நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டில் தில்லி மாணவியை பாலியல் வல்லுறவு செய்த நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிர்பயாவுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பெண்களின் போராட்டம்

அக்ஷய் தாக்கூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேருக்கும் 2013 ஆம் ஆண்டு, விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இந்த மிருகத்தனமான கூட்டு பாலியல் வன்கொடுமை, நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தி, பெண்களின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்களை வகுக்க வழிவகுத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தற்கொலை செய்து கொண்ட முகேஷ் சிங்

டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார், அவளுடைய நண்பரும் தாக்கப்பட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் ஜோதி சிங் என்று, அவர் தாயார் பகிரங்கமாக 2015 ஆம் ஆண்டில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுத்தினார்.

படத்தின் காப்புரிமை DELHI POLICE

இந்த நான்கு நபர்கள் அல்லாமல் வேறு இரண்டு நபர்கள் 2012ல் டிசம்பர் 16 அன்று சம்பவம் நடந்த அந்த பேருந்தில் இருந்தனர் டெல்லியின் தெற்கில் உள்ள முனிர்கா பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறிய நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

அந்த பேருந்தை ஓட்டிய ராம் சிங் திகார் சிறையில் மார்ச் 2013ல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆறாவது குற்றவாளி 18 வயதுக்கும் குறைவான சிறுவன் என்பதால், சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு கால தண்டனைக்கு பிறகு டிசம்பர் 2015ல் விடுவிக்கப்பட்டார். இதற்கு பிறகு சிறுவர் குற்றவியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தற்போது 16 மற்றும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கொடூரமான குற்றம் செய்தால் , அவர்கள் வயது வந்தவர்களாக கருதப்படலாம் என்று சட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

''மரண தண்டனை தீர்வாகாது -வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்''

தூக்கு தண்டனை எந்த விதத்திலும் நிர்பயாவுக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு தீர்வாகாது என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

''நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரமான செயலுக்கு அந்த நான்கு நபர்களும் அவர்கள் வாழும் காலம் வரை சிறையில் இருந்தால், தவறு செய்ததற்காக வருந்துவார்கள். ஒரு கணத்தில் தூக்கில் தூங்குவதால், நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை எவ்வாறு சரிசெய்ய முடியும்,'' என்று கேள்வி எழுப்புகிறார்.

மரண தண்டனை உட்பட பல்வேறு விதமான மோசமான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் குற்றம் குறைந்ததாக எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ''முதலில் பெண்கள் மீதான வன்முறையை தடுக்க அதற்கான விழிப்புணர்வை தொடங்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் பாலியல் கல்வி அளிக்கப்படவேண்டும்,'' என்கிறார் சுதா ராமலிங்கம்.

மேலும் அவர் மரண தண்டனை எந்த விதத்திலும் குற்றம் புரிந்தவர்களை திருத்தக்கூடிய வழிமுறையாகாது என்கிறார்.

இதையும் படிக்கலாம்:

ஆண்கள் வீட்டுவேலை செய்யத் தயாராகிவிட்டார்களா?

சீனாவையும் விட்டு வைக்கவில்லை வட கொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்