலதிபர், கல்வியதிபா், சினிமாக்காரா், பத்திரிக்கையாளா் என எவருமே இல்லை என்பதை எண்ணப்பாருங்கள்.

தலித்துகள் விசயத்தில் தமிழகத்திற்கு போலித்தனமான நற்பெயா் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் தலித்துகளுக்கு திராவிட கட்சிகள் என்ன செய்தன என்று பேசுவதைவிட என்ன செய்யவில்லை என்று பேசுவதே இத்தருணத்தில் சரியான உரையாடலாக இருக்கமுடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்:

திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை`

`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

இந்த செய்திகளையும் நீங்கள் படிக்கலாம்:

திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன்

சிங்கள ஆதரவுக் காற்று ராஜபக்‌ஷ பக்கம் வீசுவதைக் காட்டுகிறதா மே தினப் பேரணிகள் ?

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு: சர்ச்சை தொடர்கிறது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்