அரசியல் களத்தில் தாக்குப் பிடிப்பாரா ரஜினிகாந்த்?

  • 21 மே 2017

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை புகைப்படம் எடுப்பதற்காக சந்தித்தபோது, மேடைகளில் கூறிய கருத்துகள் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதோ என்ற நீண்ட நாள் சந்தேகத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால், ரஜினிக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அரசியல் அபிலாஷைகள் எத்தகையவை? அவரால் அரசியல் களத்தில் வெற்றிபெற முடியுமா?

உண்மையிலேயே ரஜினிக்கு அரசியல் தொடர்பான ஆசைகளும் திட்டங்களும் இருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் குழப்பமானதுதான்.

கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சில இதழ்களில் இது தொடர்பாக கவர் ஸ்டோரிகளும் வெளியாயின.

சில மாதங்கள் கழித்து, போயஸ் கார்டனில் ரஜினியின் கார் முதல்வரின் வருகைக்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதற்குப் பிறகு 1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் "என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்" என்ற வசனம் இடம்பெற்றது.

ஜெயலலிதாவுக்குப் பதிலடியாகவே இந்த வசனம் இடம்பெற்றதாக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால், ரஜினி இதைப் பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை. இப்படித்தான், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களும் பேச்சுக்களும் துவங்கின.

இதற்குப் பிறகு அதே ஆண்டு வெளியான உழைப்பாளி படத்தில், "நேற்றுக் கூலி, இன்னைக்கு நடிகன், நாளை.." என்று ஒரு வசனம். அதற்குப் பிறகு வெளியான முத்து படத்தில், முத்துவில் "நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.." என்று குறிப்பிட்டார். இந்த வசனத்தை அவர் அரசியல் குறித்து பேசினார் என்று வைத்துக்கொண்டால், இதுவரை சரியான தருணம் அவருக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது என்கிறார் ரஜினிகாந்த் குறித்து சப்தமா, சகாப்தமா புத்தகத்தை எழுதிய அவரது தீவிர ரசிகர்களில் ஒருவரான ரஜினி ராம்கி.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசும் பலரும், அவர் 1996ஆம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அது சரியான கருத்தல்ல என்கிறார் ராம்கி.

"அப்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் களத்தில் இருந்தார்கள். ரஜினி மூன்றாவது ஆளாகத்தான் போட்டியில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது பெரிய வெற்றிடம் இருக்கிறது. மு.க. ஸ்டாலினைத் தவிர பெரிய தலைவர்களே களத்தில் இல்லை. 96ஐவிட இதுவே நல்ல தருணம்" என்கிறார் ராம்கி.

2000களின் மத்தியில் ரஜினிக்கு 46,500 ரசிகர் மன்றங்கள் இருந்தன. ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 10-15 பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. சராசரி ரஜினி ரசிகர்களின் வயது 40-45ஐ எட்டிவிட்டது. இந்த நிலையில் தன் ரசிகர்களை மட்டுமே நம்பி அவர் அரசியலில் இறங்கி அவரால் வெற்றிபெற முடியுமா?

Image caption இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுடன் ரஜினிகாந்த்

"ரஜினியைப் பொறுத்தவரை அவர் தனிக்கட்சியை ஆரம்பித்து காங்கிரஸ், பா.ஜ.க., திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படக்கூடும். ஆனால், எல்லோரும் நினைப்பதைப் போல அவர் தன் ரசிகர்களை மட்டும் நம்பி களத்தில் இறங்கப்போவதில்லை. மத்தியதரவர்க்கத்தினரே அவரது இலக்காக இருப்பார்கள்" என்கிறார் ரஜினி ராம்கி.

ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டவன்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். ஆனால், அரசியலில் இறங்குவது தொடர்பான முடிவை ஆண்டவன் எடுக்க வேண்டுமென ரஜினி பேசுவது இது முதல் முறையில்லை.

1992ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத் திரைத் துறையின் சார்பில் ஒரு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினி, "நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ.. அதே நேரத்தில் ஆண்டவா எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று சொன்னார்.

