வலியை உணராமல் இருப்பது வலிமையா? பலவீனமா?

  • 20 மே 2017

வலி இல்லாமல் இருப்பது நல்லது தான் என்று சொன்னாலும், வலியை உணராமல் இருப்பது நல்லதல்ல. வாழ்க்கையில் வலி என்ற உணர்வு இருப்பது இயல்பானது. அதை உணர்வதும் அவசியமானது.

படத்தின் காப்புரிமை Getty Images

வலி இல்லையென்றால் அதுவும் ஆபத்தானதே. இங்கு நாம் குறிப்பிடுவது சூழ்நிலைகளால் ஏற்படும் வலி குறித்து அல்ல, உடல்வலி, காயம், உடல் பிரச்சனைகள் பற்றிததான் பேசுகிறோம். வலியை உணரமுடியாததும் ஒரு நோய்தான்.

வலி என்பது, கவனமாக இருக்க நம்மை எச்சரிக்கும் உடலின் மொழி. ஆனால் சிலர் வலி என்ற உணர்வையே வாழ்க்கை முழுவதிலும் உணர்வதில்லை.

ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனம். உடலில் காயம் ஏற்பட்டாலோ, ரத்தம் கொட்டினாலோ, அதிக சூடுபட்டு காயம் ஏற்பட்டாலோ, கொதிக்கும் எண்ணெய் கொட்டினாலோ அதை சிலரால் உணரமுடியாது. அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும், மயக்க மருந்து கொடுக்க வேண்டிய தேவையே இல்லை, ஏனெனில் அவர்களால் எந்த வலியையும் உணரமுடியாது.

மருத்துவர்கள் இதை "பிறவிசார் வலி உணர்திறனற்ற தன்மை" (congenital insensitivity to pain) என்று குறிப்பிடுகிறார்கள். உலகில் மிகச் சிலருக்கே இந்த நோய் ஏற்படுகிறது. சி.ஐ.பி என்னும் இந்த நோய், சிறு வயதில் இருக்கும், ஆனால் பெரியவர்களாக வளர்ந்த பிறகு சரியாகிவிடும் என்று சொல்லப்பட்டாலும், வளரும்போது சிலருக்கு இந்த நோயும் அதிகமாகிவிடுகிறது.

அவர்களது இந்த குறைபாட்டில் இருந்து கடுமையான நாள்பட்ட வலியுடன் அவதிப்படுபவர்களுக்கான பாதுகாப்பான புதிய வழிகளை கண்டறிய முடியுமா?

பிரிட்டனில், கேம்பிரிட்ஜ் மருத்துவ அமைப்பின் மருத்துவர் ஜோச்ஃப் வுட், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்கிறார். வலி உணரமுடியாத அவர்களுக்கு வயதும் குறைவாகவே இருந்ததாக சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை iStock

அவர்கள் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உயிரிழக்கும் வகையிலான ஆபத்துகளை எதிர்கொள்ளும் அவர்களில் பலர் சிறு வயதிலேயே இறந்துபோனதாகவும் அவர் சொல்கிறார். அவர்கள் செய்யும் செயலின் விளைவை அவர்கள் அறிவதில்லை என்று சொல்லும் டாக்டர் ஜோசஃப், அடிபட்டாலோ ஏன் உடலில் சூடுபட்டால் கூட அவர்களால் உணரமுடிவதில்லை என்று சொல்கிறார்.

1932 ஆம் ஆண்டில் இந்த நோயின் பாதிப்பு முதன்முறையாக வெளிவந்தது. நியூயார்க்கை சேர்ந்த டாக்டர் ஜார்ஜ் டியர்போர்ன், 54 வயதான ஒருவருக்கு இந்த நோய் இருப்பதை கண்டறிந்தார். அதற்கு பிறகு 70 ஆண்டுகள் வரை பல மருத்துவ சஞ்சிகைகளில் இந்த நோய் பற்றி எழுதப்பட்டுவந்தது.

ஆனால் இது சமூக ஊடகங்களின் காலம். இணையதளம் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது.

மிகவும் ஆபத்தான இந்த நோய் குறித்த தகவல்கள் அதிக அளவிலான மக்களை சென்றடையச் செய்து, அவர்களை காப்பாற்றவேண்டும் என்று விஞ்ஞானிகளும் உணர்ந்துவிட்டார்கள்.

இதைத்தவிர, வலியே இல்லாதவர்களின் குறைபாட்டில் இருந்து, நாள்பட்ட வலியுடன் அவதிப்படுபவர்களுக்கான பாதுகாப்பான நிவாரணங்களை கண்டறியும் சாத்தியங்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை iStock

வலியுடன் தொடர்புடைய மருந்து வர்த்தகம்

வலி நிவாரணம் என்பது மனிதனின் பாதுகாப்பிற்கானது மட்டுமல்ல, இதன் பின் பெரிய அளவிலான வணிகமே இருக்கிறது

ஒரு மதிப்பீட்டின்படி, தினந்தோறும் சுமார் 14 பில்லியன் வலி நிவாரண மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆண்டுதோறும் பெரியவர்களில் பத்தில் ஒருவருக்கு (10% பெரியவர்களுக்கு) நாள்பட்ட வலி ஏற்படுவது கண்டறியப்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறைகிறது என்பதும் கவலையளிப்பதாக உள்ளது.

