திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

  • அரவிந்தன் நீலகண்டன்
  • எழுத்தாளர்

( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ் வெளியிட்டது. அதை மீண்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்)

திராவிட இனவாதக் கோட்பாடு ஓர் அரசியல் சித்தாந்தமாக உருவெடுத்த போது அது வெளிப்படையான பிரிவினைவாதமாகவே இருந்தது.

திராவிடவாதத்தின் முக்கிய சிந்தனையாளராகவும் பொதுமக்கள் தலைவராகவும், அண்ணாதுரை உருவெடுத்து வந்தார்.

அவர் 'பிராமண வெறுப்பு, திராவிடப் பாரம்பரியம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை இணைத்து இந்திய அரசுக்கு ஒரு முரட்டுத்தனமான சவாலை உருவாக்கினார்' என ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

அண்ணாவின் பார்வையில் இந்தியா ஒரு கண்டம். அதில் பல்வேறு இனங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சியில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் பிரிட்டிஷார் வெளியேறினால் இந்தியாவில் இரத்தக்களறி ஏற்படும்.

"இந்தியாவில் ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க ஒரே வழி இந்தியாவை இனங்களின் அடிப்படையில் துண்டு துண்டாகப் பிரிப்பது மட்டும்தான். ... பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்றால் இந்தியா மரணங்களின் விளைநிலம் ஆகிவிடும்." என்று அவர் கூறினார்.

இந்தியாவின் முதல் பிரிவினைவாத போராட்டமாக திராவிட அமைப்புகளின் போராட்டமே தமிழ்நாட்டில் வெடித்தது.

அன்றைய சர்வதேச அரசியல் சூழலில் இந்தியா ஒரு ஆசியக் குரலாக மேலோங்குவதை மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை.

இச்சூழலில் திராவிட இயக்கம் அறிந்தோ அறியாமலோ இந்திய எதிர்ப்பு அன்னிய சக்திகளின் கைப்பாவைகளாக செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதை முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் டி.என்.சேஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற்காலங்களில் அண்ணாதுரை மாறியபடியே இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றில் (Life and Times of Anna) அதன் ஆசிரியர் ஒரு விஷயத்தை சொல்கிறார்; அண்ணாதுரை தமது இதயத்தில் இந்திய எதிர்ப்பாளரே அல்ல எனவும் அவரது பிரிவினைவாதம் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் அவர் பயன்படுத்திய ஒரு கருவியே தவிர வேறேதும் இல்லை எனவும், அவர் நிறுவுகிறார்.

அண்ணா-ஈ.வெ.ரா வேறுபாடு

ஈ.வெ.ராமசாமிக்கும் சி.என்.அண்ணாதுரைக்குமான போரின் அடிப்படையில் இந்த விஷயமும் காரணமாக இருந்திருக்கலாம்.

இதன் வெளிப்பாடாகவே ஒரு விதத்தில் கருணாநிதி - எம்ஜிஆர் மோதலையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நிச்சயமாக அந்த மோதலும் திமுக உடைபட்டதும் தனி ஆளுமைகளின் மோதல் என்பதே பெருமளவுக்கு உண்மை.

ஆனால் உடைபட்ட பின்னர் திமுக ஈ.வெ.ராமசாமியின் கோட்பாட்டின் நீட்சியாகவே இயங்கியது.

ஈ.வெ.ராமசாமியின் கருத்துலகில், அப்படி ஒன்று அவருக்கு இருக்குமென்று கொண்டால், வெறுப்பு பிரதான இடத்தை வகித்தது.

அவருக்கு ஜனநாயகத்தின் மீதும் உயர் கல்வி மீதும் கடும் வெறுப்பு இருந்தது. மக்கள் இயக்கங்கள் மீது அவநம்பிக்கை இருந்தது.

விடுதலை போராட்ட மக்கள் இயக்கமும் முதல் கீழ்வெண்மணி விவசாய தொழிலாளரின் போராட்டம் வரை அவர் அப்போராட்டங்களை மனிதாபிமானம் சிறிதுமற்ற முறையிலேயே அணுகினார்.

கீழ்வெண்மணி படுகொலையினை அடுத்து அவர் அளித்த அறிக்கையில் அவர் அப்பாவி மக்களை தீ வைத்து படுகொலை செய்தவர்களைத் தவிர பிற அனைவரையும் வசை பாடுகிறார்.

