தொடரும் பேருந்து வேலைநிறுத்தம்: தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • 16 மே 2017

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்து போக்குவரத்துத் தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் நடத்திவரும் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பெருமளவில் இயங்காததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Image caption பேருந்து வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் வேலை நிறுத்தம் துவங்கியது.

நேற்று 75 சதவீத பேருந்துகள் ஓடாத நிலையில், இன்றும் அதே நிலை நீடித்துவருகிறது.

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் பேருந்துகள் ஓடாததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Image caption வெறிச்சோடிக் காணப்பட்ட சாலைகள்

இதற்கிடையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கு அரசு முயற்சித்து வருகிறது. திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து 135 தனியார் பேருந்துகள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது தவிர, தற்காலிகப் பணியாளர்களை நியமித்தும் தமிழ்நாடு அரசு பேருந்துகளை இயக்கிவருகிறது.

பல இடங்களில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவை கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

"1.25 லட்சம் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 90 சதவீதப் பேருந்துகள் ஓடவில்லை. அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்" என சிஐடியுவின் மாநிலத் தலைவரான சவுந்தரராஜன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இதுவரை ஐந்து முறை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த வாரம் முழுவதும் மெட்ரோ ரயில்களில் 40 சதவீதம் கட்டணம் குறைவாக இருக்கும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பேருந்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கவேண்டிய பலன்கள் ரூ. 1700 கோடி அளவுக்கு நிலுவையில் உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆயுள் காப்பீட்டுக் கழகம், வைப்பு நிதி போன்ற சேமிப்புத் திட்டங்களுக்காக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 4000 கோடி ரூபாய் அளவிலான பணத்தை போக்குவரத்துக் கழகங்கள் வேறு வகையில் செலவழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையே, தொழிலாளர்களை உடனடியாக அழைத்துப் பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமென தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்கலாம் :

உங்கள் கணினி `சைபர்' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா?

உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோளை வடிவமைத்துள்ள தமிழக மாணவன்

பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தப்படும் வரை ஆணாக நடித்த பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்