நீட் நுழைவுத் தேர்வில் காட்டியது கடுமையா, கொடுமையா?

இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

படக்குறிப்பு,

கோப்புப் படம்

தேர்வு எழுத வந்த மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி வழங்கப்படாததால் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக மாணவர்கள் கத்தரிக்கோலைக் கொண்டு தங்கள் சட்டையை கத்திரித்தனர்

அதில் உச்சபட்சமாக கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, "மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

"உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார். அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது. இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்" என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

கேரள முதல்வர் இந்தப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்?

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து கேரள மனித உரிமை ஆணையம் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது மாணவியின் மனித உரிமையை மீறும் நடவடிக்கை என்றும், தேசிய மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ பிராந்திய இயக்குநருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கன்னூர் மாவட்ட காவல்துறை தலைவர் மற்றும் கேரள பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர் விளக்கம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்பள்ளியின் முதல்வர் கே. ஜமாலுதீன், ஆசிரியர்கள் மாணவியின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்தவில்லை என்று குறிப்பிட்டார். ''தேர்வு எழுதவந்த அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். குறிப்பிட்ட அந்த மாணவி சோதனை கருவி (metal detector) வழியாக நடந்து வந்தபோது சத்தம் கேட்டது. நான்கு ஆசிரியர்கள் அந்த மாணவியிடம் ஏதாவது தேவையற்ற பொருள் இருந்தால் அதை வெளியே எடுத்துவிட்டு தேர்வுக்கு போகுமாறு கூறினார். ஆனால் இந்த கருத்து தவறாக பரவிவிட்டது,'' என்றார்.

நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டபோது, ''விசாரணைக்கு பின்னர் அவர்கள் மீண்டும் பணியில் இணைவார்கள்,'' என்றார் ஜமாலுதீன்.

மாணவிகள் தங்கள் அணிருந்திருந்த நகைகளை அகற்றுமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்வதைத் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து, சென்னையில் தேர்வு எழுதிய மாணவி ஒருவரிடம் பேசிய போது, பத்து மணி தேர்விற்கு, காலை 7.30 மணிக்கு அவருக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். தனது தேர்வு மையத்தில் சுடிதார் அணிந்திருந்தால் துப்பாட்டா அணிய தடை விதிக்கப்பட்டதாகவும், கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தான் அணிந்திருந்த கொலுசையும் தனது பெற்றோரிடம் கொடுத்துச் சென்றதாகவும், தெரிவித்தார்.

மேலும் தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்ததாகவும் அம்மாதிரியான சோதனை நடவடிக்கைகள் ஏன் நடத்தப்பட்டது என்று தனக்கு புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் ஹீல்ஸ் வைத்த செருப்புகள் அணியவும் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மற்றொருமொரு மாணவர் தான் தேர்விற்கு செல்லும் முன் தேர்வு எழுதுவதற்கான அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகளை படித்து, அவ்வாறு நடந்து கொண்டதால் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை என பிபிசியிடம் தெரிவித்தார்.

மாணவர்கள் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷணன், உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்