'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு'

முஸ்லிம்களுக்கும் தி.மு.கழகத்திற்குமான உறவு சில தொன்மங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதுபோல தோன்றுவது.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKARAFP/Getty Images

இஸ்லாமிய விழாக்களில் பங்கேற்பு

தமிழகத்து முஸ்லிம்கள் மீலாது விழாக்களைச் சிறப்புற நடத்திய காலத்தில் கழகத் தலைவர்கள் அதில் பங்கேற்று நபிகள் நாயகத்தின் புகழ்பாடியது உறவின் உரமாக அமைந்தது.

திமுகவினர், கடவுள் மறுப்புக்கொள்கையாளர்கள் என்ற எண்ணம் நிலவிய காலத்தில் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உளமாறப் போற்றினார்கள்.

இதர சமூகத்தினருடன் உறவு முறைகளைக் கொண்டாடி நல்லிணக்கத்தைப் பேணிய முஸ்லிம் சமூகத்தின் மீது அன்று எவருக்கும் வெறுப்புணர்வு இல்லாதிருந்தது.

மதவாத, சமூக அமைப்புகளற்ற நிலை. எனவே இஸ்லாம் புகழப்பட்டாலும் சகோதர சமூகத்தவர் அதன் பொருட்டாக திமுகவைக் காய்ந்ததில்லை.

1967இல் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பக்கபலமாக முஸ்லிம் வாக்குகள் இருந்தன.

அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுகவை வழிநடத்திய கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் முஸ்லிம் வாக்குகள் பிரியவில்லை.

கழகப் பிளவும்,முஸ்லீம்களின் ஆதரவும்

எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டதில் தென் மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவு கருணாநிதிக்கு இல்லையென்றாகிவிட்டது.

வட மாவட்ட முஸ்லிம்கள் தம் வாக்குகளைச் சேதாரமின்றி கருணாநிதி அரசுக்கும், கட்சிக்கும் வழங்கினார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன் ஆதரவைத் தொடர்ந்தது.

காயிதேமில்லத் தலைமை, கழகத்துடன் உறவாடி முஸ்லிம்களின் நலனைப் பேணியது.

காயிதேமில்லத்தின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீக் பலவீனப்பட்டது.

முஸ்லிம்களின் ஆதரவு அந்த உடைவைப் பொருட்படுத்தாமல் கழகத்தோடு தொடர்ந்தது.

கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான ஒரு தொன்மம் இப்போது உலவியது.

மரணப் படுக்கையில் இருந்த காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் முதல்வரான கருணாநிதியின் கையைப்பிடித்து, முஸ்லிம் சமூகத்தை அவரின் கையில் பத்திரமாக ஒப்படைத்தார்.

முஸ்லிம்களைக் கண்டவிடமெல்லாம் கருணாநிதி இதைப் பேசினார்.

இது இன்னமும் அவநம்பிக்கையற்ற முறையில் முஸ்லிம்களிடம் நிலவுகின்றது.

படத்தின் காப்புரிமை http://www.thanthaiperiyardk.org/

சாரமில்லாத உறவு

மீலாது நபி கொண்டாட்டத்திற்கு கழக அரசு விடுமுறையை அளித்தது.

சாராம்சத்தில் இது எப்பயனையும் தராதபோதும் கருணாநிதியின் பேச்சுக்கலை, முஸ்லிம்களின் ஆதரவை நிலைநிறுத்த உதவியது.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அண்ணா காலத்திய அமைச்சர் சாதிக்பாட்சா கழகத்தின் பொருளாளராகத் தன் ஆயுள்காலம் முழுதும் பொறுப்பு வகித்தார்.

கழகத்தின் முப்பெரும் தலைமைக்கு இது அணிகலன்போல பொலிவைத் தந்தது.

ஆனாலும், சாதிக்பாட்சாவின் காலத்திலேயே செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் கருணாநிதியின் அணுக்கத் தொண்டர்களாய் இருந்தும் அவர்கள் மேலெழ வாய்ப்பளிக்கப்படவில்லை.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ரகுமான்கான், ஆயிரம் விளக்கு உசேன், கா.மு. கதிரவன், களந்தை ஜின்னா உள்ளிட்டோர் அவர்கள்.

