மும்முறை தலாக் வழக்கு விசாரணை: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

  • 18 மே 2017

மும்முறை தலாக் கூறி முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் வழக்கம் தொடர்பான விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Mahmud Hams
Image caption முஸ்லிம் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறதா?

கடந்த 6 நாட்களாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முக்கியத் திருப்பமாக, திருமண ஒப்பந்தத்தின்போது, மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திருமண ஒப்பந்தத்தில் ஒரு பிரிவைச் சேர்த்துக் கொள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இதுதொடர்பான விசாரணையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், நிக்கா நாமா என்று சொல்லபடுகின்ற முஸ்லிம்களின் திருமண ஒப்பந்தத்தில், 3 முறை தலாக்கூறி விவாகரத்து செய்யும் பிரிவை சேர்க்க முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த கபில் சிபல், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அதை ஏற்றுக் கொள்வதாகவும், இதுதொடர்பாக விரைவில், காஸி எனப்படும் மாவட்ட முஸ்லிம் திருமணங்களை நிறைவேற்றும் நீதிபதிகளுக்கு இதுதொடர்பான ஆணைகள் விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.

மத ரீதியாக, மும்முறை தலாக் சொல்வது பாவலம் என்று சொல்லும் நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டபோது, 1400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழக்கத்தை நாங்களே சிறிது சிறிதாக மாற்றிவிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இந்தப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மோதி அரசின் நிலைப்பாடு என்ன?

அரசின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நரேந்திர மோதி அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

"முஸ்லிம் சமுதாயத்தில் பல பெண்கள் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால், மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்துவிடுகிறார்கள். அரசியல் சட்டத்தால், மற்ற பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, முஸ்லிம் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. எந்த ஒரு மத ரீதியான சட்டமும், தனி மனித உரிமைகளை மீறினால், நீதிமன்றம் தலையிடலாம்" என்று அட்டார்னி ஜெனரல் கருத்துத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

கடந்த 67 வருடங்களாக முஸ்லிம் பெண்கள் இத்தகைய பிரச்சனையைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களின் உரிமையைப் பாதுகாக்க

அரசு ஏன் சட்டம் இயற்றக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

மும்முறை தலாக் பிரச்சனை நீதிமன்றத்துக்கு வந்திருக்கும் நிலையில், என்ன செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தை அணுகி, தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்தார். தலாக் விவாகரத்து முறையால், கணவன் தன்னைக் கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

தீர்ப்பு எப்போது?

பிறகு உச்ச நீதிமன்றமே இந்தப் பிரச்சனையை தாமாக முன்வந்து விசாரிக்கத் துவங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முதல் முறையாக, அரசியல் சாசன அமர்வு இந்தப் பிரச்சனை தொடர்பான விசாரணையை நடத்தியிருக்கிறது. 6 நாட்கள் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு, ஜூலை மாத இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலாக்கிற்கு மாற்று உண்டா? உச்சநீதிமன்றம் கேள்வி

முத்தலாக் பிரச்சனையை விசாரிக்கும் `சர்வமத' நீதிபதிகள் அமர்வு

முன்னாள் கணவரை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

தபால் அட்டையில் மனைவியை விவாகரத்து செய்தவர் கைது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்