சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரும் நீதிபதி கர்ணனின் மனு நிராகரிப்பு

  • 19 மே 2017

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை திரும்பப் பெறக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பதிவு செய்ய உச்சநீதிமன்றப் பதிவாளர் மறுத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசுத் தலைவரும் அவரது கருணை மனுவை அடுத்த சில நாட்களில் பரிசீலிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றப் பதிவாளர் மனுவை ஏற்க மருத்திருப்பதால், நீதிபதி கர்ணனுக்கு சரணடைவதைத் தவிர மாற்று வழியில்லை.

இதுதொடர்பாக, நீதித்துறை பதிவாளர் கடந்த 12-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், இதைத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 8-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, மனுத்தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், மே 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு அவர் சவால் விட விடுகிறார் என்பது தெளிவாகிறது என்று பதிவாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த உத்தரவை நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் நெடும்பறா மேத்யூஸிடம் துணைப்பதிவாளர் கடந்த 15-ஆம் தேதி தெரிவித்திருக்கிறார்.

"விசாரணை, சட்ட விதிமுறைகளின்படி நடத்தப்பட்டு, நீதிபதி கர்ணன் கடுமையான குற்றத்தைப் புரிந்திருப்பதால் அவர் தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதனால், அவர் தண்டிக்கப்பட்டு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், அந்த முடிவு, இறுதி நிலையை எட்டிவிட்டது. மேலும், அரசியல் சட்டத்திந் 32-ஆவது பிரிவின்படி, உச்சநீதிமன்ற விசாரணைக்கு சவால்விட முடியாது. அதனால், உங்களது ரிட் மனு விசாரணைக்கு ஏற்கக்கூடிய தகுதி படைத்தது அல்ல. அதனால், அதைப் பதிவு செய்ய முடியாது" என்று பதிவாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PTI

பிப்ரவரி 8-ஆம் தேதி, தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் துவக்கியது முதல், ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு, தனக்கு தண்டனை விதிக்கப்பட்டது வரை அனைத்துமே சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று கர்ணன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சில நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ எதிரானவை அல்ல என்றும், அதில் குறிப்பிடப்பட்ட நீதிபதிகளுக்கு எதிரானவை மட்டுமே என்றும் கர்ணன் குறிப்பிட்டிருந்தார்.

தான் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்றால், அதிகபட்சமாக, சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளில் அவமதிப்பு வழக்குத் தொடரலாம். ஆனால், மே 9-ஆம் தேதி தான் ஆஜராகாத நிலையில் தனக்கு எதிராகப் பிறப்பித்த 6 மாத சிறை தண்டனை உத்தரவும், பிப்ரவரி 8-ஆம் தேதி பிறப்பித்த நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் செல்லாது என்றும், அவை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கர்ணன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி கர்ணன் சர்ச்சை தொடர்பான செய்திகள்:

எங்கே இருக்கிறார் நீதிபதி கர்ணன்?

சிறை தண்டனையை திரும்பப் பெற கோரி நீதிபதி கர்ணன் மனு

நீதிபதி கர்ணனுக்கு இதுபோல பல தண்டனை கொடுக்கலாம்: நீதிபதி சந்துரு

நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்