டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது

உலக நாடுகளை அதிர வைத்த 2012- ஆம் ஆண்டு, டெல்லி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியத் தலைநகர் டெல்லியில், கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, 23 வயது மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில், 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த பிறகு, விடுதலையாகிவிட்டார்.

மற்ற நான்கு பேருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2015-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்தது.

படக்குறிப்பு,

தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

பின்னர், குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் முகேஷ் ஆகிய நான்கு பேரும் அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஓர் ஆண்டாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு இதை விசாரித்தது. இன்று இறுதித் தீர்ப்பு வெளியானது. நான்கு பேருக்கும் ஏற்கெனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

`தூக்கு தண்டனைக்கு பொருத்தமான வழக்கு'

"இது மிகவும் பயங்கரமாகவும், கொடூரமாகவும் நடத்தப்பட்ட ஒரு கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம். அந்தப் பெண்ணை சித்ரவதை செய்து, அவரது பிறப்பு உறுப்பை சிதைத்து, குடல் சேதமடையும் அளவுக்கு இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணையும், அவரது நண்பரையும் பஸ்ஸில் சித்ரவதை செய்து, ஆடையின்றி பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டு, பஸ்ஸை ஏற்றிக் கொல்ல முயற்சித்திருக்கிறார்கள்." என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சிறையில் இருந்த காலத்தில் திருந்திவிட்டோம். இளம் வயது, சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி, அந்தக் காரணங்களால் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது. நாட்டையே உலுக்கிய இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

"அரிதினும் அரிதான வழக்கில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு அதற்கு மிகவும் பொருத்தமானது. இதுபோன்ற வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்காவிட்டால், மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிடும் " என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும், தீவிரவாத குற்றத்தில் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கஸாப், அப்சல் குரு மற்றும் யாகூப் மேனன் ஆகியோருக்குத்தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாலியல் வல்லுறவு வழக்கில், கொல்கத்தாவில் 1994-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சாட்டர்ஜி என்பவருக்குத்தான் இறுதியாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

`பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய'

"இதுபோன்ற கடுமையான குற்றங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாத்தால்தான்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது வருந்தத்தக்கது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்ற உணர்வை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குழந்தைகளிடம் அந்த மனநிலையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் " என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது, வழக்கறிஞர்கள் உள்பட அதைக் கேட்கக் கூடியிருந்தவர்கள், கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், அந்தப் பெண்ணுடன் இருந்த அவரது நண்பரின் வாக்குமூலம் மற்றும் முதலாவது அரசுத்தரப்பு வாக்குமூலம் ஆகியவை மிகத் தெளிவாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பெண், உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலமும் உறுதியாக இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங், தீர்ப்பைப் படித்த பிறகு, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில், நிர்பயா என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெற்றோரும் நீதிமன்ற அறையில் இருந்தனர். தீர்ப்பைக் கேட்டு, அவரது தாயார் மெளனமாக அழுது கொண்டிருந்தார்.

புதிய சட்டம்

இந்தப் பாலியல் வல்லுறவு சம்பவம், உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்திய அளவில் பெரும் போராட்டத்தைத் தூண்டுவிட்டது. குறிப்பாக, இளைஞர்களும் பெண்களும் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகில் பெருமளவில் இளைஞர்கள் கூடி, தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பாலியல் குற்றங்களுக்காக சட்டம் கடுமையாக்கப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டம் 376 பிரிவு ஏ-வின்படி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு ஒரு பெண் உயிரிழக்கக்கூடிய நிலையோ, அல்லது சிதைக்கப்பட்டது போன்ற நிலையோ ஏற்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டது.

''மரண தண்டனை தீர்வாகாது ''

தூக்கு தண்டனை எந்த விதத்திலும் நிர்பயாவுக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு தீர்வாகாது என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

''நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரமான செயலுக்கு அந்த நான்கு நபர்களும் அவர்கள் வாழும் காலம் வரை சிறையில் இருந்தால், தவறு செய்ததற்காக வருந்துவார்கள். ஒரு கணத்தில் தூக்கில் தூங்குவதால், நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை எவ்வாறு சரிசெய்ய முடியும்,'' என்று கேள்வி எழுப்புகிறார்.

மரண தண்டனை உட்பட பல்வேறு விதமான மோசமான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் குற்றம் குறைந்ததாக எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ''முதலில் பெண்கள் மீதான வன்முறையை தடுக்க அதற்கான விழிப்புணர்வை தொடங்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் பாலியல் கல்வி அளிக்கப்படவேண்டும்,'' என்கிறார் சுதா ராமலிங்கம்.

மேலும் அவர் மரண தண்டனை எந்த விதத்திலும் குற்றம் புரிந்தவர்களை திருத்தக்கூடிய வழிமுறையாகாது என்கிறார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்