சினிமா வசனங்களிலும் மேடைகளில் அரசியல் குறித்துப் பேசும்போதும், தன் அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டவன் முடிவுசெய்வான் என்பதே ரஜினியின் முடிவாக இருக்கிறது. தான் எடுக்க வேண்டிய முடிவுகுறித்து தெளிவாக இல்லாத ஒருவர், அரசியலில் ஈடுபட்டு எப்படி சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான்.

இதற்கு முன்பாக, ரஜினி நேரடியாக அரசியலில் தலையிட்ட சில தருணங்கள் இருக்கின்றன. 1996ல் முதல் முறையாக தமிழக அரசியல் குறித்து வெளிப்படையாகப் பேசினார் ரஜினி. ஜெயலலிதா அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ரஜினி, "ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னேன். ஆனால், இனிமே ஆண்டவனே நினைச்சாலும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது" என்றார். இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரித்த தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. இது ரஜினியால் கிடைத்த வெற்றியாக அவருடைய ரசிகர்கள் கருதினார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், அதற்குப் பிறகு, ரஜினியின் "வாய்ஸ்"க்கு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாது. 1998 மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணிக்கு ரஜினி ஆதரவளித்தும், வெற்றிகிடைக்கவில்லை. அதற்குப் பிறகு 2004ல் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று கூறினார். இதை மீறி ராமதாஸ் ஜெயித்தால் அவர் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று கூறினார். பிற தொகுதிகளைப் பற்றி ஏதும் கூறவில்லை. இந்த ஐந்து தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிபெற்றது.

2002ல் ரஜினியின் பாபா திரைப்படம் வெளிவந்தபோது, பாட்டாளி மக்கள் கட்சியினர் காட்டிய எதிர்ப்பின் அடிப்படையிலேயே 2004ல் அக்கட்சியை எதிர்க்க முடிவுசெய்தார் என்பது வெளிப்படை. ஆனால், 90களில் அவர் காட்டிய ஜெயலலிதா எதிர்ப்பிலும் உறுதியாக இல்லை. 2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குவந்த பிறகு, அவரை சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார். ஒரு கட்டத்தில் தைரியலட்சுமி என்றும் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். தன்னுடைய மனமாற்றத்திற்கான காரணங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.

"எப்போதுமே ரஜினியிடம் பொதுப் பிரச்சனைகள் குறித்து தெளிவு இருப்பதாகத் தெரிந்ததில்லை. அவருடைய கருத்துகளிலும் ஒரு தொடர்ச்சியும் இருந்ததில்லை. போர் வந்தால் ரசிகர்கள் வர வேண்டும் என்கிறார். யாரோடு போர் வரும்? ஏற்கனவே இந்த நாட்டில் மதச்சார்பின்மைக்கு எதிரான போர் நடந்துகொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் தொடர்ந்து அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைப்பற்றியெல்லாம் ரஜினி ஒரு போதும் பேசியது கிடையாது" என்று சுட்டிக்காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியருமான விஜயஷங்கர்.

படத்தின் காப்புரிமை Getty Images

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் தங்கள் திரைப்படங்களில் பொது நன்மைக்காக ஒரு எதிரியிடம் மோதுவதுபோல காட்சிகள் பெரும்பாலன படங்களில் வரும். ஆனால், ரஜினியின் திரைப்படங்கள் தனிநபர்களை எதிரிகளாகக் கொண்டவை. அவருடைய அரசியலும் அப்படிப்பட்டதுதான். தன்னுடைய சாதக, பாதகங்களை வைத்தே தன் நிலைப்பாட்டை அவர் முடிவுசெய்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார் விஜயஷங்கர்.

1950ல் பிறந்த ரஜினிகாந்திற்கு தற்போது வயது 67. இப்போதே அரசியலுக்கு வந்தாலும் முதல் தேர்தலாக, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும்போது வயது 69ஆகியிருக்கும். முதல் சட்டமன்றத் தேர்தலின்போது 71 வயதாகியிருக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டவரான ரஜினியால், இம்மாதிரியான மிகப்பெரிய தேர்தல்களை சந்திக்க முடியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

ரஜினியின் வயது, உடல்நிலை ஆகியவை அவருக்கு ஒரு தடையாக இருக்காதா என்ற கேள்வி தேவையற்றது என்கிறார் ராம்கி. "தேர்தல் பிரசாரத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பாக செய்ததைப் போலவே இப்போதும் செய்ய வேண்டியதில்லை. 96லேயே ஒரே ஒரு தொலைக்காட்சி மூலமாக மட்டும்தான் அவர் பேசினார். அதற்குப் பலன் இருந்தது. இப்போதும் அதே போன்ற பாணியே கைகொடுக்கும்" என்கிறார் அவர்.

