தமிழகத்தில் அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு: தொழிற்சங்க நிர்வாகிகள் கைது

தமிழகத்தில் போக்குவரத்து பணிமனைகளிலிருந்து புறப்பட்ட அரசு பேருந்துகள் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக, தொமுச, சிஐடியூ உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் இன்று திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தின் காரணமாக மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசுக்கு ஆதரவாக 37 போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள பணிமனைகளிலிருந்து வெளியே புறப்பட்ட அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் என போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து போக்குவரத்து பணிமனைகள் அனைத்திற்கும் பலத்த காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளாக தனியார் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது; தவிர சென்னையில், கூடுதல் புறநகர் மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.

இருந்தபோதும், நீண்ட பயண நேரம் கொண்ட பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படாத காரணத்தால், வெளியூர்களுக்கு செல்ல அதிக சிரமம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சில இடங்களில், சிறிய வகை பேருந்துகளையே நீண்ட தூர பயணத்திற்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் பயணம் செய்வது மிகவும் சிரமம் அளிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதே போல் தனியார் பேருந்துகளில் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை முழுமையாக தடுக்க அரசு தவறி விட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

கோவை, மதுரை, திருச்சி, தேனி, ராஜபாளையம், விருதுநகர், தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், இதனால் மக்கள் பெருமளவில் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளியூருக்கு செல்ல முடியாமலும் பயணிகள் தவிப்பதால், அரசு நிலைமையை சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்த பிற செய்தி:

துவங்கியது போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்