பின்னர் அமைச்சர்களாயிருந்த மைதீன்கான், உபயதுல்லா போன்றோரும் கட்சியின் நிர்வாக அதிகாரத்தைப் பெறவில்லை.

சாதி சமயப் பேதங்களை வெளிப்பார்வைக்குப் பாராட்டாத கட்சி திமுக என்றாலும் தேர்தல் காலங்களில் அந்தந்த தொகுதிகளின் சாதி, சமய வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

சென்னை நகரின் பல தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்கு பலத்தைக் கொண்டவை.

ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி. துறைமுகம். சைதாப்பேட்டை, சேப்பாக்கம் (அக்காலத்தில் சேப்பாக்கம் தனியொரு தொகுதியாக இருந்தது), போன்றவற்றில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

ஆயிரம் விளக்கு தொகுதியில் உசேனுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போனார்.

பின், அதையே காரணம் காட்டி மறுமுறை அவர் புறக்கணிக்கப்பட்டார். இதர தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படாமல் தலைவர்கள் தம்மைத்தாமே அந்தத் தொகுதிகளின் வேட்பாளர்களாயினர்; வெற்றியும் பெற்றனர்.

இத்தொகுதிகளில் தாம் உறுதியாக வெற்றிபெற முடியும் என்று கழகத் தலைவர்கள், முஸ்லிம்கள் மீது அவ்வளவு உறுதிகொண்டனர்.

எம்.ஜி.ஆரும் முஸ்லீம்களும்

இத்தகைய புறக்கணிப்புகள் இருந்தாலும், முஸ்லிம்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தது வியக்கத்தக்கதாகும்.

திமுகழகமும் முஸ்லிம்களோடு குரோதத் தன்மையுடன் இருந்ததில்லை. அதற்கு இன்னொரு காரணம், எம்.ஜி.ஆர்!

அவருடைய ஆட்சிக்காலத்தில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர்.

கன்யாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகுதியில் கலவரங்கள் வெடித்தன.

இந்த இரண்டு விவகாரங்களிலும் எம்.ஜி.ஆர் ஆட்சியின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லை.

தன் ஆட்சியின் கீழே இத்தகைய விபரீதங்களை நிகழாமல் தடுத்திருக்க முடியும்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இது பெருவடிவமானது.

எம்.ஜி.ஆர் இந்து முன்னணிக்கு எதிராக ஏதாவது செய்வார் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த்து. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதே மூச்சில் நடந்த மற்றுமொரு ஆச்சரியம் சாதிப் பிளவுகளும் கூர்மைப்படுத்தப் பட்டன. இந்துக்களாகத் திரளும் அதேநேரம் அவர்கள் சாதீயவாத அமைப்புகளிலும் குறுகினர்.

அவை எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின் ஆசிகளோடு வளர்ந்தன.

இவையெல்லாவற்றுடனும் எம்.ஜி.ஆர் நெருக்கமான உறவுகளைப் பேணினார்.

படத்தின் காப்புரிமை அருண்

இவரும் தேர்தல் களத்தில் முஸ்லிம்களை அபூர்வமாகவே நிறுத்தினார்.

மதரீதியான வேற்றுமை உணர்ச்சிகள் விரவப்பட்டன. எம்.ஜி.ஆர் இந்து முன்னணிக்கு எதிராக ஏதாவது செய்வார் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது; அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்து முன்னணி தன்னை வளர்த்தெடுக்க கட்சிப் பாகுபாடுகளைத் தந்திரமாக விலக்கிவைத்தது.

இந்து முன்னணியின் கூட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளிலிருந்தும் வட்டார நிர்வாகிகள், பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இக்கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்த இதர அனைத்துக் கட்சியினரும் தம் கட்சி, கொள்கைப் பாகுபாடு மறந்து கலந்து உறவுகளையும் வளர்த்துக்கொண்டனர்.

"முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருப்பதுபோல இந்துக்களுக்கு இந்து முன்னணி"என்று எம்.ஜி.ஆர் சொன்னபோது தென் பகுதி முஸ்லிம்களின் ஆதரவும் இற்றுப்போனது. வேறு கட்சிகள் பலமாக இல்லாத நிலையில், இங்குள்ள முஸ்லிம்களின் வாக்குகள் மீண்டும் திமுகவுக்கே உரித்தாயின.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சமயத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் அந்த வெற்றியை உறுதிப்படுத்தின.

ஆனால், கருணாநிதி இதைத் தந்திரமாக மறைத்தார்; தான்தான் முஸ்லிம்களுக்கு எண்ணற்ற சலுகைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியதாக மேடைகளில் முழங்கிக்கொண்டிருந்தார்.

பலவகைகளிலும் கருணாநிதியிடம் எடுத்துக்கொள்ளும் உரிமைகளை வேறுகட்சித் தலைமையிடம் முஸ்லிம்களால் அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடிந்ததில்லை.

எல்லாவற்றையும் சோதனைக்குள்ளாக்குவதுபோல 1997ஆம் ஆண்டில் கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை நிகழ்ந்தது.

அது திமுகவின் ஆட்சிக்காலம். அந்தக் கொலையானது மதரீதியான பூசல்களின் அடிப்படையில் நிகழ்ந்ததல்ல. இதை கோபாலகிருஷ்ணனின் தலைமையிலான விசாரைணக் குழு கண்டறிந்தது.

வேர் பிடிக்கத் தொடங்கிய வஹாபியம்

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நிராதரவான மனநிலையைச் சாந்தம் செய்யும் அரசியல் நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கவில்லை. அதன் தாக்கம் தமிழகத்தில் கூடுதலாயிருந்தது.

அதிலிருந்து வஹாபியம் வேர்பிடிக்கலானது. வஹாபியப் பிரசாரத் தாக்கத்தால், இளைஞர்களின் மனநிலை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கித் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம் என்பதுதான் அன்றைய நிகழ்வின் துரதிர்ஷ்டம்.

இரண்டுக்குமான முடிச்சுக்குள் செல்வராஜ் கொலை சிக்கிக்கொண்டது. வஹாபியத் தாக்கத்திற்கு நேரெதிரான ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அப்போது கோவையைச் சூழ நின்றது.

எனவே, வளர்ந்துவரும் இரண்டு தீவிரவாத இயக்கங்களின் மோதல் களமானது கோவை. செல்வராஜ் கொலையை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தக்கபடி பயன்படுத்தியது.

அதனுடன் கோவை காவல்துறையும் வன்முறையில் இறங்கி, நிலையை இன ஒடுக்கமாக உருவெடுக்க வைத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

எப்போதும் முஸ்லிம்களின் அபரிமிதமான துணையுடன் கருணாநிதி ஆட்சி நடத்திவந்தாலும். காவல்துறைக்குப் பொறுப்பானவர், முதல்வர் என்ற முறையில் நிர்வாகத்தை முடுக்கிச் சூழலைத் தடுக்க கருணாநிதி முனையவில்லை.

ஊடகச் செய்திகளின்படி இந்துக்களும், முஸ்லிம்களும் நேரடியாகவே நகரின் பல பகுதிகளிலும் மோதி நகரைச் சூறையாடுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கின. ஆனால், இறுதி நிலவரம் 19 முஸ்லிம்களின் பிணங்கள் மட்டுமே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த காட்சியில் நிறைவுபெற்றது.

நடந்தது கலவரம் அல்ல; ஒருசாரார் மீது காவல்துறையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இணைந்துநின்று மேற்கொண்ட இன ஒடுக்குமுறைதான் என்பது உறுதியானது.

கோவை கோட்டைமேடு போன்ற பகுதிகள் தனித் தீவுகளாகப் பராமரிக்கப்பட்டன; அனைத்து முஸ்லிம்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்; பெண்கள் பாலியல் ரீதியிலான இன்னல்களுக்குக் கடுமையாக ஆளாயினர்.

அவர் கலவரத்தின்பின் நேரடியாகவாவது கோவைக்கு வந்திருக்கலாம்; பாதிக்கப்பட்டவர்கைளப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கலாம்; எதுவும் நடக்கவில்லை.