நமது தோலுக்கு அடியில் இருக்கும் நரம்புகளே நமக்கு வலியை உணர வைக்கின்றன. இவை பென் நியூரான்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நியூரான் ஒருவிதமான புரதத்தின் மூலமாக வலியை உணரும் செய்தியை நமது மூளைக்கு அனுப்புகிறது. பிறகு மூளையானது சம்பந்தப்பட்ட பகுதிக்கு எச்சரிக்கை மணியாக வலி உணர்வை அனுப்புகிறது.

மருந்துகளாலும் நோய் ஏற்படலாம்

மனித உடலில் மொத்தம் ஆறு வகையான வலி நரம்புகள் உள்ளன. இவை ஒரு எலுமிச்சையில் உள்ள அமிலம் வெப்ப மாறுதல்களினால் மாறுவதைப் போன்று, உடலில் மாற்றம் ஏற்படும்போது, வலியை ஏற்படுத்தவேண்டும் என்ற சமிக்ஞைகளை முதுகெலும்புக்கு அனுப்புகிறது. அங்கிருந்து அது மத்திய நரம்பு மண்டலத்தை சென்றடைந்து வலியாக உணரப்படுகிறது.

உயர் அழுத்தம் அல்லது அட்ரினலின் போன்ற சூழ்நிலைகளில் உருவாகும் இயற்கையான வேதிப்பொருட்களான எண்ட்ரோபின்கள் உடலில் உருவானால் மூளை வலி உணர்வை நிறுத்திவிடும்.

படத்தின் காப்புரிமை iStock

வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன, அவை பெரும்பாலும் ரசாயனங்களால் தயாரிக்கப்படுபவை என்பதோடு அவற்றில் சிறிதளவு மார்ஃபின், ஹெராயின், ட்ரமடல் போன்ற போதை மருந்துகளும் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது.

அமெரிக்காவில் மட்டும், 2000 ஆவது ஆண்டு முதல் தற்போது வரை வலி நிவாரண மருந்துகளை உட்கொள்பவர்களில் 91 பேர் தினந்தோறும் இறந்துபோகின்றனர்! இந்த இடைப்பட்ட ஆண்டுகளின் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு இறந்து போனவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்!

ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணத்திற்கான மாற்று மருந்துகள் கடுமையான வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பதில்லை என்பதோடு, தொடர்ந்து நீண்ட காலம் பயன்படுத்தும்போது, கடுமையான இரைப்பைக் குடல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். வலி நிவாரணிகளை கண்டறியும் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பெரிய அளவில் ஆறுதல் அளிப்பதாக இல்லை.

நியூ ஃபவுண்ட்லேண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பல சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டால், ஏன் காலே முறிந்து போனாலும் கூட அது குறித்த உணர்வு ஏற்படுவதிலை என்பது 2000 வது ஆண்டில் கனாடா நாட்டின் ஜெனான் என்ற ஒரு சிறிய மருந்து நிறுவனத்திற்கு தெரியவந்தது. ஆணியின் மீது நின்றாலும் கூட அது குறித்த உணர்வு எதுவும் அவர்களுக்கு ஏற்படவில்லை.

சி.ஐ.பி நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஜெனான் தொடங்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு (டி.என்.ஏ)க்களை இந்த நிறுவனம் சேகரித்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதன் முடிவுகள், உடலின் பாதையை ஒழுங்குபடுத்தும் Nav1.7 சோடியம் சேனலுக்கு உரிய SCNP9A என்ற மரபணுவில் ஒரு பொதுவான மாற்றம் இருப்பதை வெளிப்படுத்தியது.

இந்த ஆராய்ச்சி மருந்துதுறைக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்த Nav1.7 சோடியம் சேனலை மருந்து மூலம் தூண்டிவிடமுடியும் என்றால், அதை கொஞ்சம் முடங்க செய்ய மருந்து கொடுத்து, வலியை குறைக்கலாம் அல்லவா? அந்த திசையில் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

"Nav1.7, நமது உடம்பில் ஒன்றுபோல இருக்கும் ஒன்பது சோடியம் சேனல்களில் ஒன்றாகும். இவை, மூளை, இதயம், நரம்பு மண்டலத்தில் செயல்படுகின்றன. எனவே இவற்றில் ஒரு குறிப்பிட்ட சேனலை மட்டுமே தேர்ந்தெடுத்து அந்த திசுக்களில் மட்டுமே மருந்தை செயல்படச் செய்ய வேண்டும். அதற்கு நிறைய எச்சரிக்கை தேவை."

மரபணுவே காரணம்

சி.ஐ.பி நோயாளிகள் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் வெளிவந்தது மற்றொரு முக்கியமான தகவல். RDM12 என்ற மரபணுவே நாள்பட்ட கடுமையான வலிக்கு காரணம் என்பது தெரியவந்தது. இந்த மரபணு முழுமையாக வேலை செய்யாவிட்டால், நாள்பட்ட வலி என்ற பிரச்சனை தொடரும்.

கடுமையான நாள்பட்ட வலியை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்றாலும், அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் கடுமையான வலியை தீர்க்க உதவும், அதேபோல், வலியே உணராதவர்களுக்கு வலியை உணரச் செய்யவும் உதவலாம்.

பிற செய்திகள்:

`பிராண்ட் மருந்து பரிந்துரைகளில் கொள்ளை லாபமீட்டும் பல மருத்துவர்கள்`

ஜி.எஸ்.டியில் பூஜ்ஜியம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என்ன?

'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்