அப்படியே ரஜினி அரசியலுக்கு வந்தாலும், அவர் தனிக்கட்சி ஆரம்பித்து பா.ஜ.கவோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். அல்லது, பா.ஜ.கவிலேயே சேரலாம் என்பதுதான் பொதுவான புரிதல். ஆனால், தமிழகத்தின் அரசியல் சூழலை தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் இந்த முயற்சிகளில் வெற்றிகிடைக்காது என்பதை அறிவார்கள் என்கிறார் ஆய்வாளரான ராஜன்குறை.

"கட்சி என்றால் கீழ்மட்டம்வரை ஒரு அமைப்பு வேண்டும். எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் அப்படி ஒன்றை துடிப்புடன் வைத்திருந்தார்கள். ஆனால், ரஜினியிடம் அப்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தில் தற்போது, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடம் மட்டுமே அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது. பா.ஜ.கவில் சேர்ந்தால்கூட அவருக்கு வெற்றி கிடைக்காது" என்கிறார் ராஜன் குறை.

Image caption மலேசியப் பிரதமருடன் ரஜினி மற்றும் குடும்பத்தினர்

காவிரி விவகாரம் தவிர, மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ரஜினி கருத்துத் தெரிவித்ததே கிடையாது. "பெரிய பெரிய அரசியல் தலைவர்களே பல பிரச்சனைகளில் கருத்துசொல்வதற்குத் தயங்குகிறார்கள். அம்மாதிரியான சூழலில், ரஜினியைப் போல அரசியலில் நுழையாத ஒருவர் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமென்பதில்லை" என்கிறார் ராம்கி.

ரஜினியின் தற்போதைய பேச்சு, அவருடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கானது. அதற்குமேல் அதில் எதையும் ஆராய வேண்டியதில்லை என்கிறார் விஜயஷங்கர். 1996ஆம் வருட தேர்தலை மனதில் வைத்து, ரஜினி வெற்றிபெறுவார் என்று கணித்தால் அது தவறாக முடியும் என்கிறார் அவர். "அப்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தது. ரஜினி குரல் கொடுக்காவிட்டாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்" என்கிறார் விஜயசங்கர்.

ரஜினி ரசிகர்கள் மத்தியிலான தன்னுடைய பேச்சில், மு.க. ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோர் குறித்து நேர்மறையாகக் குறிப்பிட்டார். திறமையானவர்கள் என்றார். ஆனால், அன்புமணி போன்றவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஏற்பதாக இல்லை. ஆனால், ரஜினி அரசியலில் ஈடுபட்ட பிறகுதான் அவரைப் பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள் சில தலைவர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

"ரசிகர்களைச் சந்தித்தபோது ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்களைக் கவனித்தால் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார் என்றுதான் படுகிறது. அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. அவர் அப்படி அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய நிலைப்பாடுகள் சார்ந்து விமர்சிக்கலாம். இப்போதே அவருடைய நிலைப்பாடு குறித்து ஏதும் சொல்ல முடியாது" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான ஜி. ராமகிருஷ்ணன்.

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துகள் அவருக்கு, அதைப் பற்றி தெளிவான கருத்தோ, திட்டமோ இல்லை என்பதையே காட்டுகிறது. ஆனால், ஆண்டவன்தான் முடிவெடுப்பான் என்ற பதில் அரசியல் களத்தில், தமிழக அரசியல் களத்தில் எடுபடுவதில்லை.

அரசியலில் ஈடுபடுவாரா? ரஜினிகாந்த் சூசகம்

நல்ல தலைவர்கள், ஆனால் அமைப்பு கெட்டுப்போயிருக்கிறது - ரஜினிகாந்த்

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: ஓ.பி.எஸ்

இதையும் பார்க்கலாம், படிக்கலாம்:

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

தொடர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்