ஆனால் படுகொலை செய்தவர்களை நேரடியாகக் கண்டித்து ஒரு வார்த்தை கூட இல்லை.

படக்குறிப்பு,

இந்தி எதிர்ப்பும் இந்திய வெறுப்புணர்வும்

சி.என்.அண்ணாதுரையிடம் இத்தகைய கல் நெஞ்சை எதிர்பார்க்க முடியாது.

அவர் அடிப்படையில் ஒரு ஜனநாயகவாதி.

தங்கள் இனவாத பிரிவினை கோஷங்களை மக்கள் ஒரு முக்கிய விஷயமாக நினைக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டு அதன் மூலம் தம் அரசியலை பரிணமிக்க செய்தார்.

இதன் விளைவாக பிரிவினைவாதம் கைவிடப்பட்டது.

சீனப் போரின் போது அண்ணாவின் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்ற கழகம் வேறெந்த தேசபக்த இயக்கத்தையும் போலவே செயல்பட்டது.

கம்யூனிஸ்ட்களை போல செயல்படவில்லை.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அமைக்க எதிர்ப்புகள் எழுந்த போது அண்ணாதுரை சம்மதத்துடன் அவரது முக்கிய தளபதிகளில் ஒருவரான நெடுஞ்செழியன் விவேகானந்தர் பாறை அமைக்கும் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றார்.

திராவிட இயக்கங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் ஆன்மிக சமுதாய செம்மல் சுவாமி சகஜானந்தர். அவருக்கு எதிராக திமுக வேட்பாளர்களை நிறுத்துவதை சி.என். அண்ணாதுரை விரும்பவில்லை.

`இந்து எதிர்ப்பில் திமுக'

அதன் பின்னர் திமுக திரு மு.கருணாநிதியால் கைப்பற்றப் பட்டபோது திமுக மீண்டும் கடும் இந்து எதிர்ப்பை மேற்கொள்ள ஆரம்பித்தது.

சேலம் ஊர்வலம் ஓர் ஆபாச உச்சமாக திகழ்ந்தது.

அந்த ஊர்வலத்தை விமர்சித்த துக்ளக் பத்திரிகை மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திமுக எனும் பெயரும் ஊழல் என்பதும் ஏறக்குறைய ஒன்று என்பது போன்ற ஒரு எண்ணம் பொது மக்கள் மனதில் உருவானது.

அக்கால கட்டத்தில்தான் 'புரட்சி தலைவர்' என அவரது தீவிர விசிறிகளால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுகவை உருவாக்கினார்.

பட மூலாதாரம், அருண்

படக்குறிப்பு,

எம்.ஜி.ஆர். -மதமாற்றத் தடை சட்டத்துக்கு பிள்ளையார் சுழி

அதிமுக சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.

இன்றைக்கும் நம் மனதில் இருப்பது சத்துணவு திட்டம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சி.பி.ராமசாமி ஐயர் காலத்தில் இத்திட்டம் கல்வியை ஜனநாயகப்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு அளிக்க உருவாக்கப்பட்டது.

நாகர்கோவிலை நன்றாக அறிந்திருந்த தாக்கத்தாலோ என்னவோ பெருந்தலைவர் காமராஜர் சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார்.

ஏனோ தானோ என்று இயங்கி வந்த இந்த திட்டத்தை மீண்டும் புத்துயிரூட்டி மிக சிறப்பாக எம்.ஜி.ஆர் செயல்படுத்தினார்.

இன்று தமிழ்நாடு மானுட வளர்ச்சி குறியீடுகளில் இந்திய அளவில் நல்ல தரத்தில் இருக்க இத்திட்டம் ஒரு முக்கிய காரணம்.

திமுகவின் கண்மூடித்தனமான இந்து எதிர்ப்பை அதிமுக கைவிட்டது.

பொதுமக்களின் பிரதிநிதிகளாக அதிகாரம் ஏற்ற பின்னர் சித்தாந்த கடும் நிலைப்பாடுகளுக்கு அப்பால் செயல்பட வேண்டியது அரசியல்வாதிகளுக்கு அவசியம்.

ஆனால் ஒரு அடிப்படை பண்பாடு கருதி கூட முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி இந்துக்களின் பண்டிகைகளுக்கு கூட நல்வாழ்த்து கூறுவதில்லை.

ஆனால் எம்ஜிஆரும் அவருக்கு பின்னர் வந்த ஜெயலலிதாவும் அதை மாற்றி அமைத்தார்கள்.

