மனிதக் கேடய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிக்கு விருது பற்றி சர்ச்சை

  • 23 மே 2017

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில், ஒருவரை மனிதக் கேடயமாக பயன்படுத்தியாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள ஒரு ராணுவ அதிகாரிக்கு, இந்திய ராணுவ படை தலைவரிடம் இருந்து, வீரத்திற்கான பாராட்டை பெறும் ஒரு விருது அளிக்கப்பட்டுள்ளது.

தனது வாகனத்தின் மீது கற்களை வீசும் போராட்டக்கார்களை தடுக்க, மேஜர் லீதுல் கோகி ஒரு உள்ளூர் நபரை ஜீப்பின் முன்பாக கட்டி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, இந்த காணொளி பதிவு வெகுவாக இணையத்தில் பகிரப்பட்டது.

இந்த சம்பவத்துக்கும் அவருக்கு வழங்கப்படும் விருதுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவம் கூறியிருக்கிறது.

''கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் அவரின் தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில்தான் தலைமை ராணுவ தளபதியின் பாராட்டு பெறும் விருது மேஜர் கோகிக்கு கிடைத்துள்ளது,'' என்று ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோகி ஜீப்பில் ஒரு நபரை கட்டிவைத்து சென்றது போன்ற அந்த காணொளி வைரலாகியது. இவ்வாறு கட்டி வைத்ததை மனித நேயமற்ற நடவடிக்கை என்று பலர் விமர்சித்தனர்.

இந்த விவகாரம் குறித்த விசாரணை தொடர்கிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த விருதை ''கேலிக்கூத்து''என்று ஜீப்பில் கட்டிவைக்கப்பட்ட நபரின் சகோதரர் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் பேசிய அந்த நபரின் சகோதரர், ''என் சகோதரர் வெளியே வராமல் ஒரு அறைக்குளேயே இருக்கிறார். இந்த சம்பவம் வேறு எங்காவது நடந்திருந்தால் நீதி வழங்கப்பட்டிருக்கும்,'' என்றார்.

ஒரு இடைத் தேர்தல் நடைபெற இருந்த முயற்சிகளுக்கு இடையில், ஏப்ரல் மாதத்தில் இந்த பகுதியில் புதிய மோதல்கள் நடைபெற்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பாதுகாப்பு படையினர் மீது கோபம் கொண்ட காஷ்மீர் பெண்கள் கற்களை வீசும் காட்சி

பாதுகாப்பு படையினர் மக்கள் கூட்டங்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. படையினர் மீது உள்ளூர் போராட்டக்கார்கள் கற்களை வீசினர்.

காஷ்மீரை சேர்ந்த நபர்கள் ஒரு குழுவாக ஒரு படை வீரரை மோசமாக திட்டியது போன்ற ஒரு காணொளி வைரலாகியது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் காஷ்மீர் மக்களுக்கு எதிரான உணர்வுகள் ஏற்பட ஒரு காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

1989 முதல் இந்தியாவில் ஆட்சிக்கு எதிராக முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சி நடந்துள்ளது.

அதிக வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்த்து போரிடுபவர்கள் போன்றவர்களை சமாளிக்க பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட கடும் , அடக்குமுறை உத்திகள் இந்த சிக்கலை மோசமாக்கியுள்ளன.

தொடர்புடைய கட்டுரைகள்:

பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ராணுவ ஜவான் உமர்

காஷ்மீரின் “கல்வீசும் பெண்கள்” (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்