நீதிபதி கர்ணன் - ஏன் இத்தனை சர்ச்சைகள்?

தற்போது உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக 6 மாத சிறை தண்டனையை எதிர்கொண்டிருக்கும் நீதிபதி கர்ணன், நீதிபதியாக தனது பதவிக்காலம் முழுவதுமே சர்ச்சைக்குரிய நபராக இருந்துவந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கர்ணன், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்நத்தம் கிராமத்தில், 1955-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சுவாமிநாதன்- கமலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவருடைய தந்தையார் ஒரு தலைமையாசிரியர்.

8 குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தார் கர்ணன். கண்டிப்பான தந்தையான சுவாமிநாதன், தன் குழந்தைகள் அனைவரையும் நன்றாகப் படிக்க வைத்தார். கர்ணனின் உடன்பிறந்தோர் இருவர் தற்போது வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். மற்றொருவர் காவல்துறையில் இருக்கிறார்.

இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன?

பள்ளிப்படிப்பை மங்கலம்பேட்டை மேல் நிலைப் பள்ளியிலும் புகுமுகப் படிப்பை விருதாச்சலம் கலைக் கல்லூரியிலும் முடித்த கர்ணன், சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் பி.எஸ்சியும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.

பிறகு தமிழக பார் கவுன்சிலில் பதிவுசெய்துகொண்ட அவர், சிவில் வழக்குகளில் வாதாட ஆரம்பித்தார். பிறகு சென்னைக் குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் அரசுக்கு வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார். கர்ணனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

சாதி ரீதியான பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் அளித்த கர்ணன்

2009-ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. கங்குலியின் பரிந்துரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் கர்ணன். ஆனால், 2011-ஆம் ஆண்டிலேயே சக நீதிபதிகளுடன் இவருக்கு மோதல் வெடித்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தான் தலித் என்பதால் மோசமாக நடத்தப்படுவதாக புகார் அளித்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உச்ச நீதிமன்றம்

ஒரு திருமணத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு நீதிபதி, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததால், அவருடைய கால் தன் மீது பட்டதாக அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார். பிறகு, ஊடகத்தினரை தன்னுடைய சேம்பருக்கே அழைத்த கர்ணன், நான்கைந்து நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு குற்றம்சாட்டினார்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், கடிதத்தை அப்போதைய இந்திய தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவுக்கு அனுப்பிவைத்தது.

'ஆணும், பெண்ணும் பாலியல் உறவுகொண்டால் திருமணமாகக் கருதப்படும் '

2013-ஆம் ஆண்டில் ஒரு ஜீவனாம்ச வழக்கை விசாரித்த கர்ணன், ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் உறவுகொண்டால் திருமணமாகக் கருதப்படும் என்ற வகையில் கூறிய கருத்து சர்வதேச அளவில் கவனத்தையும் கேலியையும் உருவாக்கியது. பிறகு, தன்னுடைய உத்தரவு குறித்து யாரும் ஊடங்களில் பேசக்கூடாது என ஆணையும் பிறப்பித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டில் சிவில் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவது குறித்த ஒரு பொது நல மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய ஒரு அமர்வு விசாரித்துக்கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த கர்ணன் நீதிபதிகள் தேர்வு வெளிப்படையாக இல்லையெனக் குற்றம்சாட்டினார். அந்த வழக்கில் தான் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல்செய்யப்போவதாகவும் கூறினார்.

சொந்த செலவில் மரங்களுக்கு ''மறுவாழ்வு" கொடுத்த எம்.எல்.ஏ

பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

தான் பணியாற்றும் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வில், ஒரு நீதிபதி சென்று வாதிட்டதால், இந்த விவகாரம் அகில இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு அப்போதைய தலைமை நீதிபதியான ஆர்.கே. அகர்வால், கர்ணனை பார்த்து சக நீதிபதிகள் அஞ்சுவதால், சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென தலைமை நீதிபதி சதாசிவத்திற்குக் கடிதம் எழுதினார்.

இதையடுத்து மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்குக் கடிதம் எழுதினார் கர்ணன். மேலும், தான் முன்பு நீதிபதிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்வரை, இடமாற்ற கோரிக்கை குறித்து எழுதப்பட்ட கடித்ததின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதினார்.

கர்ணன் மீது புகார் தெரிவித்த நீதிபதிகள்

2014 ஆகஸ்டில் சஞ்சய் கிஷன் கவுல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் பல நீதிபதிகள் மீது தனிநபர் தாக்குதலில் கர்ணன் ஈடுபடவே, 20 நீதிபதிகள் ஒன்றாக இணைந்து கர்ணனை இடமாற்றம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதினர்.