அறிவுஜீவிகள் அதிமுகவை திராவிட ஜனசங்கம் என்றே அழைக்கும் அளவுக்கு அதிமுக தன்னை இந்துத்தன்மையுடன் இணைத்துக் கொண்டது.

மதமாற்ற தடை சட்டமும் அதிமுகவும்

முதன் முதலாக தென்னிந்தியாவில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உத்தேசித்தது எம்.ஜி.ஆர் அவர்களின் அதிமுக அரசுதான்.

மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை அமுல் படுத்த வேண்டிய அத்தியாவசியத்தைக் கூறியவர் திராவிட சித்தாந்த பிடிப்பு கொண்டவராக அறியப்பட்ட நீதியரசர் வேணுகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக இயக்கத்தின் மற்றொரு அம்சம் அதன் அரசியல்-இஸ்லாமிய சார்பு. பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள்.

இந்த அரசியல் சித்தாந்த சார்பு, தமிழ்நாட்டை ஜிகாதி செயல்பாடுகளுக்கு பாதுகாப்பான உறைவிடமாக மாற்றியது.

இதன் உச்சமாக 1998 கோவை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

அதன் பின்னர் 2001 வரை அன்று அரசில் இருந்த திமுக ஜிகாதிகளை ஒடுக்க கொஞ்சம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜெயலலிதா - கரசேவைக்கு ஆதரவு

இவ்விதத்தில் திமுக - அதிமுக இரண்டுமே திராவிட கட்சிகளென்றாலும் அதிமுக இந்து சார்பு கொண்டதொரு கட்சியாகவே இருந்து வந்தது.

1992 இல் கரசேவைக்கு ஆதரவு, பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு, கட்டாய மதமாற்றத் தடை சட்டம் ஆகியவை அதிமுகவை ஓர் இந்துத்துவ திராவிட கட்சியாகவே காட்டுகின்றன.

2004 தேர்தல் தோல்வி அதிமுகவின் போக்கில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

திமுக - காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் -இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் ஆகியவை இணைந்த ஒரு இந்து எதிர்ப்பு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றது.

திராவிட பூமியான தமிழ்நாட்டில் இந்து வாக்கு வங்கி உருவாகவில்லை என்பதை இத்தேர்தல் காட்டுவதாக அதிமுக அரசியல் தலைமை எண்ணியது.

எம்.ஜி.ஆர் தொடங்கி அதிமுகவுக்கு இருந்த மென்மையான ஹிந்துத்துவ நிலைபாடு மாற்றமடையத் தொடங்கியது.

சங்கராச்சாரியாரின் கைது அதற்கு கட்டியம் கூறியது எனலாம்.

திமுக ஆட்சி என்றாலும் அதிமுக ஆட்சி என்றாலும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் தங்கள் தொடர் கொலைகளை தங்கு தடையில்லாமல் தமிழ்நாட்டில் நடத்த முடிந்தது.

`ஊழல் நிறுவனமயமானது'

திமுகவுக்கும் சரி அதிமுகவுக்கும் சரி மற்றொரு பொதுத்தன்மை ஊழல்.

சர்க்காரியா கமிஷன் திமுகவின் 'அறிவியல் பூர்வமான ஊழலைக்' குறித்து பேசியுள்ளது.

கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சியில் ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்து கோயில்களில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளும் ஊழல்களும் முறையாக ஆவணப்படுத்தப்படக்கூட இல்லை.

இதில் அழிவது சமய மையங்கள் மட்டுமல்ல. அவற்றின் பயனாக தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் நம் ஆன்மிக கலை பண்பாட்டு பொக்கிஷங்கள். சிலைத் திருட்டு. கோயில் நிலங்கள் அபகரிப்பு ஆகியவை ஏறக்குறைய திராவிட இயக்க வரலாற்றின் தினசரி சாதனைகளாகவே ஆகிவிட்ட என கருத வேண்டும்.

எம்.ஜி.ஆர் காலத்தில் கூட இது நிகழ்ந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மர்ம மரணமும் பால் கமிஷன் அறிக்கையும் இன்றும் சிலருக்கு நினைவிருக்கலாம்.

அந்நிகழ்வில் முக்கியமாக பேசப்பட்டவர் அன்று இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த இராம.வீரப்பன்.