கருணாநிதியும், திமுகவும் தமிழ் முஸ்லிம்களின் மனத்திலிருந்து காணாமல்போயினர். கழகக் கொள்கைகள், அண்ணாவின் வழி, பெரியாரின் வழித்தோன்றல் என்ற அத்தனைப் பரிமாணங்களிலும் திமுக பகிரங்கமாகத் தோற்றுப்போன முதல் கட்டம் இது.

பின்னர், திமுக முஸ்லிம்களின் ஆபத்பாந்தவன் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு

2007ஆம் ஆண்டில் சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சர்வதேச மாநாடு ஓரளவுக்குக் கருணாநிதியின் பழைய நெருக்கத்தைக் கொண்டுவர உதவியது.

அம்மாநாட்டில், அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது; ஏற்கெனவே, வேறுபல இஸ்லாமிய இயக்கங்களும் இக்கோரிக்கைகளுக்காகப் போராடி வந்திருப்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

முஸ்லிம்களுக்கு 3.5% அரசுப்பணி இப்போது நடைமுறையில் இருந்துவருவது ஓரளவுக்கு அவர்களின் நிலையை மேம்படுத்த உதவியுள்ளது.

இந்தப் பிளவு மனநிலையிலிருந்து திமுகவும் முஸ்லிம்களும் மீண்டும் நெருங்கிவர தேசிய அரசியல் நிலவரேம காரணமாக அமைகின்றது - இன்று வரையிலும்! இங்கு திமுகவே தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முஸ்லிம்களின் பார்வையில் பெருமதிப்பு கொண்டவையாகக் கருதப்பட்டாலும், அவர்களிடம் இன்னும் செல்வாக்கினைச் செலுத்த முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமய சூழல்களுக்கேற்ற நடைமுறைகளை வகுப்பதில் பெரும் தவறுகளை இழைத்துக்கொண்டிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Arunsubasundaram

ஒருகாலத்தில் யூனியன் முஸ்லிம் லீக்கின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கும், கேலிக்கும் உள்ளாக்கி வளர்ந்துவந்த சில இயக்கங்கள் அதே முஸ்லிம் லீக்கின் பாதைக்கே திரும்பிவிட்டன.

அக்கட்சிகள் பலப்பலத் துண்டுகளாகச் சிதறிவிட்டதாலும் அவற்றின் அடிப்படைவாத இஸ்லாமியப் போக்குகளாலும் தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்துள்ளன.

பாஜகவால் திமுக ஆதரவு நிலை எடுக்கும் முஸ்லீம்கள்

இந்நிலையில்தான் மத்திய பா.ஜ.க அரசு பகிரங்கமாக முஸ்லிம் எதிர்ப்பு மனோபாவ நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டுள்ளது.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பொருட்படுத்த முடியாத அரசியல் வியூகத்தை அது உத்தரப்பிரேதச மாநிலத் தேர்தல் களத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டிருப்பது முக்கியம்.

இது முஸ்லிம்களுக்குக் கடும் பின்னடைவாகும்.

இத்துடன் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைகள், முத்தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் பா.ஜ.க.அரசு மேற்கொள்ளும் கெடுபிடிகள் தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. பேசும் தேசிய அரசியலை, முஸ்லிம்கள் திராவிட அரசியலின் நெகிழ்வுத்தன்மையுடன் ஒப்பிடுகிறார்கள்.

எனவே, மீண்டும் முஸ்லிம்கள் திமுகவையே அண்டி நிற்கிறார்கள். இது அன்றைய தொன்மங்களைச் சார்ந்து நின்ற மன ஈடுபாடுமிக்க உறவல்ல; மாறாக, அச்சத்தினாலும் ஆட்சியைக் கைப்பற்றும் யத்தனத்தினாலும் இரு தரப்பும் தாற்காலிகமாகக் கொண்டிருக்கும் உறவாகவே கருதப்படும்.

ஸ்டாலின் தலைமையில் திராவிட இயக்க அரசியல் வலுப்படாத வரைக்கும் இந்த உறவில் பெருமிதமும் இல்லை; வலுவும் இல்லை.

இது தொடர்பான பிற கட்டுரைகள் :

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

தலித்துகளுக்கு நன்மை செய்தனவா திராவிட ஆட்சிகள்?

திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை`

`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்