பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பள்ளி மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டம்

  • 16 மே 2017

தினமும் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, ஹரியாணாவைச் சேர்ந்த 13 பள்ளி மாணவிகள் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

16 முதல் 18 வயதுள்ள பள்ளி மாணவிகள் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆண்கள் தங்களை பற்றி பாலியல் ரீதியாக கேலி செய்வதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.

ரிவேரி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தங்களை பாதுகாக்க தவறிவிட்டதாக பதின்மவயது மாணவிகள் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகள் பெண் குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தற்போது உறுதியளித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளின் கிராமத்தில் உள்ள பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்போவதாக அரசு உறுதியளித்துள்ளது. இதனால் படிப்பதற்காக அண்டை கிராமத்திற்கு செல்ல தேவையில்லை என்று கூறியுள்ளது.

அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தரும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறிய மாணவிகள் உணவை தவிர்த்து, தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இல்லாத சில பெற்றோர்கள் மற்றும் மாணவிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

''தினமும் கேலி ,கிண்டலுக்கு நாங்கள் ஆளாகிறோம்,'' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு மாணவி தெரிவித்தார்.

நாங்கள் படிப்பதை, கனவு காண்பதை நிறுத்திவிடவேண்டுமா? பணக்கார மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மட்டும்தான் கனவு காண அனுமதி உள்ளதா? அரசு, எங்களை பாதுகாக்க வேண்டும் அல்லது எங்களது கிராமத்தில் உள்ள பள்ளியை தரம் உயர்த்தவேண்டும்,'' என்று மாணவிகள் தெரிவித்தனர்.

''ஆண்கள் எங்களை தொட முயற்சிக்கின்றனர், தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்,'' என்கிறார் மாணவி சுஜாதா .

''எங்களின் தொலைபேசி எண்களை சுவர்களில் எழுதுகின்றனர், மோசமான கருத்துக்களை எழுதுகின்றனர். நாங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவாறு மிக மோசமான செயல்கள் நடக்கின்றன,'' என்று சுஜாதா தெரிவித்தார்.

ரிவாரியில் இருந்து பிபிசி ஹிந்தி செய்தியாளர் நிதின் ஸ்ரீவாத்ஸவா தரும் கூடுதல் தகவல்கள்:

பாதுகாப்பு கோரும் ஹரியாணாவை சேர்ந்த இந்த மாணவிகளை அச்சுறுத்தும் வாரமாக இந்த வாரம் இருந்தது. தங்களது தினசரி வேலை மற்றும் வயல்வேலைகளை விடுத்து பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலின விகிதம் அடிப்படையில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஹரியாணா ஒன்றாகும். இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சாதாரணமானது.

ஆனால் இளம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது இதுதான் முதல்முறை. இந்த பெண்கள் தங்கள் சமூகத்திலிருந்து வலுவான ஆதரவை பெற்றுள்ளனர். பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்தவேண்டும் என்ற கருத்து கொண்ட ஆண்களின் ஆதரவும் அதில் அடங்கும்.

இந்த பெண் குழந்தைகள் கஷ்டப்படுவதை பார்க்க வேதனையாக உள்ளது,'' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு மாணவியின் தாய் தெரிவித்தார்.

''என்னால் விவரிக்க முடியாத அளவு துன்புறுத்தலை இந்த மாணவிகள் எதிர்கொண்டுள்ளனர். நாங்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி அழுத்தம் தருகிறார்கள்,'' என்றார் அவர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவியின் தந்தை ரோஹ்தஷ் குமார் இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்றார்.

காவல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தரும் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் தரவேண்டும் என்றார் ஒருவர்.

''கடந்த காலத்தில் இதுபோன்ற உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை. போலியான வாக்குறுதிகளால் எங்களின் போராட்டம் பயனற்றுப் போகக்கூடாது என்று நாங்கள் உறுதியாக உள்ளோம்,'' என்றார்.

இதையும் படிக்கலாம்:

கறுப்பான, பருமனான பெண்கள் மீது ஏன் இவ்வளவு வேறுபாடு?

மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்க தடை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்