அன்று அரசியலாக்கப்பட்டபோது அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாநிதி பாத யாத்திரை எல்லாம் சென்றார்.

ஆனால் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் வீரப்பன் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேச தொடங்கினார்.

நியாயம், நீதி என்பவை கோயில்களுக்கு கழக ஆட்சிகளில் என்றைக்குமே கிடைக்கப் போவதில்லை என்பதற்கான ஓர் ஆதாரம் இந்த நிகழ்வு.

`இலங்கைத் தமிழர்களுக்கு தீங்கு'

திராவிட இயக்கங்களின் மிகப் பெரிய தீக்கொடை அவர்கள் இலங்கை தமிழருக்கு ஏற்படுத்திய அழிவு.

இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டிய போராட்டத்தை தம் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்கு திராவிட கழகங்கள் பயன்படுத்திக் கொண்டன.

அதன் உச்சக்கட்டமாக அன்றைக்கு அரசியல் அதிகாரத்தில் அகில இந்திய அளவில் பெரும் செல்வாக்குடன் இருந்த கருணாநிதி, 2009 இல் ஈழத்தமிழர்கள் பெரும் படுகொலை செய்யப்பட்ட போது மிகவும் வேதனையான நகைப்புக்குரிய சில மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவரது திமுக தொண்டர்கள் மாநிலமெங்கும் அவர் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றியதாக சுவரொட்டிகளை ஒட்டினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டார்களா?

தமிழர்கள் இந்த நூற்றாண்டில் சந்தித்த மிகப் பெரிய மானுட சோகத்தின் போது திமுகவினர் அவர்கள் தலைவர் தமிழர்களைக் காப்பாற்றியதாக கொண்டாட்ட மனநிலையுடன் ஒட்டிய சுவரொட்டிகளே திராவிட இயக்கத்தின் மிகக் கீழ்மையான இயற்கையை வெளிக்காட்டிய ஒரு தருணம் எனலாம்.

அதே 2009 காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்காக எழுப்பப்பட்ட குரல்களிலும் சரி தமிழக மீனவர்களுக்காக தமிழ்நாட்டுக்கு வெளியே எழுப்பப்பட்ட குரல்களிலும் சரி, தேசிய அளவில் ஒலித்தது இங்கு திராவிட இயக்கத்தால் மதவாத முத்திரை குத்தப்பட்ட கட்சியின் தலைவர்களின் குரல் மட்டுமே.

ஐம்பதாண்டு திராவிட இயக்க ஆட்சிகளில் எப்போதெல்லாம் அந்த ஆட்சி மென்மையான இந்துத்துவ தன்மையுடன் இருந்திருக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பெரும் முன்னேற்றத்தை அளித்துள்ளது.

எப்போதெல்லாம் திராவிட இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் கோஷமிட்டு இயங்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் அது ஊழலுக்கும் நிர்வாக சீர்கேட்டுக்கும் பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும், இறுதியில் தமிழர்களின் அழிவுக்கும் துணை போயிருக்கிறது.

இன்று மக்கள் திராவிட கட்சிகளில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

இந்நிலையில் அந்நம்பிக்கையின்மையையும், விரக்தியால் விளைந்த ஆத்திரத்தையும் முதலீடாக்கி, திராவிட இயக்கத்தின் நேர் கோட்டில் உருவான குரலாக தமிழர் தேசியம் எனும் மற்றொரு பொய்யான இனவாதக் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் தமிழரின் வாழ்வும் வளமும் வலிமையான பாரதத்துடனான உறவிலேயே பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளது.

இதை அண்ணா உணர்ந்தார். எம்.ஜி.ஆர் முன்னெடுத்தார்.

கருணாநிதி அறிந்து அறியாதவராக பாசாங்கு செய்தார். ஜெயலலிதா தம் இயல்பின்படி வேகமாக முன்னெடுத்து தடுமாறினார்.

இன்று குடும்ப அரசியல்களின் ஊழல்களுக்கு ஒரு கேடயமாக தமிழ் உணர்வும் திராவிட சொல்லாடலும் பயன்படுகின்றன.

எனவே, இந்நிலை மாற தமிழ் பண்பாட்டில் உண்மையிலேயே வேரூன்றிய பாரத தேசிய சிந்தனையுடன் செயல்படுகிற ஓர் இயக்கம் அவசியமாகிறது.

( எழுத்தாளர் ஸ்வராஜ்யா சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்)

இது தொடர்பான பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்