ராணுவ அதிகாரிக்கு விருது: பீதியின் பிடியில் காஷ்மீர் `மனித கேடயம்'

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், ராணுவ வாகனத்தின் முகப்பில் கட்டப்பட்டு மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட நபர், தன்னை இந்த நிலைக்கு உட்படுத்திய அதிகாரிக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது, தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் முடிவால் அச்சம்: ஃபரூக் அஹமது தர்
படக்குறிப்பு,

ராணுவத்தின் முடிவால் அச்சம்: ஃபரூக் அஹமது தர்

"அந்த அதிகாரி தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது" என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஃபரூக் அஹமது தர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு விருது அறிவித்தது காஷ்மீரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், உயிர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் தான் அவ்வாறு செய்ததாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், ராணுவத்தின் முடிவு தவறானது என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

முன்பு எப்போதும்விட இப்போது அதிக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் காஷ்மீரில் மனித கேடயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவது நியாயப்படுத்தப்படுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் எழுதியுள்ளார்.

உருது மொழி நாளிதழான காஷ்மீர் உஸ்மா, இந்த நடவடிக்கை, வெளிப்படையான எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.

"அந்த அதிகாரியை கெளரவித்திருப்பதன் மூலம், மனித உரிமை மீறலாக இருந்தாலும், நிலைமையை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று காஷ்மீரிகளுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்ப டெல்லி முயற்சித்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறது.

ராணுவத்தின் மீது கல்லெறியும் சம்பவம் உள்பட காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

காஷ்மீரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுகிறது இந்தியா. ஆனால், பாகிஸ்தான் அதை வன்மையாக மறுத்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரி மனோஜ் நிதின் கோகோய், வழக்கமான ராணுவ நடைமுறைகளில் இருந்து விலகி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனது முடிவை நியாயப்படுத்தினார்.

பட மூலாதாரம், @CAPT_AMARINDER

பட மூலாதாரம், @SHEKHARGUPTA

பட மூலாதாரம், @NITINGOKHALE

"உள்ளூர் மக்களைக் காப்பற்றத்தான் நான் அதைச் செய்தேன். நான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். இந்த முடிவின் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறேன்" என்றார் அவர்.

சம்பவம் நடந்தபோது, அப்போதுதான் வாக்களித்துவிட்டு வந்திருந்தால் தர்.

ஜீப்பின் முகப்பில் கட்டப்பட்டு, கிராமங்களில் ஓட்டிச் செல்லப்பட்டார். ராணுவத்தின் மீது கல்லெறிந்தால் அதுதான் கதி என்று காட்டும் வகையில் அச் சம்பவம் நடத்தப்பட்டது.

"வாக்களித்த ஒரு சிலரில் நானும் ஒருவன். இருந்தாலும் நான் தண்டிக்கப்பட்டேன் " என்று அவர் தெரிவித்தார்.

"அந்த அதிகாரிக்கு விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நான் இன்னும் அதிக அச்சத்தில் இருக்கிறேன். இனி அந்த அதிகாரி அதே முகாமுக்குத் திரும்பி வருவார். எனக்கு ஆபத்துத்தான்" என்கிறார் தர்.

"நான் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறேன். அவர் திரும்பி வந்தால் எனது நிலை மோசமாகிவிடும்".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்