அ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்ன ஆனது?

  • முரளீதரன் காசி விஸ்வநாதன்
  • செய்தியாளர்

அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் குறித்து கடந்த சில நாட்களாக இருதரப்பும் எந்தத் தகவலையும் அளிக்காத நிலையில், இருதரப்பும் மக்களைச் சந்திப்பதில் தீவிரம் காட்டுகின்றன.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவினால் காலமான பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். அதற்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கட்சியின் சட்டமன்றத் தலைவராகவும் தேர்வானார். இதனால், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்பவரைப் போல அமர்ந்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவரை முதல்வராக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

இதனால், கட்சி சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தது. இதற்கிடையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றதால், அவரது உறவினரான டிடிவி தினகரன் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். சட்டமன்றத்திலும் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்த நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு தரப்பும் கடுமையான போட்டியில் ஈடுபட்டன. ஆனால், பெருமளவில் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறி, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கட்சி இரு பிரிவுகளாக இருப்பதால், கட்சியின் பெயரையும் சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேசிவருவதாக செய்திகள் அடிபட்டன. டிடிவி தினகரனை கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுக்கிவைப்பதாக தமிழக அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து அறிவித்தனர். தினகரனும் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி, தினகரன் தில்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு இரு அணிகளும் இணைவதற்கான நிபந்தனைகளை விதித்தது. சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பொறுப்பிலும் இருக்கக்கூடாது, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நிபந்தனைகளை ஏற்றால்தான் பேச்சுவார்த்தை என அந்த அணி கூறியது.

இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கென குழுக்களை அமைப்பதாகக் கூறின. ஓ. பன்னீர்செல்வம் அணி அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைக் குழுவை அறிவிக்கவும் செய்தது. இருதரப்பும் தகுந்த சூழல் அமைந்ததும் பேச்சுவார்த்தை நடக்குமென தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிவந்தன.

ஆனால், வெளிப்படையாக அப்படி எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில் ஓ. பன்னீர்செல்வம் அணி தொடர்ந்து தனது நிபந்தனைகளை வலியுறுத்திவந்தது. இருதரப்பைச் சேர்ந்தவர்களும் எதிர்த் தரப்பின் மீது மாறி மாறி குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக இரு தரப்பும் இணைப்பு குறித்து எந்தத் தகவலையும் ஊடகங்களில் தெரிவிக்கவில்லை.

ஓ. பன்னீர்செல்வம் அணியின் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனிடம் இது குறித்துக் கேட்டபோது, "ஊடகங்களிடம் தெரிவிக்கும் கட்டத்தை பேச்சுவார்த்தை எட்டவில்லை. ஆனால், முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன" என பிபிசியிடம் தெரிவித்தார்.

மறைமுகமாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, பேசிவருகிறோம், விரைவில் ஊடகங்களில் இது குறித்துத் தெரிவிப்போம் என்று கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி அணியின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமையன்று ஊடகங்களிடம் பேசியபோது, "சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக ஒதுக்கிவைக்கப்பட்டுவிட்டனர். கட்சியும் ஆட்சியும் 90 சதவீதம் எங்களிடமே உள்ளது. பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது" என்று மட்டும் கூறினார்.

இதற்கிடையில், மே 5ஆம் தேதி முதல் ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களைச் சந்திப்பதற்காக சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் பேசப் போவதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையும் மிகப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு இரு தரப்பும் மும்முரம் காட்டிவருகின்றன. நேற்று ஓ. பன்னீர்செல்வம் இந்த விழாவுக்கான இடங்களைப் பார்வையிட்ட நிலையில், இன்று தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போவதாக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

இப்படி இரு தரப்பும் தொண்டர்களைத் திரட்டவும் கட்சிக்குள் ஆதரவைப் பெறவும் தீவிர முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், கட்சிக்குள் உள்ள சசிகலா ஆதரவாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், 'இப்படிப் பேச்சுவார்த்தை நடத்த இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பொதுச் செயலாளரும் துணைப் பொதுச் செயலாளரும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் செல்லாது. தலைமை நிலையச் செயலராக உள்ள பழனிச்சாமியும் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆகவே இந்த அணிகள் இணைப்பிற்கு கட்சியின் ஒப்புதல் கிடையாது' என்கிறார்.

கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரிலும் ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டிவியிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகாததை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, இரு நிபந்தனைகளை முன்வைத்தே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என வெளிப்படையாகப் பேசிவந்தாலும், இணைப்பிற்குப் பிறகு முதலமைச்சர் யார் என்பதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலே தற்போது பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் முடக்கத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.

"முதல்வர் பதவியை விட்டுத்தரும் பேச்சுக்கே இடமில்லை. பழனிச்சாமி எதற்காக முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் வெற்றிவேல்.

பெரும்பாலான ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் பழனிச்சாமி தரப்பிலேயே இருக்கும் நிலையில், அந்த அணி இணைப்புக்கு ஆர்வமாக இருப்பதுபோல தெரிவதும் ஓ. பன்னீர்செல்வம் அணி நிபந்தனைகளை விதிப்பதும் அரசியல் பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.

"தற்போது அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான விவகாரத்தை அரசியல் அல்லாத காரணங்கள்தான் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன" என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியருமான விஜயஷங்கர்.

பாரதீய ஜனதாக் கட்சி, ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அதனாலேயே அந்த அணி சிறியதாக இருந்தாலும் முரண்டு பிடிப்பதற்குக் காரணம் என பலரும் கருதுகின்றனர். இடைத்தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரன் கைதுசெய்யப்பட்டிருப்பது ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இதுபோன்ற இழுபறி நிலை நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டியாக வேண்டிய நிலையில், இந்த இழுபறி கட்சியை மட்டுமல்லாது ஆட்சியையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

காணொளி: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி

காணொளிக் குறிப்பு,

சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்