சேகர் ரெட்டி, கூட்டாளிகளின் ரூ.34 கோடி முடக்கம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜே. சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான 34 கோடி ரூபாயை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

மணல் அள்ளும் நிறுவனத்தை நடத்தி வந்த ஜே. சேகர் ரெட்டி, ஸ்ரீநிவாசுலு ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது 34 கோடி ரூபாய் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மத்தியப் புலனாய்வுத் துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும் விசாரித்து வந்தது.

விசாரணையின்போது, அந்த ரொக்கம் எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் கணக்கில் வராத பணம் என்றும் சேகர் ரெட்டி ஒப்புக்கொண்டதாக அமலாக்கத்துறை தெரிவிக்கிறது. புதிய ரூபாய் நோட்டுகள் எப்படிக் கிடைத்தன என்ற கேள்விக்கு, தன்னுடைய மணல் தொழிலிருந்து அந்தப் பணம் கிடைத்தது என்பதைத் தவிர, அவர் ஏதும் சொல்லவில்லை.

எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்திலிருந்து தனக்குப் பணம் அனுப்பப்படும் என்றும் அதில் ஒரு பகுதியை பிரேம்குமார் என்பவரின் மூலம் தங்கக் கட்டிகளாக மாற்றி வந்ததாகவும் ஸ்ரீநிவாசுலு ஒப்புக்கொண்டார். மீதமிருக்கும் பணம்தான் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு, வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்கலாம்:

இதற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, பல்வேறு நபர்களிடம் பழைய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டு, அவை புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

சேகர் ரெட்டியிடமும் அவரது கூட்டாளிகளிடமும் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட 33,74,92,OOO ரூபாய் பணம், குற்றச்செயல்களின் மூலம் கிடைக்க வந்ததாகத் தெரியவருவதால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்