படத்தின் காப்புரிமை PTI

2015-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கர்ணன் எழுதிய கடிதத்தில் ஒரு நீதிபதி, தன்னிடம் உதவியாளராக இருக்கும் சட்டம் பயின்ற பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், தான் தலித் என்பதால் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தன்னை அவமானப்படுத்துவதாகவும் முக்கியத்துவமல்லாத வழக்குகளையே தன்னை விசாரிக்க வைப்பதாக தலைமை நீதிபதி மீதே தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தார்.

அதற்குப் பிறகு, தனக்கு முக்கியத்துவமில்லாத வழக்குகளே ஒதுக்கப்படுவதால், தான் நீண்ட விடுமுறையில் செல்வதாக தலைமை நீதிபதிக்கு கர்ணன் கடிதம் எழுதினார்.

பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு கர்ணன் மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவுக்கு கர்ணன் இடைக்காலத் தடை விதித்ததோடு, ஊடகத்தினரை தன் சேம்பருக்கு வரவழைத்து பேட்டியும் கொடுத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்தத் தடையை நீக்கியதும், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென சென்னை நகரக் காவல்துறைக்கு கர்ணன் உத்தரவிட்டார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கர்ணன்

இதையடுத்து கோபமடைந்த உச்ச நீதிமன்றம், அவருக்குப் பணிகள் ஏதும் வழங்க வேண்டாமென உத்தரவிட்டது. இதையடுத்து மன்னிப்புக் கேட்டுக்கொண்ட கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்.

படத்தின் காப்புரிமை CALCUTTAHIGHCOURT.NIC.IN

கொல்கத்தாவில் விவேகானந்தர் பாலம் இடிந்து விழுந்த வழக்கில், நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்ட ஒருவருக்கு, தனது சேம்பரில் வைத்து பிணை வழங்கினார் கர்ணன், அதற்குப் பிறகு கல்வி தொடர்பான வழக்குகள் மட்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.

இதன் உச்சகட்டமாக இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதியன்று இந்தியப் பிரதமருக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பினார். அந்தக் கடிதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த 20 நீதிபதிகள் - ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருப்பவர்கள் - ஆகியோரைப் பற்றிய ஊழல் புகார்களை அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 13-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென கர்ணனுக்கு உத்தரவிட்டது. ஆனால், நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, தன் மீது நாடாளுமன்றம்தான் நடவடிக்கை எடுக்க முடியுமென கர்ணன் கடிதமொன்றை எழுதினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதையடுத்து மார்ச் 10-ஆம் தேதியன்று பிணையில் வரக்கூடிய அழைப்பாணை கர்ணனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆஜராக மறுத்த கர்ணன், மத்தியப் புலனாய்வுத் துறையும் நாடாளுமன்ற அவைகளின் செயலாளர்களும் இது குறித்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளும் தன் முன்பாக ஏப்ரல் 28-ஆம் தேதியன்று ஆஜராக வேண்டுமென ஏப்ரல் பதிமூன்றாம் தேதியன்று உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஆனால், மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த கர்ணன், தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கும் எதிராக பிணை வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தார்.

நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த மோதல்களின் உச்சகட்டமாக கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிட்டது. அவரது அறிக்கைளையும் ஊடகங்களில் பிரசுரிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தனக்கு ஒதுக்கப்படாமல் விவாகரத்து, ஜீவனாம்சம், இழப்பீடு தொடர்பான கோரிக்கைகள் குறித்த வழக்குகளே ஒதுக்கப்படுவதாக கர்ணன் நீதிபதியாக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து குற்றம்சாட்டிவந்தார்.

கர்ணனின் அறிக்கைகளையோ, பேட்டிகளையோ ஊடகங்கள் ஒளிபரப்பக்கூடாது என்று கூறியும் நேற்று ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் கர்ணன். வரும் ஜூன் 11ஆம் தேதியன்று கர்ணன் ஓய்வுபெறுகிறார்.

இது தொடர்பான பிற செய்திகள்:

நீதிபதி கர்ணனுக்கு இதுபோல பல தண்டனை கொடுக்கலாம்: நீதிபதி சந்துரு

நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி கர்ணன் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

`தவறு செய்துவிட்டு தலித் என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தலாமா?'

இதையும் படிக்கலாம்:

பாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்?

உள்ளாடைக்கும் அனுமதி மறுப்பு? நீட் தேர்வில் கிளம்பிய சர்ச்சை!

பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்