பாலியல் வல்லுறவால் 10 வயது சிறுமி கர்ப்பம் : கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி?

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒரு10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்தியாவில் மருத்துவர்கள் குழுவொன்று சந்தித்து ஆலேசனை நடத்துகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

வளர்ப்பு தந்தையால் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட இச்சிறுமிக்கு, இன்னும் நான்கு மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளதாக, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

கருத்தரித்துள்ள பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்காவிட்டால், கருத்தரித்து 20 வாரங்களுக்கு பிறகு ஒரு பெண்ணின் கருவை கலைக்க இந்திய சட்டங்கள் அனுமதிக்காது.

அண்மைய மாதங்களில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டி வந்த பல மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு வந்துள்ளன. இதில் பல பெண்கள் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டதால் கருத்தரித்து 20 வாரங்களை கடந்த பெண்கள் ஆவர். இந்த விஷயத்தில் முடிவெடுக்க மருத்துவ நிபுணர்களிடம் அப்பெண்களின் மருத்துவ அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் நகரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறு சிறுமியின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து முடிவெடுக்க முதுநிலை மருத்துவ அறிவியல் கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் சந்திக்கவுள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ள இந்த 10 வயது சிறுமியின் தாயார், தனது மகள் கருவுற்று இருக்கலாம் என்று சந்தேகித்து மகளை அழைத்துக் கொண்டு மருத்துவரை சந்தித்த பிறகுதான், இச்சிறுமி கருவுற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

இது குறித்து விசாரித்த போது, தனது வளர்ப்பு தந்தை தன்னை பல முறை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், இதனை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரித்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.

அவரது தாய் இது குறித்து காவல்துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டதாக ரோதக் நகர போலீஸ் அதிகாரியான பங்கஜ் நெய்ன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம் :

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை

மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது' : பாரீஸ் ஜாக்சன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்